மரபியல்

656ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின்
நுதலிய தறிதல் அதிகார முறையே
தொகுத்துக் கூறல் வகுத்துமெய்ந் நிறுத்தல்
மொழிந்த பொருளோ டொன்ற வைத்தல்1
மொழியா ததனை முட்டின்றி2 முடித்தல்
வாரா ததனான் வந்தது முடித்தல்
வந்தது கொண்டு வாராதது முடித்தல்
முந்து மொழிந்ததன் தலைதடு மாற்றே
ஒப்பக் கூறல் ஒருதலை மொழியே3
தன்கோட் கூறல் உடம்பொடு புணர்த்தல்4
பிறனுடம் பட்டது தானுடம் படுதல்
இறந்தது காத்தல்5 எதிரது போற்றல்
மொழிவாம் என்றல் கூறிற் றென்றல்
தான்குறி யிடுதல் ஒருதலை யன்மை
முடிந்தது காட்டல் ஆணை கூறல்
பல்பொருட் கேற்பின் நல்லது கோடல்
தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்
மறுதலை சிதைத்துத் தன்துணி புரைத்தல்
பிறன்கோட் கூறல் அறியா துடம்படல்6
பொருளிடை யிடுதல் எதிர்பொருள் உணர்த்தல்
சொல்லின் எச்சம் சொல்லியாங் குணர்த்தல்
தந்துபுணர்ந் துரைத்தல் ஞாபகம் கூறல்
உய்த்துக்கொண் டுணர்த்தலொடு மெய்ப்பட நாடிச்
சொல்லிய அல்ல பிறவவண் வரினும்
சொல்லிய வகையாற் சுருங்க நாடி
மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண்டு
இனத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்
நுனித்தகு புலவர் கூரிய நூலே.
தந்திரவுத்தி யாமாறுணர்த்துதல் நுதலிற்று7.

இதன் பொழிப்பு: நுதலிய தறிதல் முதலாகச் சொல்லப்பட்டனவும் அத்தன்மையபிறவுந் தந்திர உத்தியாம் என்றவாறு.

தந்திரமெனினும் நூலெனினும் ஒக்கும். உத்தியென்பது வடமொழிச் சிதைவு. அது சூத்திரத்தின்பாற் கிடப்பதோர் பொருள் வேறுபாடு காட்டுவது.

ஒத்தகாட்சி உத்திவகை விரிப்பினென்பது நூற்குப் பொருந்திய காட்சியினானுரைக்கும் உத்திவகையை விரிக்குங்காலத் தென்றவாறு.

நுதலியதறிதலாவது - சூத்திரத்திற் சொற்பொருளுணர்த்தலன்றி.இதன் கருத்திதுவென உணர்த்தல்.

அஃதாவது `எழுத்தெனப்படும்' (நூன்மரபு;1) என்னுஞ் சூத்திரத்துள் எழுத்து இனைத்தென வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று என்றல்.

அதிகார முறையாவது-முன்னம் பலபொருளை யதிகரித்த வழிப் பின்னும் அம்முறையினானே விரித்துணர்த்துதல்.

அஃதாவது உயர்திணை யஃறிணையென அதிகரித்து `ஆடூஉ வறிசொல்' (கிளவியாக்கம்-2) என்னுஞ் சூத்திரத்தான் நிறுத்தமுறை பிறழாமல் உயர்திணைகூறல். இன்னும் இதனானே ஒரு சூத்திரத்திலே கருதின பொருளை வைத்து வருகின்ற சூத்திரத்துள் ஓதாது அதன் காரியமாயின கூறியவழி அதனைச் சூத்திரந்தோறுங் கொணர்ந்துரைத்தல். அஃதாவது `அகர விறுதிப் பெயர்நிலை முன்னர்'(உயிர் மயங்கியல்-1)என்னுஞ் சூத்திரத்திற் 'கசதபத் தோன்றி' னெனவோதி 'வினையெஞ்சு கிளவியு' (உயிர் மயங்கியல்-2) மென்னுஞ் சூத்திரத்துள் ஓதிற்றிலராயினும் அதிகாரமுறைமையினான் வல்லெழுத்து வருவழியென வுரைத்தல்.

தொகுத்துக் கூறலாவது - வகைபெறக் கூறல் வேண்டுமாயினும் அதனைத் தொகுத்துக் கூறல்.

`எழுத்தெனப் படுப அகரமுத னகர விறுவாய் முப்பஃதென்ப'(நூன்மரபு.1) என்றாற் போல்வன. இன்னும் பல சூத்திரத்தாற் கூறிய பொருளை இத்துணையுங் கூறப்பட்டதிதுவெனக் கூறலுமாம். `தூக்கியல் வகையே யாங்கென மொழிப. '(செய்யுளியல்-83) என்பதனாற் கொள்க.

வகுத்து மெய்ந் நிறுத்தலாவது - தொகைபடக் கூறிய பொருளை வகைபடக் கூறல்.

அது `அ, இ, உ, எ, ஒ' (நூன்மரபு-3) என்னுஞ் சூத்திரத்தாற் கொள்க. இன்னுமதனானே தொகைபடச் சூத்திரஞ்செய்தவழி அவற்றுள் ஒரோவொன்று பொதுவிலக்கணத்தான் முடியாதவழிப் பெரும்பான்மை சிறுபான்மை கொண்டு வகுத்துப் பொருளுரைத்தலுமாம். இன்னுமதனானே தொகைபடக் கூறியவதனை வகுத்துப் பொருளுரைத்தலுமாம்.

மொழிந்த பொருளோடொன்ற வைத்தலாவது - சூத்திரத்துட்பொருள் பலபடத்தோன்றுமாயின் முற்பட்ட சூத்திரத்திற் கொக்கும பொருளுரைத்தல்.

அன்றியும் முற்பட்ட சூத்திரத்தினான் ஒருபொருளோதியவழிப் பிற்பட்ட சூத்திரமும் பொருளோடொன்ற வைத்தலுமாம்.

மொழியாததனை முட்டின்றி முடித்தலாவது - எடுத்தோதாத பொருளை முட்டுப்படாமல் உரையினான் முடித்தல்.

இதனை 'உரையிற்கோடல்' என்ப. இக்கருத்தினானே.

சூத்திரத் துட் பொரு ளின்றியும் யாப்புற
இன்றிய யமையா தியைபவை யெல்லாம்
ஒன்ற வுரைப்ப துரையெனப் படுமே.

(மரபியல் 115)

என ஓதுவராயிற்றென்க.

வாராததனான் வந்தது முடித்தலாவது ஒருங்கெண்ணப்பட்ட பொருளொன்றனைப் பகுத்துக்கூறியவழி ஆண்டு வாராத தற்கோதிய விலக்கணத்தை இதன்கண்ணும் வருவித் துணர்த்துதல்.

வந்ததுகொண்டு வாராதது முடித்தலாவது ஒருங்கெண்ணப் பட்டவற்றுளொன்றைப் பகுத்து இலக்கணங் கூறியவழி வாராததன்கண்ணும் இவ்விலக்கணத்தைக்கூட்டி முடித்தல்.

முந்துமொழிந்ததன் தலைதடுமாற்றாவது முற்பட அதிகரித்தபொருளை யவ்வகையினாற் கூறாது முறைபிறழக்கூறுதல்.

இவ்வாறு கூறுங்கால் ஒருபயனோக்கிக் கூறல்வேண்டும். அது புள்ளி மயக்கியலுட் கண்டுகொள்க.

ஒப்பக்கூறலென்பது ஒரு பொருளெடுத்து இலக்கணங் கூறியவழி அதுபோல்வனவற்றையு மிலக்கணத்தான் முடித்தல்.

ஒருதலைமொழியாவது ஏகாக்கரமென்னும் வடமொழிப் பொருண்மை. அஃதாவது, சூத்திரத்திற்குப் பொருள் கவர்த்துத் தோன்றின் அதனு ளொன்றனைத் துணிந்து கூறல்.

தன்கோட் கூறலாவது-பிறநூலாசிரியர் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டால் கூறுதல்.

அது வேற்றுமை எட்டென்றல்.

உடம்பொடு புணர்த்தலாவது - இலக்கணவகையான் ஓதுதலன்றி யாசிரியனுக்கின்றிச் சூத்திரத்தின் கண்ணே யொரு சொல்லை வைப்பனாயின் அவ்வைப்பினை இலக்கணமாகக் கோடல்.

ஒற்றீற்றுச் சொல்லை யுகரங்கொடுத்துக் கூறுகவென விலக்கணங்கூறிற்றிலராயினும். `ஆரும் அருவும் ஈரொடு சிவணும்' (விளிமரபு. 21.)என ஓதுதலின், `ஆர்' என்பது `ஆரும்' என உகரம் பெற்றது. இதனைப் பிறாண்டுங்கோடல்.

பிறனுடம் பட்டது தானும்படுதலாவது பிறநூலாசிரியன் உடம்பட்ட பொருட்குத் தானுடம்படுதல்.

அஃதாவது இரண்டாம் வேற்றுமை செயப்படுபொருட்கண் வருமெனப் பாணினியார் ஓதினார்; அது இவர்க்கும் உடம்பாடு.

இறந்தது காத்தலாவது-மேற்கூறப்பட்ட சூத்திரத்தாற் கூறப்படாத பொருளைப் பின்வருகின்ற சூத்திரத்தானமைத்தல்.

எதிரது போற்றலாவது முன் கூறப்பட்ட சூத்திரத்தானே வருகின்ற சூத்திரத்திற் பொருளினையும் பாதுகாக்குமாறு வைத்தல்.

மொழிவாமென்றலாவது சில பொருளைக் கூறி அவற்றுளொன்றனை யின்னவிடத்துக் கூறுவாமென வுரைத்தல்.

`புணரிய னிலையிடைக் குறுகலும்' (மொழிமரபு.2) என்பதனாற் கொள்க;

கூறிற்றென்றலாவது - பலபொருளா யதிகரித்தவற்றுட் சில பொருளை மேற்சொல்லபட்டனவென்றல்.

`மாத்திரை வகையும் எழுத்தியல்வகையு மேற்கிளந்தன்ன'(செய்யுளியல்.2) என்றதனாற் கொள்க.

தான் குறியிடுதலாவது - உலகின்கண் வழக்கின்றி யொரு பொருட்கு ஆசிரியன்றான் குறியிடல்.

அஃது உயர்திணை யஃறிணையென்பன.

ஒருதலையன்மை முடிந்தது காட்டலாவது - ஒரு பொருளை யோதியவழிச் சொல்லுதற்கே யுரித்தன்றிப் பிறபொருட்கும். பொதுவாக முடித்தமை காட்டல்.

ஆணை கூறலாவது - ஒருபொருளைக் கூறும்வழி ஏதுவினாற் கூறலன்றித் தன்னாணையாற் கூறல்.

வேற்றுமையேழெனப் பாணினியார் கூறினமையின் அவர் விளியை முதல்வேற்றுமையி லடக்கினார். அதற்குத் திரிபுகூறாது அதனை எட்டாம் வேற்றுமையென்றல் ஆண்டுக் கடாவப்படா.

பல்பொருட் கேற்பின் நல்லது கோடலாவது ஒருசூத்திரம் பலபொருட் கேற்குமாயின் அவற்றுள் நல்லதனைப் பொருளாகக் கோடல்.

தொகுத்தமொழியான் வகுத்தனர் கோடலாவது தொகுத்துக் கூறியசொல் தன்னானே பிறிதுமொருபொருள் வகுத்துக்காட்டல்.

`அது குற்றியலுகர முறைப்பெயர் மருங்கின' (விளிமரபு.9.) என்னுஞ் சூத்திரத்தான் மொழிமுதற் குற்றுகரமுங் கோடல்.

சொல்லின் முடிபின அப்பொருண்முடித்த லென்பதுமது.

மறுதலை சிதைத்துத் தன்றுணி புரைத்தலாவது பிற நூலாசிரியன் கூறின் பொருண்மையைக் கெடுத்துத் தன்றுணிவு கூறுதல்.

அஃதாவது நெட்டெழுத்தேழ் அளபெடை யென்பன குற்றெழுத்தின் விகாரமென்பாரை மறுத்து வேறோரெழுத்தாக வோதுதல்.

பிறன்கோட் கூறலாவது - பிறநூலாசிரியன் கொண்ட கோட்பாட்டைக் கூறுதல்.

அது `வேற்றுமை தாமே யேழென மொழிப' (வேற்றுமையில். 1) என்றல்.

அறியாதுடம் படலாவது தானறியாத பொருளைப் பிறர் கூறியவாற்றா னுடம்படுதல்.

அது ஏழாநரகம் இத்தன்மைத் தென வொருவன் கூறியவழி அது புலனாகாதாதலின் அவன் சொன்னதற் குடம்படுதல். இது வழிநூலாசிரியர்க் குரித்து.

பொருளிடை யிடுதலாவது - ஒருபொருளை யோதியவழியதற்கினமாகிய பொருளைச் சேரக்கூறாது இடையீடுபடக் கூறுதல்.

`அது பெண்மை சுட்டிய' (பெயரியல். 24) வென்னுஞ் சூத்திரமோதி அதன் பகுதியாகிய ஆண்மைதிரிந்த பெயர்நிலைக்கிளவி யென்பதனை இடையிட்டு வைத்தல் போல்வன.

எதிர்பொரு ளுணர்த்தலாவது - இனிக் கூறவேண்டுவதிதுவென வுணர்த்தல்.

சொல்லின் எச்சம் சொல்லியாங் குணர்த்தலென்பது பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்ட எச்சங்களைக்கொண்டு ஆங்குச் சொல்லியவாற்றாற் பொருள் கோடல்.

தந்துபுணர்ந்துரைத்தலாவது முன்னாயினும் பின்னாயினும் நின்ற சூத்திரத்திற் சொல்லை இடைநின்ற சூத்திரத்தினுங் கொணர்ந்து புணர்த்துரைத்தல்.

ஞாபகங்கூறலாவது இரட்டுறமொழிந்து இரண்டுசொற்கும் பொருள்கோடல்.

உய்த்துக் கொண்டுணர்தலாவது ஒரு சூத்திரத்தான் ஓரிலக்கணம் ஓதிய வழி அதற்குப் பொருந்தாமை யுளதாகத் தோன்றின் அதற்குப் பொருந்துமாறு விசாரித்துணர்தல்.

பனியென்னுஞ் சொல்லுக்கு அத்தும் இன்னுஞ் சாரியையா மென்றாராயினும் (உயிர்மயங்கியல். 39) அவற்றுள் ஏற்பதொன்றாதலின் இன்னீற்றாயவாறு வருவன வுய்த்துணர்தலாம்.

இவை முப்பத்திரண்டுந் தந்திரவுத்தியாவன.

மெய்ப்பட........ நூலென்பது மேற்சொல்லப்பட்டவற்றோடு கூடப் பொருள்பட ஆராய்ந்து சொல்லிய வல்லாதனவாகிய பிறவவண்வரினுஞ் சொல்லிய நெறியினாற் சுருங்கவாராய்ந்து மனத்தினா னோர்ந்து குற்றமறத்தெரிந்து சொல்லிய வினத்தோடு பாகுபடுத்துரைத்தல் வேண்டுமது நுண்மைதகப் புலவர் கூறிய நூலினை யென்றவாறு.

பிறவாறுகொளப்படுவன மாட்டெறிதல், சொற்பொருள் விரித்தல், ஒன்றென முடித்தல், தன்னின முடித்தலென்பன. இவற்றுள் `மாட்டெறித' லாவது முன்னொரு பொருள் கூறிப் பின்வருவதும் அதுபோலுமென்றல் . அஃதாவது `உகர விறுதி அகர வியற்றே' (உயிர்மயங்கியல். 52) எனவரும்.

சொற்பொருள் விரித்தலாவது பதந்தோறும் பொருள் விரித்துக் கடாவும் விடையுங் கூறுதல்.

ஒன்றென முடித்தல் தன்னின முடித்தலென்பது சொல்லப்பட்ட வாற்றான் வருமுத்திரமேயாகத் தொகைப்பட முடியும் இனவுஞ் சிலவாசிரியர்மதம் பலவுத்திக்கும் ஏற்கும் ஒரு சூத்திரம் இந்நூலகத்துள்...........பொருள் கொண்டாமாயினும் ஈண்டுரைத்த பாகுபாடெல்லாவற்றிற்கும் இந்நூலகத் துதாரணமே கண்டுகொள்க.

இன்னுஞ் சொல்லியவல்ல பிற வென்றதனான யாற்றொழுக்கு அரிமானோக்கு தவளைப்பாய்த்துள் பருந்துவிழுக்காடென்னுஞ் சூத்திரக் கிடக்கையும் ஆதிவிளக்கு மத்திம தீபம் இறுதிவிளக்கு என்னும் பொருள் கோணிலையுங் கொள்ளப்படும். யாற்றொழுக்காவது கருதியபொருளை வழுவாமற் சூத்திரம் ஒருங்குபடக் கிளத்தல். அரிமானோக்காவது முன்னும் பின்னுங் கூறுகின்ற விரண்டு சூத்திரத்தினையு மிடைநின்ற சூத்திரம் நோக்குதல். தவளைப்பாய்த்துளாவது இடையறுத்தோடுதல். பருந்து விழுக்காடாவது அவ்வதிகாரத்துட் பொருத்தமில்லாத பொருள் யாதானுமொருகாரணத்தால் இடைவருதல். ஆதிவிளக்காவது சூத்திரத்தினால் ஆதியின் அமைத்தபொருள் அந்தத்தளவுமோடுதல். மத்திம தீபமாவது இடைநின்ற பொருள் முன்னும் பின்னும் நோக்குதல். இறுதிவிளக்காவது இறுதிநின்ற பொருள் இடையு முதலு நோக்குதல்.


1.(பாடம்)அவ்வயின்.

2. முட்டின்று.

3. மொழிதல்.

4. முறைபிறழாமை.

5. இறந்தது காத்தல் முற்கூறிய ஓர் சூத்திரப் பொருண்மை பின்னொரு சூத்திரத்தான் விலக்குதல்.

6. அறியாதுடம்படல் என்பது தான் ஓதிய இலக்கணத்தின் வேறுபட வருவனதான் அறிந்திலனாகக்கூறி அதன் புறத்துச்செய்வதோர் புறனடை. இறந்தது காத்தலோடு இதனிடை வேற்றுமை என்னை என்னின், இறந்ததென்பது தான்துணிந்து சொல்லப்பட்ட பொருளாகல் வேண்டும்.இஃது அன்னதன்றிச் சொல்லப்படாத பொருள்மேற்றாகி அதுவும் தான் துணியப்படாத பொருளாகித் தான் நூல் செய்தகாலத்தே உள்ளவற்றுள் ஒழியப்போயின உளவாயினும் கொள்க என்பான், வேறு பிற தோன்றினும் எனவும்; வருபஉள எனினும் எனவும் தேறாது அதன் ஐயப்பாடு தோன்றச் சொல்லுதலின் இது வேறென்க. முழுதுணர்ந்தாற் கல்லது பழுதறச் சொல்லாகாமையின். அஃது அவையடக்கியல் போல்வதோர் உத்தி எனக் கொள்க.

7. `நுனித்தகு புலவர் கூறிய நூல்' என்றதனானே, பாயிரச் செய்யுளும் சூத்திரச் செய்யுளும் ஆசிரியப்பாவும் வெண்பாவும் பெற்றுவருதலும், அவ்விருபாவும் பெற்றுவருதலும், பாட்டுப்போல எல்லா உறுப்பும் பெறுதற்குச் செல்லா என்பதூஉம்,மாத்திரை முதலாகப் பாவீறாக வந்த பதினொன்றும் வண்ணங்களுள் ஏற்பன கொள்ளினும் கொள்ளுமெனவும் யாப்புறுப்புக்கொள்ளுங்கால் ஈண்டோதிய மரபும் கொள்ளப்படுமெனவும் கொள்க. உரைக்குங் காண்டிகைக்கும் இவற்றுள்ளும் ஏற்பன அறிந்து கொள்க.(தொல்.பொருள்.665.பேரா.)


ஒன்பதாவது மரபியல் முற்றிற்று
பொருளதிகாரம் மூலமும் உரையும் முற்றிற்று.