மரபியல்

640வினையின்1 நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்.
என்-னின் நிறுத்த முறையானே முதனூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

சூத்திரத்தாற் பொருள் விளங்கும்.

(96)

1. வினை என்பன இருவினை. `இன்' நீக்கத்துக்கண் வந்தது. `விளங்கிய அறிவு 'என்பது முழுதும் உணரும் உணர்ச்சி. அறிவின் என நின்ற 'இன்' சாரியை இன்ன அறிவினொடு கூடிய முனைவன் அறிவின் முனைவன் எனப்படும். முன்னோனை முனைவன் என்பது ஓர் சொல் விழுக்காடாம். (தொல்.பொருள்.649.பேரா)

முனைவனால் செய்யப்படுவதோர் நூல் இல்லை என்பார் அவன் வழித்தோன்றிய நல்லுணர்வுடையார் அவன்பால் பொருள்கேட்டு முதனூல் செய்தார் எனவும் அம்முனைவன் முன்னர் ஆகமத்துப்பிறந்தோர் மொழியைப்பற்றி அனைத்துப் பொருளுங்கண்டு பின்னர் அவற்றவற்றுக்கு நூல் செய்தார் அவர் எனவும் அவ்வாகமத்தினையே பிற்காலத்தாரும் ஒழுக்கம் வேறுபடுந்தோறும் வேறுபடுத்து வழிநூலும் சார்பு நூலும் எனப் பலவுஞ் செய்தார் எனவும் கூறுப. அவை எவ்வாற்றானும் முற்ற உணர்ந்தோர் செய்தநூல் அன்மையின் அவை தேறப்படா.... அவை தமிழ்நூல் அன்மையின் ஈண்டு ஆராய்ச்சி இல என்பது.

மற்று மேலைச்சூத்திரத்து நுதலிய நெறியானே முதலும் வழியுமாமெனவே எல்லார்க்கும் முதல்வனாயினான் செய்தது முதனூலேயாமென்பது பெரிதுமாகலின், ஈண்டு இச்சூத்திரங் கூறியதென்னையெனின் தாமே தலைவராவாரும் அத்தலைவரை வழிபட்டுத் தலைவராயினாரும் பலராதலின் தாமே தலைவராயினார். நூல்செய்யின் முதனூலாவதெனின் அற்றன்று தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்திலகாரலின் தலைவர் வழிநின்று தலைவனாகிய அகத்தியனால் செய்யப்பட்டதும் முதனூல் என்பது அறிவித்தற்கும், பிற்காலத்துப் பெருமான் அடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலாவதென்பது அறிவித்தற்கும், அங்ஙனம் 'வினையினீங்கி விளங்கிய அறிவினான் ' முதனூல் செய்தான் என்பது அறிவித்தற்கும் இது கூறினான் என்பது. எனவே அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன்வழி நூலென்பதூஉம் பெற்றாம்.(தொல்.பொருள்.649.பேரா.)