புறத்திணை இயல்

65இயங்குபடை அரவம் எரிபரந்து எடுத்தல்
வயங்கல் எய்திய பெருமை யானும்
கொடுத்தல் எய்திய கொடைமை யானும்
அடுத்தூர்ந்து அட்ட கொற்றத் தானும்
மாராயம் பெற்ற நெடுமொழி யானும்
பொருள் இன்று உய்த்த பேராண் பக்கமும்
வருவிசைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை யானும்
பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும்
வென்றோர் விளக்கமுந் தோற்றோர் தேய்வும்
குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும்
அழிபடை தட்டோர் தழிஞ்யொடூ தொகைஇக்
கழிபெருஞ் சிறப்பின் துறைபதின் மூன்றே.

இது, வஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) இயங்குபடை அரவம் முதலாகத் தழிஞ்சியொடு கூடச் சொல்லப்பட்ட பதின்மூன்றும் வஞ்சித்துறையாம் என்றவாறு.

'பெருமை யானும்' என்பது முதலாக வந்த 'ஆன்' எல்லாம் இடைச்சொல்லாகி வந்தன. இயங்குபடை அரவம் எரிபரந்தெடுத்தல் என்பதன்கண் உம்மை தொக்கு நின்றது.

படை இயங்கு அரவம் - படையெழும் அரவம்.

உதாரணம்

"சிறப்புடை மரபின் பொருளு மின்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
இருகுடை பின்பட ஓங்கிய ஒருகுடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க
நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்
பாசறை யல்லது நீஒல் லாயே
நுதிமுக மழுங்க மண்டி ஒன்னார்
கடிமதில் பாயுநின் களிறடங் கலவே
போரெனிற் புகலும் புனைகழல் மறவர்
காடிடைக் கிடந்த நாடுநனி சேய
செல்வேம் அல்லேம் என்னார் கல்லென்
விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் திறுத்துக்
குணகடல் பின்னது ஆகக் குடகடல்
வெண்தலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப
வலமுறை வருவதும் உண்டென்று அமைந்து
நெஞ்சுநடுங்கு அவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே"

(புறம் .31)

எரி பரந் தெடுத்தல் -(பகைவரது நாடு) எரிபரந்து கிளர்தல்.

உதாரணம்

"வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்பூட்டி
மனைமரம் விறகாகக்
கடுதுறைநீர்க் களிறுபடீஇ
எல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்
புலங்கெட இறுக்கும் வரம்பில் தானைத்
துணைவேண்டாச் செருவென்றிப்
புலவுவாட் புலர்சாந்தின்
முருகற் சீற்றத் துருகெழு குருசில்
மயங்கு வள்ளை மலர் ஆம்பல்
பனிப்பகன்றைக் கனிப்பாகல்
கரும்பல்லது காடறியாப்
பெருந்தண்பணை பாழாக
ஏம நன்னாடு ஒள்எரி ஊட்டினை1
நாம நல்லமர் செய்ய
ஓராங்கு மலைந்தன பெருமநின் களிறே".

(புறம்.16)

வயங்கல் எய்திய பெருமையும் - விளக்கம் எய்திய பெருமையும்

உதாரணம்

"இருங்கண் யானையொடு அருங்கலந்2 தெறுத்துப்
பணிந்துகுறை 3 மொழிவ தல்லது பகைவர்
வணங்கார் ஆதல் யாவதோ மற்றே
உருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்ந் தாங்கு
கண்ணதிர்பு முழங்குங் கடுங்குரல் 4முரசம்
கால்கிளர்ந் தன்ன ஊர்தி கான்முளை
5நீர்துனைந் தன்ன செலவின்
நிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே."

(பதிற்றுப்பத்து)

கொடுத்தல் எய்திய கொடைமையும் - கொடுத்தலைப் பொருந்திய கொடைமையும்.

உதாரணம்

"பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அறனோ6 மற்றிதுவிறல்மாண் குடுமி
இன்னா வாகப் பிறர்மண் கொண்டு
இனிய செய்திநின் ஆர்வலர் முகத்தே".

(புறம்.12)

அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றமும் - பகைவர் பலரையும் அடுத்து மேலிட்டுக்கொன்ற கொற்றமும்.

உதாரணம்

"திண்பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்றமர் கடத்தல் யாவது வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடில் மன்னர்
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதல்மறந்தவர்7 தீதுமருங்கு அறுமார்
அறம்புரிகொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த
நீள்கழல் மறவர்8 செல்வுழிச் செல்கென
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத்து ஒழிய
அருஞ்சமந் ததைய நூறிநீ
பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே".

(புறம். 93)

மாராயம் பெற்ற நெடு மொழியும் - மாராயமாகிய உவகை பெற்ற நெடிய மொழியும்.

உதாரணம்

"துடியெறியும் புலைய
எறிகோல்கொள்ளும் இழிசின
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயற்கெண்டையின் வேல்பிறழினும்
பொலம்புனை ஓடை அண்ணல் யானை
இலங்குவால் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர் கூட்டுமுதல் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது படினே
மாசில் மகளிர் மன்றல்9நன்றும்
உயர்நிலை உலகத்து நுகர்ப அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றுங் காண்டிரோ வரவே".

(புறம்.287)

பொருள் இன்று உய்த்த பேர் ஆண் பக்கமும் - பகைவரைப் பொருளாக மதியாது செலுத்தின பேர் ஆண் பக்கமும்.

உதாரணம்

"ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே."

(புறம்.1)

விசைவரு புனலைக் கற்சிறைபோல ஒருவர் தாங்கிய பெருமையும் - விசை கொண்டு வரும் புனலைக் கற்சிறை தாங்கினாற் போல ஒருவர் தாங்கிய பெருமையும்.

உதாரணம்

"வீடுணர்ந் தார்க்கும் வியப்பாமால் இந்நின்ற
வாடல் முதியாள் வயிற்றிடம் - கூடார்
பெரும்படை வெள்ளம் நெரிதரவும் பேரா
இரும்புலி சேர்ந்த இடம்"

(புறப்.வஞ்சி.91)

எனவும்,

"வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்
தன்இறந்து வாராமை விலக்கலின் பெருங்கடற்கு
ஆழி அனையன் மாதோ என்றும்
பாடிச் சென்றோர்க்கு அன்றியும் வாரிப்
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே"

(புறம்.330)

எனவும் வரும்.

பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும் - திரட்சி பொருந்தின பெருஞ்சோற்ற நிலையும்.

உதாரணம்

"இணர்ததை ஞாழல் கரைகெழு பெருந்துறை
மணிக்கலத்து அன்ன மாயிதழ் நெய்தற்
பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை
வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளும்
அல்குறு கானல் ஓங்குமணல் அடைகரை
தாழடம்பு மலைந்த புணரிவளை ஞரல
இலங்கு10 நீர் முத்தமொடு வார்துகில் எடுக்கும்
தண்கடற் படப்பை மென்பா லனவும்
காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர்
செங்கோட்டு ஆமான் ஊணொடு காட்ட
மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு
பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்
குன்றுதலை மணந்த 11புன்புல வைப்பும்
கால மன்றியுங் கரும்பறுத்து 12ஒழியாது
அரிகால் அவித்துப் 13பலபூ விழவில்
தேம்பால் மருதம் முதல்படக் கொன்று
வெண்டலைச் செல்புனல் பரந்துவாய் மிகுக்கும்
பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச்
சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம்
முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயருஞ்
செழும்பல் வைப்பிற் பழனப் பாலும்
ஏனல் உழவர் வரகுமீது இட்ட
கான்மிகு குளவிய வன்புசேர் இருக்கை
மென்தினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன்புலந் தழீஇய புறவணி வைப்பும்
பல்பூஞ் செம்மற் காடுபயம் மாறி
அரக்கத்து அன்ன நுண்மணற் கோடுகொண்டு
ஒண்ணுதல் மகளிர் கழலொடு மறுகும்
விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும்
பணைகெழு வேந்தரிம் வேளிரும் ஒன்றுமொழிந்து
கடலவுங் காட்டவும் அரண்வலியார் நடுங்க
முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக்
கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத்து
அருந்திறல் மரபிற் கடவுட் பேணியர்
உயர்ந்தோன் ஏந்திய அரும்பெறற் பிண்டங்
கருங்கண் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க
நெய்த்தோர் தூஉய நிறைமகிழ் இரும்பலி
எறும்பு மூசா இறும்பூது மரபிற்
கருங்கண் காக்கையொடு பருந்திருந்து ஆர
ஓடாப் பூட்கை ஒண்பொறிக் கழற்காற்
பெருஞ்சமந் ததைந்த செருப்புகல் மறவர்
உருமுநிலன் அதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து
பெருஞ்சோ றுகுத்தற்கு எறியும்
படுஞ்சினவேந்தே நின்14தழங்குகுரல் முரசே."

(பதிற்றுப்.30)

வென்றோர் விளக்கமும் - வென்றோர்மாட்டு உளதாகிய விளக்கமும்.

"அறாஅ யாணர் அகன்கண் செறுவின்
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பகடு உதிர்த்த மென்செந் நெல்லின்
அம்பண அளவை உறைகுவித் தாங்குக்
கடுந்தேன்15 உருகிளை மொசிந்தன துஞ்சும்
செழுங்கூடு கிளைத்த இளந்துணை மகாரின்
அலந்தனர் பெருமநின் உடற்றி யோரே
ஊரெரி கவர உருத்தெழுந்து உரைஇப்
போர்சுடு கமழ்புகை மாதிரம் மறைப்ப
மதில்வாய்த், தோன்றல் ஈயாது தம்பழி ஊக்குநர்
குண்டுகண் அகழிய குறுந்தாள் ஞாயில்
ஆரெயில் தோட்டி வௌவினை ஏறொடு
கன்றுடை ஆயம் தரீஇப் புகல்சிறந்து
புலவுவில் இளையர் அங்கை விடுப்ப
மத்துக்கயிறு ஆடா வைகற்பொழுது நினையூஉ
ஆன்பயம் வாழுநர் கழுவுள்தலை மடங்கப்
பதிபாழ் ஆக வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு அற்றென
அருஞ்சமத்து அருநிலை தாங்கிய புகர்நுதல்
பெருங்களிற்று யானையொடு அருங்கலந் தராஅர்
மெய்பனி கூரா அணங்கெனப் பராவலிற்
பலிகொண்டு பெயரும் பாசம்16 போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் ஊழி
உரவரும் மடவரும் அறிவுதெரிந்து எண்ணி
அறிந்தனை அருளாய் ஆயின்
யாரிவண் நெடுந்தகை வாழு மோரே."

(பதிற்றுப்.71)

தோற்றார் தேய்வும் - தோற்றோர் தேய்வு கூறுதலும்.

உதாரணம்

"வான்மருப்பின் களிற்றியானை
மாமலையிற் கணங்கொண்டவர்
எடுத்தெறிந்த விறல்முரசம்
கார்மழையின் கடிதுமுழங்கச்
சாந்து புலர்ந்த வியன்மார்பின்
தொடி சுடர்வரும் வலிமுன்கைப்
புண்ணுடை எறுழ்த்தோள் புடையலங் கழற்கால்
பிறக்கடி ஒதுங்காப் பூட்கை ஒள்வாள்
ஒடிவில் தெவ்வர் எதிர்நின்று உரைஇ
இடுக திறையே புரவெதிர்ந் தோற்கென
அம்புடை வலத்தர் உயர்ந்தோர் பரவ
அனையை ஆகல் மாறே பகைவர்
கால்கிளர்ந்து அன்ன கதழ்பரிப் புரவிக்
கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி
புலவரைத் தோன்றல் யாவது சினப்போர்
நிலவரை நிறீஇய நல்லிசைத்
தொலையாக் கற்பநின் தெம்முனை யானே."

(பதிற்றுப்.80)

குன்றா சிறப்பின் கொற்றவள்ளையும் - குறைவுறுதலைச் செய்யாத வென்றிச் சிறப்பினையுடைய கொற்றவள்ளையும்.

கொற்றவள்ளை: தோற்ற கொற்றவன் அளிக்கும் திறை. உதாரணம் வந்துழிக் காண்க.

அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ - மாற்றார் விடுபடைக்கலன் முதலியனவற்றைத் தம்மாட்டுத் தடுத்து உளன் அழிந்தோர்ப் பேணித் தழுவிக்கோடலொடு தொகுத்து எண்ணின்.

உதராணம்

"வருகதில் வல்லே வருகதில் வல்லென
வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப
நூலரி மாலை சூடிக் காலின்
தமியன் வந்த மூதி லாளன்
அருஞ்சமந் தாங்கி முன்னின்று எறிந்த
ஒருகை இரும்பிணத்து எயிறுமிறை யாகத்
திரிந்த வாய்வாள் திருத்தாத்
தனக்குஇரிந் தானைப் பெயர்புற நகுமே."

(புறம்.284)

இத்துணையும் கூறப்பட்டது வஞ்சி.

"உரவரும் மடவரும் அறிவுதெரிந்து எண்ணி
அறிந்தனை அருளாய் ஆயின்
யாரிவண் நெடுந்தகை வாழு மோரே"

(பதிற்றுப்.71)

என்பதும் இதன்கண் அடங்கும். இது முதுமொழி வஞ்சி.

கழி பெருஞ் சிறப்பின் பதின்மூன்று துறை - மிகப் பெருஞ் சிறப்புடைய பதின்மூன்று துறைத்தாம்.

வென்றோர் விளக்கம் முதலிய மூன்றும் ஒழிந்த ஏனையவெல்லாம் இரு திறத்தினர்க்கும் பொதுவாக நிற்றலின் கழிபெருஞ் சிறப்பெனக் கூறினார். இன்னும் "கழிபெருஞ்சிறப்பின்" என்றமையின், பேரரசர் துணையாக வந்த குறுநில மன்னரும் தாமும் பொலிவெய்திப் பாசறை நிலை உரைத்தலும் பிறவும் கொள்க. இவைபற்றியன துணைவஞ்சி. "நீயே புறவின் அல்லல்" (புறம்.46) "வள்ளியோர்ப் படர்ந்து" (புறம்.47) என்னும் புறப்பாட்டுகளில் காண்க. பிறவும் அன்ன.

(7)

(பாடம்) 1. ஊட்டி

2. தொறுத்தும்.

3. வழி

4. முரசமொடு.

5. எரிநிகழ்ந்தன்ன நிறையருஞ் சீற்றத்து.

(பாடம்) 6. மறனோ.

7. மறந்து

8. மன்னர்.

9. மண்ண.

(பாடம்) 10. கதிர்.

11. வன்.

12. கரும்புய்த்து.

13. பல்பூ உழவர்.

14. வேந்துசேன்.

(பாடம்) 15. கடுந்தேறு உறுகிளை.

16. பசாசம்.