குரங்கு முதலாயின மூன்றும் பெண்பால் மந்தி என்னும் பெயர்பெறும் என்றவாறு. இத்துணையுங் கூறப்பட்டன பெண்பாற் பெயராவன; யானையுட் பெண் பிடி; ஒட்டகம் - பெட்டை; குதிரை - பெட்டை; கழுதை - பெட்டை; மரை - பெட்டை, நாகு. ஆ: புள்ளு - பெட்டை, பேடை, பெடை; கோழி - அளகு; கூகை; மயில் - அளகு; புல்வாய் - பிணை, பிணா, பிணவு, பிணவல், நவ்வி - பிணை: உழை; கவரி - பிணை; பன்றி - பிணவு, பிணவல், பாட்டி; நாய் - பிணவு, பிணவல், பாட்டி ; பெற்றம் - ஆ; நாகு; எருமை - ஆ, நாகு; மக்கள் - பெண்; பிணவு; நந்து - நாகு; ஆடு - மூடு, கடமை; நரி - பாட்டி; குரங்கு - முசு; ஊகம், மந்தி எனவரும். இதனுள் எடுத்தோதாதன சான்றோர் செய்யுளகத்துக் கண்டுகொள்க. வழக்கினுள்ளும் வந்தவாறு கண்டுகொள்க. (68)
|