என்-னின் மேற் செய்யுளியலுள் தோற்றுவாய் செய்தநூலை இலக்கணவகையான் உணர்த்துதல் நுதலிற்று. மரபாவது நூற்கு இன்றியமையாத இயல்பு. அவ்வியல்பு திரியாத மரபுடைத்தாகி உரைக்கப்படும் நூல்தாம் இருவகைய; முதனூல் எனவும் வழிநூல் எனவும் என்றவாறு. உரைக்கவென்பது விகாரத்தால் தொக்கது. அது வருகின்ற சூத்திரத்தாற் கூறுப. சார்புநூல் என்பதும் ஒன்றுண்டாலெனின் , அஃது இருவர் ஆசிரியர் கூறியவதற்கு உடம்பட்டு வருதலின் அதுவும் வழிநூலென அடங்கும் எதிர்நூல் என்பதும் ஒன்றுண்டு. அதுவும் ஒரு முனைவனாற் செய்யப்படின் முதனூலாம்; பிறர் செய்யின் வழங்காது. (95)
|