மரபியல்

644ஒத்த1 சூத்திரம் உரைப்பிற் காண்டிகை
மெய்ப்படக் கிளந்த வகைய தாகி
ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின்
முப்பத் திருவகை உத்தியொடு புணரின்
நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர்.
என்-னின், நூற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இனி, ஒத்த சூத்திரத்தானும் காண்டிகையானும் பொருண்மேற் கூறிய வகையுடைத்தாகிப் பத்துக்குற்றமும் இன்றி நுண்ணிதாகிய முப்பத்திரண்டு வகைப்பட்ட தந்திரவுத்தியோடு புணருமாயின் நூலெனச் சொல்லுவர் புலவர் என்றவாறு.

உரைப்பின் என்பதனை முன்னே கூட்டி நூலுரைப்பின் எனப் பொருளுரைக்க, அவையாமாறு முன்னர்க் காட்டுதும்.

(100)

1. ஒத்த சூத்திரம் என்றதனான் நூலின் வேறாகிய இருவகைப்பாயிரமும் சூத்திரத்தோடு ஒத்த இலக்கணத்த என்பது கொள்க. உரைப்பின் என்றதனான் `உண்ணின்றகன்ற உரையொடு பொருந்தி' வருதலை நூல் இலக்கணம் எனச் செய்யுளியலுள் கூறிப்போந்தாம். அங்ஙனம் வேறாகிப் பொருந்திவரும் எனப்பட்ட உரையின்றிச் சூத்திரத்தானே பொருள் நிகழ்ந்தகாலமும் உண்டென்பதாம்.

`ஒத்த' என்றதனால் பொதுப்பாயிரமும், சிறப்புப் பாயிரமும் சூத்திரமும் தம்மின் வேறு என்றலும், அவ்விருவகைப் பாயிர உரையும் சூத்திர உரையும் வேறு எழுதப்படும் என்றலும், சூத்திர உரையுள் பாயிர உரை மயங்கிவருவன உள என்றலும், அவ்விருவகை உரைக்கும் வேறாயினும் அவ்வுரை செய்தான் பெயர் கூறுதல் முதலாகிய பாயிர உரை கூற அமையும் என்றலும், சூத்திரம்தானே பாயிரம் இல்லாதவழிப் பாயிரம் போல நூல்முகத்து நிற்குமென்றலும், அங்ஙனம் நின்றவழிப் பொதுப்பாயிரம் சிறப்புப் பாயிரமும் உரை வகைத்தால் பெய்துரைத்தலும், அவ்விருவகைப் பாயிரமும் செய்தார் இன்னார் என்றலும் என்று இன்னோரன்ன கோடலாயிற்று.

`வடவேங்கடந் தென்குமரி' என்னும் சிறப்புப்பாயிரம் செய்தார் பனம்பாரனார் எனவும் `வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்' என்னும் பொதுப்பாயிரம் செய்தான் ஆத்திரையன் பேராசிரியன் எனவும் பாயிரம் செய்தான் பெயர் கூறியவாறு. (தொல். பொருள். 653. பேரா.)