மேலதிகாரப்பட்ட ஈரைங் குற்றமும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. கூறியது கூறலாவது ஒருகாற் கூறியதனைப் பின்னுங்கூறல். கொள மாறுபடக் கூறலாவது ஒருகாற் கூறியபொருளோடு மாறுகொள்ளுமாறு பின்கூறல். அஃதாவது தவம்நன்று என்றவன்றான் தவந் தீதென்று கூறல். குன்றக் கூறலாவது தானதிகரித்த பொருள்களுட் சிலவற்றைக் கூறாதொழிதல். மிகைபடக் கூறலாவது அதிகாரப் பொருளன்றிப் பிறபொருளுங் கூறுதல். அஃதாவது தமிழிலக்கணஞ் சொல்லுவானெடுத்துக்கொண்டான் வடமொழியிலக்கணமும் கூறல். பொருளில கூறலாவது முன்னும் பின்னும் வருகின்ற பொருண்மைக் கொப்பின்றிப் பயனில்லாதன கூறல். மயங்கக் கூறலாவது கேட்டார்க்குப் பொருள் விளங்குமாறின்றிக் கூறல். கேட்போர்க்கின்னா யாப்பிற்றாதலென்பது பொருள் யாக்கப்பட்ட சூத்திரஞ் சந்தவின்பமின்றி யிருத்தல். பழித்தமொழியான் இழுக்கக் கூறலாவது தானொரு பொருளை யொருவாய்பாட்டாற்குறித்துப் பிறிதொரு வாய்பாட்டாற் கூறுதல்; அக்குறிப்பு உலகவழக்கின்மையாற் பிறர்க்குப் புலப்படாதாம்; அதனால் அதுவுங் குற்றமாயிற்று. என்ன வகையினும் மனங்கோள் இன்மையாவது எழுத்தினாலுஞ் சொல்லினானும் பொருளினானு மனங்கொள்ளுமாறு கூறாமை. (110)
1. 'வசையறநாடின்' என்றதனான் இங்ஙனம் குற்றம் என்று வரையப்பட்டனவற்றைக்கொண்டு புகுந்து மற்றொரு பொருள்கொள்ளின் அவை வசையற்றனவாம் என்பது. (தொல். பொருள். 663. பேரா. )
|