புறத்திணை இயல்

69 குடையும் வாளும் நாள்கோள் அன்றி
மடையமை ஏணிமிசை மயக்கமுங் கடைஇச்
சுற்றமர் ஒழிய வென்றுகைக் கொண்டு
முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய
அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் மற்றதன்
புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும்
நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் அதாஅன்று
ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும்
1மதில்மிசைக் கிவர்ந்த மேலோர் பக்கமும்
இகல்மதிற் குடுமிகொண்ட மண்ணு மங்கலமும்
வென்ற வாளின் மண்ணோடு ஒன்றத்
தொகைநிலை என்னுந் துறையொடு தொகைஇ
வகைநான் மூன்றே துறையென மொழிப.

இதுவும் அது.

(இ-ள்) குடை நாட்கோள் முதலாகச் சொல்லப்பட்டுள்ள பன்னிரண்டு துறையும் உழிஞைக்குரிய துறை, மேற்சொல்லப் பட்டவற்றின் விரியும் பன்னிரண்டு உள என்றவாறு.

குடையும் வாளும் நாள்கோள்2- குடைநாட்கோள் வாள்நாட்கோள் என வருவனவும்.

உதாரணம்

"நெய்யணிக செவ்வேல் நெடுந்தேர் நிலைபுகுக
கொய்யுனைமா கொலைகளிறு பண்விடுக - வையகத்து
முற்றக் கடியரணம் எல்லா முரண் அவிந்த
கொற்றக் குடைநாட் கொள."

(புறப்.உழிஞை.2)

இது குடைநாட்கோள்.

"வாள்நாட் கொளலும் வழிமொழிந்து வந்தடையாப்
பேணார் பிறைதொடூஉம் பேர்மதில் - பூணார்
அணிகொள் வனமுலையார் ஆடரங்கம் ஏறிப்
பிணிகொள்பே யாடும் பெயர்த்து."

(புறப்.உழிஞை.3)

இது வாள்நாட்கோள்.

மடை அமை ஏணி மிசை மயக்கமும் - மதிலிடத்துமடுத்தல் அமைந்த ஏணிசார்த்தி அதன்மேல் பொரும் போர்மயக்கமும்.

உதாரணம்

"சுடுமண் நெடுமதில் சுற்றிப் பிரியார்
கடுமுரண் எஃகங் கழிய- அடுமுரண்
ஆறினார் அன்றி அரவும் உடும்பும்போல்
ஏறினார் ஏணி பலர்."

(புறப். உழிஞை. 19)

கடைஇச் சுற்றமர் ஒழிய வென்றுகைக்கொண்டு முற்றியமுதிர்வும் - செலுத்திச் சுற்றமர் ஒழிக என்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும்.


உதாரணம்

காலை முரசம் மதிலியம்பக் கண்கனன்று
வேலை விறல்வெய்யோன் நோக்குதலும் - மாலை
அடுதும் அடிசிலென்று அம்மதிலுள் இட்டார்
தொடுகழலார் மூழை துடுப்பு."

(புறப்.உழிஞை.23)

முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும்3 - முற்ற. அகப்பட்ட அகத்தினுள்ளான் வீழ்ந்த நொச்சியும்.

உதாரணம்

"நீரறவு அறியா நிலமுதற் கலந்த4
கருங்குரல்5 நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
மெல்லிழை6 மகளிர் ஐதகல் அல்குல்
தொடலை யாகவுங் கண்டனம் இனியே
வெருவரு குருதியொடு மயங்கி உருவுகரந்து
தொறுவாய்ப் பட்ட தெரியல்ஊன் செத்து
பருந்துகொண் டுகப்பயாம் கண்டனம்
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே.

(புறம்.271)

அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையும் - நொச்சியின் புறத்தாகிய உழிஞையான் வீழ்ந்த புதுமையும் [ 'மற்று' என்பது அசை 'ஆன்' என்பது இடைச்சொல்.]

உதாரணம்

"கோடுயர் வெற்பில் நிலங்கண் டிரைகருதுந்
தேடுகொள் புள்ளின் தொகையொப்பக் - கூடார்
முரணகத்துப் பாற முழவுத்தோள் மள்ளர்
அரணகத்துப் பாய்ந்திழந்தார் ஆர்த்து."

(புறப். உழிஞை.20)

நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் - கிடங்கின் உளதாய போரின் கண்ணே வீழ்ந்த பாசியும்.

உதாரணம்

நாவாயும் தோணியும் மேல்கொண்டு நண்ணாதார்7
ஓவார் விலங்கி உடலவும் - பூவார்
அகழி பரந்தொழுகும் அங்குருதிச் சேற்றுப்
பகழிவாய் வீழ்ந்தார் பலர்."

(புறப். உழிஞை.17)

அஃது அன்று ஊர்ச்செரு வீழ்ந்த அதன் மறனும் - அஃது ஒழிய ஊர்ச்செருவின்கண் வீழ்ந்த பாசிமறனும். ['மற்று' என்பது அசை]

உதாரணம்

"பாயினார் மாயும் வகையாற் பலகாப்பும்
ஏயினார் ஏய இகல்மறவர் - ஆயினார்
ஒன்றி யவரற ஊர்ப்புறத்துத் தார்தாங்கி
வென்றி அமரர் விருந்து."

(புறப். நொச்சி.2)

மதில்மிசைக்கு இவர்ந்த மேலோர்பக்கமும் - மதின்மேற்கோடற்குப் பரந்த மதிலோர் பக்கமும்.

உதாரணம்

"அகத்தன வார்கழல் நோன்தாள் அரணின்
புறத்தன போரெழில் திண்தோள் - உறத்தழீஇத்
தோட்குரிமை பெற்ற துணைவளையார் பாராட்ட
வாட்குரிசில் வானுலகி னான்."

(புறப். நொச்சி.7)

இகல் மதில் குடுமி கொண்ட மண்ணு மங்கலமும் - தம்முடன் இகலி மதில்மேல் நின்றானை அட்டு அவன் முடிக்கலங் கொண்ட மண்ணு மங்கலமும்.

உதாரணம்

"எங்கண் மலர எயிற்குமரி கூடிய
மங்கல நாள்யாம் மகிழ்தூங்கக் - கொங்கலர்தார்ச்
செய்சுடர்ப்பூண் மன்னவன் சேவடிக்கீழ் வைகினவே
மொய்சுடர்ப்பூண் மன்னர் முடி."

(புறப். உழிஞை.28)

வென்ற வாளின் மண்ணோடு ஒன்ற - வென்ற வாளின் மண்ணு மங்கலமும் பொருந்த.

உதாரணம்

"தீர்த்தநீர் பூவொடு பெய்து திசைவிளங்கக்
கூர்த்தவாள் மண்ணிக் கொடித்தேரான் - பேர்த்தும்
இடியார் பணைதுவைப்ப இம்மதிலுள் வேட்டான்
புடையார் அடையப் புகழ்."

(புறப். உழிஞை.27)

தொகைநிலை - அம் மதிலழித்தமையான் மற்றுள்ள மதில்கள் வரைப்பில் மாறுபட்ட வேந்தரும் முரண் அவிந்தபடி யடைதல்.

உதாரணம்

"வென்றுகலந் தரீஇயர் வேண்டுபுலத் திறுத்துவர்
வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப
நல்கினை யாகுமதி எம்மென் றருளிக்
கலம்பிறங்கு 8 வைப்பிற் கடற்றிரை யாத்தநின்
தொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயின்
செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயிற்
கோள்வல் முதலைய குண்டுகண் அகழி
வானிற ஓங்கிய வளைந்துசெய் புரிசை
ஒன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி
நின்னில் தந்த மன்னெயில் அல்லது
முன்னும் பின்னுநின் முன்னோர் ஓம்பிய
எயில்முகப் படுத்தல் யாவது வளையினும்
பிறிதாறு செல்மதி சினங்கெழு குரிசில்
எழூஉப்புறந் தரீஇப் பொன்பிணிப் பலகைக்
குழூஉநிலைப் புதவிற் கதவுமெய் காணின்
தேம்பாய் கடத்தொடு9 காழ்கை நீவி
வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல்
ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி
மேம்படு வெல்கொடி நுடங்கத்
தாங்கல் ஆகா ஆங்குநின் களிறே."

(பதிற்றுப். 52)

என்னும் துறையொடு தொகைஇ வகைநால்மூன்று என மொழிப - என்னும் துறையோடு கூடிய உழிஞைவகை பன்னிரண்டு என்று கூறுவர்.

(11)

(பாடம்) 1.மகமிசைக் கிவர்ந்தோன் பக்கமும் இகன்மதில்.

2. நாள் கொளலாவது நாளும் ஓரையும் தனக்கு ஏற்பக்கொண்டு செல்லுழி, அக்காலத்திற்கு ஓர் இடையூறு தோன்றியவழித் தனக்கு இன்றியமையாதனவற்றை அத் திசை நோக்கி அக்காலத்தே முன்னே செல்லவிடுதல் (தொல் .புறம்.68) (நச்சி.)

3.நொச்சியும் மதிலைக்காத்தலும். உள்ளத்தைக்காத்தலும். (நச்சி.)

(பாடம்) 4.கழித்த.

5.கருங்கால்.

6. மெல்லியல்.

(பாடம்) 7. நள்ளாதார்.

8.கல்பிறங்கு.

9.கடாமொடு.