என்-னின், ஐயறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று. நாற்கால் விலங்கும் புள்ளும் ஐயறிவுடைய ;அக்கிளைப் பிறப்பு பிறவும் உள என்றவாறு. பிற ஆவன தவழ்வனவற்றுள் பாம்பு முதலாயினவும் நீருள் வாழ்வனவற்றுள் மீனும் முதலையும் ஆமையும் முதலாயினவுங் கொள்ளப்படும். (32)
1. மா என்பன- நாற்கால் விலங்கு. மாக்கள் எனப்படுவார் மன உணர்ச்சி இல்லாதார், கிளை என்பன எண்கால் வருடையும் குரங்கும் போல்வன. எண்காலவாயினும் மாவெனப் படுதலின் வருடை கிளையாயிற்று. குரங்கு நாற்காலவாகலின் கிளையாயிற்று. (தொல். பொருள். 587. பேரா.) 2. (பாடம்) மாக்களும்.
|