இதுவுமது. சூத்திரத்தின் முன்னர் உரையை விரித்துரைக்கு மிடத்துஞ் சூத்திரப்பொருள் விளங்கக் காண்டிகை புணர்க்கு மிடத்தும் ஆசிரியன் இப்பொருள் இவ்வாறு கூறல்வேண்டுமென விதித்தலும் இப்பொருள் இவ்வாறு கூறப்பெறானென விலக்கலுமாகிய இருவகையோடே கூடப் பொருந்தினவவை ஆராய்ந்து புணர்க்கவும் ஆம் என்றவாறு. இதனாற் சொல்லியது ஆசிரியன் சொன்ன சூத்திரத்தினைக் குறை படக் கூறினானென்றல் அமையாமையானும் அவன் கூறுகின்ற பொருளினை நிலைபெறுத்தற்குப் பிறிதொன்றை விரித்தோதிய நெறியை விலக்கியும் பொருள் உரைத்துக் கொள்ளப்படுமென்றவாறு. செய்யுளியலுள், நூலெனப் படுவது நுவலுங் காலை முதலும் முடிவும் மாறுகோ ளின்றித் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே. (செய்யுளியல்.159) என்று கூறுதலின் இதுவும் இலக்கணமாகக் கொள்க. (101)
1. அஃதாவது காண்டிகைப்பகுதி இரண்டற்கும் விடுத்தலும் விலக்கலும் உடையோர் குறிப்பினாற் கொள்ளவைத்தலும் ஒழிந்த உரையிரண்டன் கண்ணும் அவை கூற்றினாற் கொள்ளவைத்தலும் என உணர்க. (தொல். பொருள். 653. பேரா.) 2. (பாடம்) படுமே.
|