வேலன் முதலாக வெட்சித்திணைக்குரிய துறை கூறினார்; இனி அதற்குமாறாகிய கரந்தைத்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அதுவும் ஆநிரை மீட்டல் காரணமாக அந் நிலத்தின்கண் நிகழ்வதாகலின் வெட்சிப்பாற்பட்டுக் குறிஞ்சிக்குப் புறனாயிற்று. (இ-ள்) வெறியாட்டயர்ந்த காந்தளும் என்பது முதலாகத் தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் என்பது ஈறாகச் சொல்லப்பட்ட பதின்மூன்று துறையும் காட்சி முதலாக வாழ்த்தல் ஈறாகக் கல்லொடு புணர்த்துக் கூறும் துறையொடுங் கூடச் சொல்லப்பட்ட இருபத்தொரு துறைத்து. வெறி அறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் - வெறி ஆடுதலை அறியும் சிறப்பினையுடைய வெவ்விய வாயினையுடைய வேலன் வெறியாடிய காந்தளும். காந்தளென்பதனை மடலேறுதற்குப் பெயராகக் கூறுவாருளராகலின், வெறியாட்டு அயர்ந்த காந்த ளென்றார். அன்றியும், காந்தள் என்பது மடலேறுதலான் அத்துணை ஆற்றாளாகிய பெண்பால்மாட்டு நிகழும் வெறி. 'காந்தள்' எனவும் பெயராம். இதனானே காமவேட்கையின் ஆற்றாளாகிய பெண்பாற் பக்கமாகிய வெறியும், அந் நிலத்துள்ளார் வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும். இவ்வெறி இந் நிலத்திற்குச் சிறந்தமை அறிக. இது வெட்சிப் பின்னர் வைத்தார் பெரும்பான்மையும் குறிஞ்சி பற்றி நிகழுமாகலின். உதாரணம்"வெய்ய நெடிதுயிரா வெற்பன் அளிநினையா ஐய நனிநீங்க ஆடினாள் - மையல் அயன்மனைப் பெண்டிரொடு அன்னைசொல் அஞ்சி வியன்மனையுள் ஆடும் வெறி" (புறப்.இருபாற்பெருந்திணை. 10) இது காமவேட்கை தோற்றாமல் தலைமகள் தானே முருகுமேல் நிறீஇ ஆடியது. வென்றி வேண்டியாடுதற்குச் செய்யுள் சிலப்பதிகாரத்து வேட்டுவவரியுட் கண்டுகொள்க. இனி வேலன்தானே ஆடியதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. உறு பகை வேந்து இடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ் போந்தை வேம்பு ஆர் என வரும் மா பெருந் தானையர் மலைந்த பூவும் - மிக்கபகை வேந்தன் வேறுபாடு தெரிதல் வேண்டி உயர்ந்த புகழையுடைய போந்தை யெனவும் வேம்பெனவும் ஆரெனவும் தமிழ்நாட்டு நிலவேந்தர் சூடிய பூவும். உதாரணம்"குடையலர் காந்தட்டன் கொல்லிச் சுனைவாய்த் தொடையவிழ் தண்குவளை சூடான் - புடைதிகழுந் தேரதிரப் பொங்குந் திருந்துவேல் வானவன் போரெதிரிற் போந்தையாம் பூ". (புறப்.பொது.1) இது சேரன் பூ."தொடியணிதோள் ஆடவர் தும்பை புனையக் கொடியணிதேர் கூட்டணங்கும் போரின் - முடியணியும் காத்தல்சால் செங்கோல் கடுமான் நெடுவழுதி ஏத்தல்சால் வேம்பின் இணர்". (புறப்.பொது.2) இது பாண்டியன் பூ."கொல்களிறு ஊர்வர் கொலைமலி வாள்மறவர் வெல்கழல் வீக்குவர் வேலிளையர் - மல்குங் கலங்கல் ஒலிபுனல் காவிரி நாடன் அலங்கல் அமரழுவத் தார்." (புறப்.பொது.9) இது சோழன் பூ.நிரைகோள் கேட்டவழி நெடுநில வேந்தரும் கதுமென எழுவராதலின், நிரை மீட்டலின்கண் பூப் புகழப்பட்டது. வாடா வள்ளி - வாடுதல் இல்லாத வள்ளி. 'வள்ளி' என்பது ஒருகூத்து; அஃது அந்நிலத்தின் நிகழ்தலின் வாடா வள்ளி, என்றார். உதாரணம் வந்த வழிக் கண்டுகொள்க. வயவர் ஏத்திய ஓடா கழல் நிலை - வீரராற் புகழப்பட்ட கெடாத கழல் நிலை. உதாரணம்" வாள் அமரின் முன்விலக்கி வாள்படர்வார் யார்கொலோ கேளலார் நீக்கிய கிண்கிணிக்கால் - காளை கலங்கழல் வாயில் கடுத்தீற்றி அற்றால் பொலங்கழல் கான்மேல் புனைவு." (புறப்.பொது.7) ஓடா உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும் - ஓடாத வெகுண்ட வேந்தரைச்சாத்திய உன்ன நிலையும். 'உன்னம்' என்பது மரம். அது தன் நாட்டகத்துக் கேடுவருங்கால் உலறியும், வாராத காலம் குழைந்தும் நிற்கும். உதாரணம்"துன்னருந் தானைத் தொடுகழலான் துப்பெதிர்ந்து முன்னர் வணங்கார் முரண்முருங்க - மன்னரும் ஈடெலாந் தாங்கி இகலவிந்தார் நீயுநின் கோடெலா முன்னங் குழை " (புறப்.பொது.4) பிறவும் நிமித்தமாகி வருவன வெல்லாவற்றிற்கும் இதுவே துறையாகக் கொள்க. மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின் தாவா விழு புகழ் பூவை நிலையும் - மாயோனைப் பொருந்திய நிலைபெற்ற பெருஞ்சிறப்பினையுடைய கெடாத விழுப்புகழைப் பொருந்திய பூவை நிலையைக் கூறுதலும். பூவை மலர்ச்சியைக் கண்டு மாயோன் நிறத்தை ஒத்ததெனப்புகழ்தல். நாடெல்லை காடாதலின், அக் காட்டிடைச் செல்வோர் அப்பூவையைக் கண்டு கூறுதல். உன்னம் கண்டு கூறினார் போல இதுவும் ஒரு வழக்கு. உதாரணம்பூவை விரியும் புதுமலரில் பூங்கழலோய் யாவை விழுமிய யாமுணரேம் - மேவார் மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை நிறத்தொடு நேர்தருத லான். " (புறப்.பாடாண்.3) இஃது உரையன்றென்பார், மாயோன் முதலாகிய தேவர்களோடு உவமித்தலே பூவைநிலை யென்ப. உதாரணம்" இந்திரன் என்னின் இரண்டேகண் ஏறூர்ந்த அந்தரத்தான் என்னின் பிறை இல்லை - அந்தரத்தின் கோழியான் என்னின் முகன் ஒன்றே கோதையை ஆழியான் என்றுணரற் பாற்று. '' (முத்தொள்ளாயிரம்) வேறு கடவுளரை நோக்கி உவமித்து வருபவையெல்லாம் பூவை நிலையாகக் கொள்க. என்னை? "ஏற்றூர்தி யானும் இகல்வெம்போர் வானவனும் ஆற்றலும் ஆள்வினையும் ஒத்தொன்றின் ஒவ்வாரே கூற்றக் கணிச்சியான் கண்மூன்று இரண்டேயாம் ஆற்றல்சால் வானவன் கண்" (முத்தொள்ளாயிரம்) என முத்தொள்ளாயிரத்து வந்தவாறு காண்க. பிறவும் அன்ன. பூவைநிலையும் அந் நிலத்தின் தெய்வமாகிய கருப்பொருளாதலின், அதன்மேல் வந்தது. ஆர் அமர் ஓட்டலும் - அரிய அமரைப் போக்குதலும்; உதாரணம்" புலிக்கணமுஞ் சீயமும் போர்க்களிறும் போல்வார் வலிச்சினமும் மானமுந் தேசும் - ஒலிக்கும் அருமுனை வெஞ்சுரத் தான் பூசற் கோடிச் செருமலைந்தார் சீற்றஞ் சிறந்து. " (புறப்-கரந்தை.4) ஆபெயர்த்துத்தருதல் - நிரை மீட்டல். உதாரணம்"அழுங்கல்நீர் வையகத்து ஆருயிரைக் கூற்றம் விழுங்கியபின் வீடுகொண் டற்றால் - செழுங்குடிகள் தாரார் கரந்தை தலைமலைந்து தாங்கொண்டார்4 நேரார்கைக் கொண்ட நிரை" (புறப்.கரந்தை.1) எனவும், "ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த வல்வில் மறவர் ஒடுக்கங் காணாய் செல்லல் செல்லல் சிறக்கநின் உள்ளம் முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத் தாவுபு தெறிக்கு5 மான்மேற் புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே. " (புறம்- 259) எனவும் வரும்.சீர்சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும் - சீர்மை பொருந்திய வேந்தனது மிகுதியை எடுத்துக் கூறலும். உதாரணம்அங்கையுள் நெல்லி அதன்பயம் ஆதலால் கொங்கலர் தாரான் குடை நிழற்கீழ்த் - தங்கிச் செயிர் வழங்கும் வாளமருள் சென்றடையார் வேல்வாய் உயிர்வழங்கும் வாழ்க்கை உறும் " (புறப்.கரந்தை 31) இது மற்றுள்ள திணைக்கும் பொது. தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் - தன்மாட்டுள்ள போர்வலி முயற்சியினாலே கொடுஞ் சொற்களைத் தன்னொடு புணர்த்திக் கூறுதலும். உதாரணம்"ஆளமர் வெள்ளம் பெருகின் அதுவிலக்கி வாளொடு வைகுவேம் யாமாக-நாளுங் கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோய் ஈயப் பிழிமது உண்பார் பிறர்." (புறப்.கரந்தை.11) இது மற்றுள்ள திணைக்கும் பொது. வரு தார் தாங்கல் வாள் வாய்த்து கவிழ்தல் என்று இருவகைப்பட்ட பிள்ளை நிலையும்- மேல் வருகின்ற கொடிப்படையைத் தாங்கலும் வாள் வாய்த்தலாற் படுதலும் என இரண்டு வகைப்பட்ட பிள்ளை நிலையும். உதாரணம்"பிள்ளை கடுப்பப் பிணம்பிறங்க வாள்எறிந்து கொள்ளைகொள் ஆயந் தலைக்கொண்டார்-எள்ளிப் பொருதழிந்து மீளவும் பூங்கழலான் மீளான் ஒருதனியே நின்றான் உளன்". (புறப்.கரந்தை.7) இது வருதார் தாங்கல். "உரைப்பின் அதுவியப்போ ஒன்னார்கைக் கொண்ட நிரைப்பின் நெடுந்தகை சென்றான் - புரைப்பின் றுளப்பட்ட வாயெல்லாம் ஒள்வாள் கொளவே களப்பட்டான் சென்றான்7 கரந்து". (புறப்.கரந்தை.6) இது வாள் வாய்த்துக் கவிழ்தல். வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடு அவர்க்கு அருளிய பிள்ளையாட்டும் - வாளான் மாறுபட்டு எழுந்தவனை மகிழ்ந்து பறை ஒலிப்ப அவற்குத் துறக்கமாகிய நாட்டை அளித்த பிள்ளையாட்டும். உதாரணம்"மாட்டிய பிள்ளை மறவர் நிறந்திறந்து கூட்டிய எஃகங் குடர்மாலை - சூட்டியபின் மாறுஇரியச் சீறி நுடங்குவாள் கைக்கொண்ட வேல்திரிய விம்முந் துடி". (புறப்.கரந்தை.9) காட்சி - (போர்க்களத்துப் பட்ட வீரரைக் கல்நிறுத்தற் பொருட்டுக் கற்) காண்டல். உதாரணம்மிகையணங்கு மெய்ந்நிறீஇ மீளி மறவர் புகையணங்கப் பூமாரி சிந்திப் - பகையணங்கும் வீளைக் கடுங்கணையால் வேறாகி விண்படர்ந்த காளைக்குக் கண்டமைத்தார் கல். (புறப்.பொது.8) கல்கோள் - (அவ்வாறு காணப்பட்ட) கல்லைக் கைக்கோடல் உதாரணம்"பூவொடு நீர்தூவிப் பொங்க விரைபுகைத்து நாவுடை நன்மணி நன்கியம்ப - மேவார் அழன்மறம் காற்றி அவிந்தாற்கென் றேத்திக் கழன்மறவர் கைக்கொண்டார் கல்." (புறப்.பொது.9) நீர்ப்படை - (அக் கல்லை) நீர்ப்படுத்தல். உதாரணம்"காடு கனற்றக்8 கதிரோன் சினஞ்சொரியக் கூடிய வெம்மை குளிர்கொள்ளப் - பாடி நயத்தக மண்ணி நறுவிரை கொண்டாட்டிக் கயத்தகத்து உய்த்திட்டார் கல்". (புறப்.பொது.15) நடுதல் - (அக்கல்லை) நடுதல். உதாரணம்"மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப் பீலி அணிந்து பெயர் பொறித்து - வேலமருள் ஆண்டக நின்ற அமர்வெய்யோற்கு இஃதென்று காண்டக நாட்டினார் கல்." (புறப்.பொது.12) சீர்தகு மரபின் பெரும்படை - மிகவுந் தக்க மரபினையுடைய பெரும்படையினும். அஃதாவது, நாட்டிய கல்லிற்குக் கோட்டஞ்செய்தல். அஃது இற்கொண்டு புகுதலென உரைத்த துறை. [கோட்டம் - கோயில், படை - படைத்தல்.] உதாரணம்"வாட்புகா ஊட்டி வடிமணி நின்றியம்பக் கோட்புலி அன்ன குரிசில்கல் - ஆட்கடிந்து விற்கொண்ட வென்றி வியன்மறவர் எல்லாரும் இற்கொண்டு புக்கார் இயைந்து." (புறப்.பொது.14) வாழ்த்து - (அக் கல்லைப்) பழிச்சுதல். உதாரணம் "அடும்புகழ் பாடி அழுதழுது ஆற்றாது9 இடும்பையுள் வைகி இருந்த - கடும்பொடு கைவண குரிசில்கல் கைதொழுது10 செல்பாண தெய்வமாய் நின்றான் திசைக்கு". (புறப்.பொது.13) இவை யெல்லாம் கரந்தைக்கு உரித்தாக ஓதப்பட்டனவேனும், "ஒருபாற் கிளவி ஏனைப்பாற் கண்ணும், வருவகை தானே வழக்கென மொழிப" [பொருளியல் - 28] என்றதனான், மறத்துறை ஏழிற்கும் கொள்ளப்படும்.ஈண்டு ஓதப்பட்ட இருபத்தொரு துறையினும் நிரை மீட்டற் பொருண்மைத்தாகிக் கரந்தையென ஓதப்பட்டன ஏழாயின . கரந்தையாயினவாறு என்னையெனின், வெறியாட்டும் வள்ளிக்கூத்தும் மலைசார்ந்த இடத்து வழங்குதலின், வந்த நிலத்திற்கு உரிய பொருளாகி வந்தன. பூவை நிலையும் அந்நிலத்தைச் சார்ந்து வருவதொரு தெய்வமாதலின், அந்நிலத்தின் கருப்பொருளாகி வந்தது. கற்கோள் நிலையாறும் உன்ன நிலையும் முடியுடைய வேந்தர் சூடும் பூவும் கழல் நிலையும் ஏனையவற்றிற்கும் பொதுவாகலான்; எடுத்துக்கொண்ட கண்ணே கூறுதல் இலக்கணமாதலின் ஈண்டு ஓதப்பட்டதென உணர்க. பன்னிரு படலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சிலதுறை கூறினாராகலின், புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறையாகலின், அஃது இவர்க்கு மாறாகக் கூறலும் மயங்கக் கூறலுமாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக்கூறலும் குன்றக்கூறலும் மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக்காட்டின் பெருகுமாதலான், உய்த்துணர்ந்து கண்டுகொள்க. இத்துணையும் கூறப்பட்டது வெட்சித்திணை. (5)
(பாடம்) 1. அனைக்குரி. 2.கால்கோள். 3. நடுகல். (பாடம்) 4. தாங்கோடல். 5. செறிதரு. (பாடம்) 6. கவரக் 7. தோன்றான். (பாடம்) 8. கனலக். 9. நோனாது. 10.கைதொழூஉச்.
|