புறத்திணை இயல்

721தானை யானை குதிரை என்ற
நோனார் உட்கும் மூவகை நிலையும்
வேல்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன்
தான்மீண்டு எறிந்த தார்நிலை அன்றியும்
இருவர் தலைவர் தபுதிப் பக்கமும்
ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக்
கூழை தாங்கிய பெருமையும்2 படையறுத்துப்
பாழி கொள்ளும் ஏமத் தானும்
களிறெறிந்து எதிர்ந்தோர் பாடுங் களிற்றொடு
பட்ட வேந்தனை அட்ட வேந்தன்
வாளோர் ஆடும் அமலையும் வாள்வாய்த்து
இருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும்
ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும்
செருவகத்து இறைவன் வீழ்வுறச்3 சினைஇ
ஒருவனை4மண்டிய நல்லிசை நிலையும்
பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்
ஒள்வாள் வீசிய நூழிலும் உளப்படப்
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.

இஃது தும்பைத்திணை பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) நோனார் உட்கும் தானை யானை குதிரை என்ற மூவகை நிலையும் - பகைவரால் உட்கப்படுகின்ற தானையும் யானையும் குதிரையுமாகிய மூவகைப்பட்டவற்றினது நிலையும்.

தானைநிலை வருமாறு

"வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்
கண்கூடு இறுத்த கடன்மருள் பாசறைக்
குமரிப்படை தழீஇய5 கூற்றுவினை ஆடவர்
தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
இறையும் பெயருந் தோற்றின் நுமருள்
நாண்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கெனப்
போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும்
அரவுமிழ் மணியிற் குறுகார்
நிறைதார் மார்பினின் கேள்வனைப் பிறரே."

(புறம். 294)

"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்."

(குறள். 774)

"நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல்
இரங்காழ்6 அன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்
மடப்பால் ஆய்மகள் வள்ளுகிர்த் தெறித்த
குடப்பால் சில்லுறை போலப்
படைக்குநோய் எல்லாந் தானா யினனே."

(புறம்.276)

"தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தானவற்கு
ஒற்கத்து உலந்தானும் ஆகுமால் பின்பின்
பலர்புகழ் செல்வம் தரூஉம்பற் பலர்தொழ
வானக வாழ்க்கையும் ஈயுமால் அன்னதோர்
மேன்மை இழப்பப் பழிவருவ செய்பவோ
தானேயும் போகும் உயிர்க்கு."


இஃது ஒரு வீரன் கூற்று.
யானை நிலை வருமாறு

"கையொடு கையொடு ஒருதுணி கோட்டது
மொய்யிலைவேல் மன்னர் முடித்தலை - பைய
உயர்பொய்கை நீராட்டிச் செல்லுமே அங்கோர்
வயவெம்போர் மாண்ட களிறு."

குதிரை நிலை வருமாறு

"நிலம்பிறக் கிடுவது போற்குளம்பு கடையூஉ
உள்ளம் ஒழிக்குங்7 கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்குங் காளை கூர்த்த
வெந்திறல் எஃகம்8 நெஞ்சுவடு விளைப்ப
ஆட்டிக் காணிய வருமே நெருநை
உரைசால் சிறப்பின் வேந்தன் முன்னர்க்
கரைபொரு முந்நீர்த்9 திமிலிற்10 போழ்ந்தவர்
கயந்தலை மடப்பிடி புலம்ப
இலங்குமருப்பு யானை எறிந்த எற்கே."

(புறம். 303)

வேல்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான்மீண்டு எறிந்த தார்நிலையும் - வேல்வென்றி மிகலையே கண்ணோக்குடையனாய்க் களத்து முகப்பிற் சென்ற வேந்தனை மாற்றார் சூழ்ந்த இடத்து வேந்தன் பாலினனாய மற்றொரு தலைவன் தன் நிலை விட்டுத் தன்வேந்துமாட்டு அடுத்துத் துணையாய் மாற்றாரை எறிந்த தார்நிலையும்.

உதாரணம்

"நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே
இறையுறு விழுமம் தாங்கி அமரகத்து
இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்து
மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
வடுவின்று வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்து
ஈர்ந்தை11 யோனே பாண்பாசிப் பகைஞன்"

(புறம். 180)
எனப் பாணன் அது தோன்றப் புகழ்ந்தவாறு காண்க.

அன்றி இருவர் தலைவர் தபுதிபக்கமும் - அஃதல்லாமல் படைநின்று பொராநின்ற இருவரும் தம்முள் பொருது படுதலும்.

உதாரணம்

"காய்ந்து கடுங்களிறு கண்கனலக் கைகூடி
வேந்தர் இருவரும் விண்படர - ஏந்து
பொருபடை மின்னப் புறங்கொடா பொங்கி
இருபடையும் நீங்கா இகல்."

(புறப். தும்பை. 12)

ஒருவன் ஒருவனை உடைபடை புக்கு கூழை தாங்கிய பெருமையும் - ஒருவன் ஒருவனைக் கெடுபடையின்கண் புக்குக் கூழை தாங்கிய பெருமையும்.

உதாரணம்

"கோட்டங் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய
திணிநிலை அலறக் கூழை போழ்ந்துதன்
வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி
ஓம்புமின் ஓம்புமின் இவணென ஓம்பாது
தொடர்கொள் யானையிற் குடர்கால் தட்பக்
கன்றமர் கறவை மான
முன்சமத்து எதிர்ந்ததன்12 தோழற்கு வருமே"

(புறம். 275)

படை அறுத்து பாழிகொள்ளும் ஏமமும் - கருவியை அறுத்து மல்லினால் கொள்ளும் ஏமமும்.[அத்தும் ஆனும் சாரியை.]

உதாரணம்

"நீலக் கச்சைப் பூவார் ஆடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வருங் களிற்றொடு வேல்துரந்து இனியே
தன்னுந் துரக்குவன் போலும் ஒன்னலர்
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
கையின் வாங்கித் தழீஇ
மொய்ம்பின் ஊக்கி மெய்க்கொண் டனனே."

(புறம். 274)

களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும் - களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும்.

உதாரணம்

"ஆசாகு13 எந்தை யாண்டுளன் கொல்லோ
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்
வம்பலன் போலத் தோன்றும் உதுக்காண்
வேனல்14 வரியணில் வாலத்து அன்ன
கான ஊகின் கழன்றுக முதுவி
அரியல்15 வான்குழல் சுரியல் தங்க
நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்16
பேருயிர் கொள்ளும் மாதோ அதுகண்டு
வெஞ்சின யானை வேந்தனும் இக்களத்து
எஞ்சலிற் சிறந்தது பிறிதொன்று இல்லெனப்
புணர்கொளற்கு அருமை நோக்கி
நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே."

(புறம். 307)

களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும் - களிற்றுடன் போந்து மலைந்துபட்ட இறைவனை மிக்க வேந்தன் படையாளர் நெருங்கி மற்றவனைப் பாடும்பாட்டும்.

அமல் - நெருங்கல். அதனாலாய பாட்டிற்கு ஏற்புடைத்தாயிற்று.

உதாரணம்

"விழவுவீற் றிருந்த வியலுள்17 ஆங்கண்
கோடயர் முழவின் முன்னர் ஆடல்
வல்லான் அல்லன் வாழ்கவன்18 கண்ணி
வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த்து
இலங்கு பூணன் பொலங்குடி உழிஞையன்
மடம்பெரு மையின் உடன்றுமேல் வந்த
வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி
வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே."

(பதிற்றுப். 56)

வாள் வாய்த்து இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியா தொகைநிலையும் - வாள் தொழில் முற்றி இரு பெருவேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாமல் பட்ட பாடும்.['கண்' என்பது இடைச்சொல்].

உதாரணம்

"வருதார் தாங்கி அமர்மிகல் யாவது
பொருதாண்டு ஒழிந்த மைந்தர்புண் தொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி
நிறங்கிளர் உருவில் பேஎய்ப் பெண்டிர்
எடுத்தெறி அனந்தல் பறைச்சீர் தூங்கப்
பருத்தருந்து உற்ற தானையொடு செருமுனிந்து
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாமாய்ந் தனரே குடைதுளங் கினவே
உரைசால் சிறப்பின் முரைசொழிந் தனவே
பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
இடங்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்
களங்கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர
உடன்வீழ்ந் தன்றால் அமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தனரே
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவி னோரும் ஆற்ற
அரும்பெறல் உலகம் நிறைய
விருந்துபெற் றனரால் பொலிக நும் புகழே."

(புறம். 62)

செரு அகத்து இறைவன் வீழ்வுறச் சினைஇ ஒருவனை மண்டிய நல்லிசை நிலையும் - பொருகளத்துத் தன்வேந்தன் பட அதுகண்டு கறுத்தெழுந்து படைத்தலைவன் வீரனொருவனை நெருங்கிப் பொருத ஒரு நற்புகழ் நிலைமையும்.

உதாரணம்

"வானம் இறைவன் படர்ந்தென வாள்துடுப்பா
மானமே நெய்யா மறம் விறகாத் - தேன்இமிரும்
கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோன் வாளமர்
ஒள்ளழலுள் வேட்டான் உயிர்."

(புறப். தும்பை. 26)

பலபடை ஒருவற்கு உடைதலின் அவன் ஒள்வாள் வீசிய நூழிலும் - பல படை ஒருவற்குக் கெடுதலின் அவன் ஒள்ளிய வாள் வீசிய நூலிலும்.

அது பலரைக் கொல்லுதல், ['மற்று' அசை.]

உதாரணம்

"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்றிவ் வுலகத்து இயற்கை
இன்றின் ஊங்கோ கேளலம் திரளரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்19
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி20
ஒலியல் மாலையொடு பொலியச் சூடிப்
பாடின் தெண்கிணை கறங்கக் காண்டக
நாடுகெழு திருவிற் பசும்பூண்21 செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதா னாகிப் பொருதுகளத்து அடலே"

(புறம். 76)
எனவும்,

"வள்ளை நீக்கி வயமீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
வேழப் பழனத்து நூழில் ஆட்டு."

(மதுரைக்காஞ்சி. 255-7)
எனவும் பல உயிரை ஒருவன் கொன்றதனை நூழில் என்றவாறு அறிக.

உளப்பட புல்லித்தோன்றும் பன்னிருதுறைத்து உட்படப் பொருந்தித் தோன்றும் பன்னிருதுறைகளையுடைத்து,[ஏகாரம் ஈற்றசை.]

(14)

1. துறக்கம்புகு வேட்கையுடைமையிற் காலாளை முற்கூறி அதன் பின்னர், மதத்தால் கதம் சிறந்து தானும் போர்செய்யும் யானையைக்கூறி, மதம் சிறவாமையிற் கதம் சிறவாத குதிரையை அதன்பிற் கூறினார்.

குதிரையானன்றித் தேர் செல்லாமையின் தேர்க்கு மறமின்றென்று அது கூறாராயினார்.

நிலை என்னாது வகைஎன்றதனான் அம்மூன்று நிலையும் தாமே மறம் சிறப்பப் பொருது வீழ்தலும், அரசன் ஏவலில் தானை பொருது வீழ்தலும், யானையுங் குதிரையும் ஊர்ந்தார் ஏவலில் பொருதலும் , படையாளர் ஒருவர் ஒருவர் நிலை கூறலும், அவருக்கு உதவலும் என இப்பகுதியெல்லாம் கொள்க.

(நச்சி.)

(பாடம்) 2. எருமையும்.
3. வீழ்ந்தெனச்.
4. ஒருவன்.
5. தழீஇக்.
(பாடம்) 6. ஈர்ங்காழ்.
7. அழிக்கும்.
8. நெடுவேல்.
9. முன்னீர்த்.
10. திறையிற்.
11. ஈரந்தை.
(பாடம்) 12. ஒழிந்தன.
13. அரசர்.
14. வேனில், வெரிநிலை.
15. விரியல்.
(பாடம்) 16. தெவ்வர்ப்.
17. வியலூர்.
18. வாழ்கவவன்.
(பாடம்) 19. நுண்தளிர்.
20. தெரியல்.
21. பெரும்பூண்.