இது வாகைத் திணையாமாறு உணர்த்துதல் (இ-ள்) வாகை பாலையது புறன் - வாகைத்திணை பாலை என்னும் அகத்திணையினது புறனாம்; தாவில் கொள்கை தத்தம் கூற்றை பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப - அது கேடில்லாத கோட்பாட்டினையுடைய தத்தமக்குள்ள இயல்பை வேறுபட மிகுதிப்படுத்தல் என்பர். அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், பாலையாவது தனக்கென ஒருநிலமின்றி எல்லா நிலத்தினும் காலம்பற்றிப் பிறப்பது போல இதுவும் எல்லா நிலத்தினும் எல்லாக் குலத்தினும் காலம்பற்றி நிகழ்வதாகலினாலும், ஒத்தார் இருவர் புணர்ச்சியினின்றும் புகழ்ச்சி காரணமாகப் பிரியுமாறுபோலத் தன்னோடு ஒத்தாரினின்றும் நீங்கிப் புகழ்ப்படுதலாலும் அதற்கிது புறனாயிற்று. அஃது ஆமாறு வருகின்ற சூத்திரங்களானும் விளங்கும். (15)
1. இதனை 18, 19 என இரண்டு சூத்திரம் ஆக்குவர். (நச்சி.) தாவில் கொள்கை எனவே, இரணியனைப்போல வலியானும் வருத்தத்தானும் கூறுவித்துக் கோடல் வாகை அன்றாயிற்று. (நச்சி.) 2. பாகுபட மிகுதிப்படுத்தலாவது இருவகைப்பட மிகுதிப்படுத்தல் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. இருவகையான, தன்னைத்தானே மிகுதிப்படுத்தலும் , பிறர்மீக்கூறு படுத்தலுமாம். (நச்சி.)
|