மரபியல்

633இலையே முறியே தளிரே தோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனையே உள்ளுறுத் தனையவை யெல்லாம்
மரனொடு வரூஉங் கிளவி1 என்ப.

இலை முதலாகச் சொல்லப்பட்ட உறுப்புப்பெயர் மரத்துக்கு அங்கமாம் என்றவாறு.

இதனானே புறவயிர்ப்பும் உள்வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் ஒரு சாரன இவ்வுறுப்புப்பெயர் உடையன மரமெனப்படுமென்று கொள்க.

அவையாவன; முருக்கு தணக்கு முதலாயின.

(89)

1. `மரனொடு வரூஉம் கிளவி' என மிகைபடக் கூறியது என்னையெனின், அம்மிகையானே எடுத்தோதிய புறக்காழனவும் அகக்காழனவுமன்றி அவற்றோடு தழீஇக் கொள்ளப்படுவனவும் எல்லாம் இவற்றுக்கு உரிய என்பது கொள்க. அவை ஊகம் புல்லும் சீழகம்புல்லும் பஞ்சாய் முதலியனவும் புழற்கால் ஆம்பல் முதலியனவும் புல்லெனப்பட்டு அடங்கி அவற்றின் பெயரும் பெறும் என்பது. (தொல்.பொருள்.642.பேரா.)