மரபியல்

646மேற்கிளந் தெடுத்த யாப்பினுட் பொருளொடு
சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச்
சொல்லுங் காலை உரையகத் தடக்கி
நுண்மையொடு புணர்ந்த1 ஒண்மைத் தாகித்
துளக்கல் ஆகாத் துணைமை யெய்தி
அளக்கல் ஆகா அரும்பொருட் டாகிப்
பல்வகை யானும் பயன்தெரி புடையது
சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர்.
என்-னின், நூற்கு அங்கமாகிய சூத்திரத்திலக்கணம் உணர்த்தல் நுதலிற்று.

மேல் தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து அதர்ப்படயாத்தல் என நால்வகையினும் சொல்லப்பட்ட பொருளோடு, சிலவெழுத்தினான் இயன்ற செய்யுட்டாகி, உரைக்குங்காலத்து அவ்வுரையிற் பொருளெல்லாம் தன்னகத்தடக்கி , நுண்ணிய பொருண்மையொடு பொருந்திய விளக்கமுடைத்தாகி , கெடுக்கலாகாத துணைச் சூத்திரங்களையுடைத்தாகி யுடைத்தாகி வரையறுக்கப்படாத அரிய பொருளையுடைத்தாகிப் பலவாற்றானும் பயனையாராய்தல் உடையது சூத்திரம் எனக் கூறினார் புலவர் என்றவாறு.

அளக்கலாகா அரும்பொருளாவது பலமுகத்தானும் பொருள் கொள்ளக்கிடத்தல்.

செய்யுளியலுள் ,

சூத்திரந்தானே
ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுத லின்றிப் பொருள்நனி விளங்கி
யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே.

(செய்யுளியல் .162)

என்பதூஉம் இதற் கிலக்கணம்.

(102)

1. தொகை மரபினுள்ளும் உயிர் மயங்கியலினுள்ளும் புள்ளி மயங்கியலினுள்ளும் புணரியலினுள்ளும் பரந்துபட்ட பொருளினை நுழைந்து வாங்கிக்கொள்ள வைத்தமையின் நுண்மையொடு புணர்ந்ததூஉமாயிற்று. இச்சூத்திரம் பொருள் உரைத்தவழியும் வெள்ளிதன்றி உள்ளுடைத்தாகலின் நுண்மை உடைத்தெனவும் பட்டது. (தொல். பொருள். 655. பேரா.)