இது, தும்பைத்திணை யாமாறுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) தும்பை நெய்தலது புறன் - தும்பை என்னும் திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனாம், மைந்து பொருளாக வந்த வேந்தனை சென்று தலையழிக்கும் சிறப்பிற்று அது - வலி பொருளாகப் போர்கருதி வந்த அரசன்கண் சென்று அவனைத் தலையழிக்கும் சிறப்பினை யுடைத்து. இதனானே "எதிரூன்றல் காஞ்சி" (பிங்க. அநுபோக. 1474) என்பாரை மறுத்தவாறு அறிக. அதற்கு இது புறனாயவாறு என்னையெனின். இருபெருவேந்தரும் ஒருகளத்துப் பொருதலின், அதற்கு இடம் காடும் மலையும் கழனியும் ஆகாமையானும், களரும் மணலும் பரந்த வெளி நிலத்துப்பொருதல் வேண்டுதலானும், அந்நிலம் கடல்சார்ந்த வழியல்லது இன்மையானும், நெய்தற்கு ஓதிய எற்பாடு போர்தொழிற்கு முடிவாதலானும் நெய்தற்குப் புறனாயிற்று.['என்ப' அசை] (12)
1. தும்பை என்பது சூடும் பூவினாற் பெற்ற பெயர்.மைந்து பொருளாக என்பதனை வந்த என்பதற்கும் சென்று என்பதற்கும் கூட்டுக. (நச்சி.) இதனைப் பதினான்கு பதினைந்தென இரண்டாக்குவர். (நச்சி.)
|