இது, வஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வஞ்சி முல்லையது புறன் - வஞ்சியாகிய புறத்திணை முல்லையாகிய அகத்திணைக்குப் புறனாம், எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித்தன்று - அஃது ஒழியாத மண்ணை நச்சுதலையுடைய வேந்தனை மற்றொரு வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித்தது. ஒழியாத மண்ணை நச்சுதலாவது, வேண்டிய அரசர்க்குக் கொடாமை. "அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்,புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்." [புறத். 1] என்பதனைக் கொணர்ந்து உரைத்துக்கொள்க. இவ்வுரை இனி வருகின்ற திணைக்கும் ஒக்கும்.அதற்கு இது புறனாகியவாறு என்னையெனின், "மாயோன் மேய காடுறை யுலகமும்' [அகத். 5] கார்காலமும் முல்லைக்கு முதற்பொருளாதலானும், பகைவயிற் சேறலாகிய வஞ்சிக்கு நிழலும் நீருமுள்ள காலம் வேண்டுதலானும், பருமரக் காடாகிய மலைசார்ந்த இடம் ஆகாமையானும் அதற்கு இது சிறந்த தென்க. அன்னதாகல் முல்லைப்பாட்டினுள், "கான்யாறு தழீஇய அகல்நெடும் புறவில் சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக் காட்ட இடுமுட் புரிசை ஏமுற வளைஇப் படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி" (முல்லைப். 24-28) என்பதனாலும் அறிக.
1."எஞ்சா-தன்றே" என்பது முடியத் தனிச் சூத்திரம் ஆக்குவர். (நச்சி).
|