என்-னின், ஆறறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று. மக்கள் ஆறறிவுயிரெனப்படுவர்;அக்கிளைப் பிறப்பு பிறவுமுள என்றவாறு. பிறவாவது தேவர்,அசுரர் , இயக்கர் முதலாயினோர். (33)
1. முப்பத்திரண்டு அவயவத்தான் அளவிற்பட்டு அறிவொடு புணர்ந்த ஆடுஉ மகடுஉ மக்கள் எனப்படும், அவ்வாறு உணர்விலும் குறைவுபட்டாரைக் குறைந்தவகை அறிந்து முற்கூறிய சூத்திரங்களானே அவ்வப் பிறப்பினுள் சேர்த்திக்கொள்ளவைத்தான் என்பது. அவை ஊமும் செவிடும் குருடும் போல்வன. கிளை யெனப்படுவார் தேவரும் தானவரும் முதலாயினார். பிறப்பு என்றதனால் குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன எனப்படும் மன உணர்வு உடையன உளவாயின் அவையும் ஈண்டு ஆறறிவுயிராய் அடங்கும் என்பது. தாமே, எனப் பரித்துக் கூறினமையான் நல்லறிவுடையார் என்றற்குச் சிறந்தார் என்பதும் கொள்க. (தொல். பொருள். 588. பேரா.)
|