என்-னின். உலகத்துப் பல்லுயிரையும் அறியும் வகையாற் கூறப்படுதலை உணர்த்துதல் நுதலிற்று. ஓரறிவுயிராவது உடம்பினானறிவது ; ஈரறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் அறிவது ; மூவறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் அறிவது ; நாலறிவுயிராவது உடம்பினானும் , வாயினாலும் , மூக்கினானும், கண்ணினானும் அறிவது, ஐயறிவாவது உடம்பினானும், வாயினானும் , மூக்கினானும் , கண்ணினானும், செவியினானும் அறிவது ; ஆறறிவுயிராவது உடம்பினானும், வாயினானும் , மூக்கினானும் , கண்ணினானும், செவியினானும், மனத்தினானும் அறிவது இவ்வகையினான் உயிர் ஆறுவகையினான் ஆயின. இவ்வாறு அறிதலாவது ; உடம்பினால் வெப்பம் தட்பம் வன்மை மென்மை அறியும் . நாவினாற் கைப்பு , காழ்ப்பு , துவர்ப்பு , உவர்ப்பு , புளிப்பு , மதுரம் என்பன அறியும் மூக்கினால் நன்னாற்றம் தீயநாற்றம் அறியும். கண்ணினால் வெண்மை, செம்மை, பொன்மை, பசுமை, கருமை, நெடுமை, குறுமை, பருமை, நேர்மை, வட்டம், கோணம், சதுரம் என்பன அறியும். செவியினால் ஓசை வேறுபாடும், சொற்படும் பொருளும் அறியும். மனத்தினாலறியப்படுவது இதுபோல்வன வேண்டுமெனவும். இது செயல் வேண்டுமெனவும், இஃது எத்தன்மையெனவும் அனுமானித்தல். அனுமானமாவது புகை கண்டவழி நெருப்புண்மை கட்புலன் அன்றாயினும் அதன்கண் நெருப்பு உண்டென்று அனுமானித்தல். இவ்வகையினான் உலகிலுள்ளவெல்லாம் மக்கட்கு அறிதலாயின. இனி அவற்றை அறியும் உயிர்களை வருகின்ற சூத்திரங்களாற் கூறுதும். (27)
1. ஒன்று முதல் ஐந்தீறாகிய பொறியுணர்வு மனமின்றியும் பிறப்பன போல வேறு கூறியது என்னையெனின் ஓரறிவுயிர்க்கு மனமின்மையின் அங்ஙனங் கூறினார் என்பது . அதற்கு உயிர் உண்டாயின் மனமின்றாமோ எனின் , உயிருடையவாகிய நந்து முதலாகியவற்றுக்கு செவி முதலாய பொறியின்மை கண்டிலையோ என்பது. அல்லதூஉம் தேன் நெய்யினை நாவின் பொறி உணர்ந்தவழி இன்புற்றும் , கண்ணுள் வார்த்து மெய்யுணர்வு உணர்ந்தவழித்துன்புற்றும் , நறிதாயின மான்மதத்தினை மூக்குணர்வு உணர்ந்த வழி இன்புற்றும் , கண் உணர்வு உணர்ந்தவழி இன்பம் கொள்ளாமையும் வருதலின் அவை பொறி உணர்வெனப்படும் . மன உணர்வும் ஒருதன்மைத்தாகல் வேண்டுமால் எனின் , ஐயுணர்வின்றிக் கனாப்போலத் தானே உணர்வது மனவுணர்வெனப்படும் , பொறி உணர்வு மனமின்றிப் பிறவாதெனின் முற் பிறந்தது மனவுணர்வாமாகவே பொறி உணர்வென்பது ஓர் அறிவின்றாகியே செல்லும் என்பது .(தொல். பொருள். 582. பேரா.)
|