மரபியல்

572புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

ஓரறிவுயிராமாறு புல்லும் மரனும் என்று சொல்லப்பட்ட இருவகை உடம்பினாலறியும்; அக்கிளைப்பிறப்பு பிறவும் உள என்றவாறு.

பிறஆவன கொட்டியுந் தாமரையுங் கழுநீரும் என்பன.

புல்லென்பது புறவயிர்ப்பு உடையன; மரமென்பது அகவயிர்ப்புடையன, அவையாமாறு முன்னர்க் கூறப்படும்.

(28)