இது, வாகைத்திணை பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) பார்ப்பனப் பக்கம் முதலாகப் பொருநர் பக்கம் ஈறாகச் சொல்லப்பட்ட அத்தன்மைத்தாகிய நிலைவகையோடே ஏழ்வகையால் தொகை நிலைபெற்றது [வாகைத்திணை] எனவே தொகைநிலை பலவென்பது பெறுதும். அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் - ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும். அறுவகைப்பட்ட பக்கம் எனக் கூட்டுக. அவையாவன:- ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன. இவ்வொழுக்கத்தால் மிகுதல் வகையாம் என்பது.பார்ப்பனப் பக்கமும் என்றதனான் அப்பொருளின் மிகுதி கூறலும் இதன்பாற் படும். இது மேல் வருவனவற்றிற்கும் ஒக்கும். ஓதலாவது கல்வி. ஓதல் வருமாறு"இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் எம்மை உலகத்தும் யாங்காணேம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து." (நாலடி.கல்வி. 2) இது கல்வியின் விழுப்பம் கூறிற்று."ஆற்றவுங் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை அந்நாடு வேற்றுநா டாகா தமவேயாம் ஆதலால்3 ஆற்றுணா வேண்டுவ தில்." (பழமொழி- 116) இது கற்றோர்க்கு உளதாகும் விழுப்பம் கூறிற்று. இஃது ஏனைய மூன்று வருணத்தார்க்கும் ஒக்கும். ஓதுவித்தலாவது - கற்பித்தல். ஓதுவித்தல் வருமாறு"எண்பொருள ஆகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு." (குறள் - 124) வேட்டலாவது - வேள்வி செய்தல். வேட்டல் வருமாறு"நன்றாய்ந்த நீள்நிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகாது ஒன்றுபுரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒருமுதுநூல் இகல்கண்டோர் மிகல்சாய்மார் மெய்அன்ன பொய்யுணர்ந்து பொய்ஓராது மெய்கொளீஇ மூவேழ் துறையும் முட்டின்று போகிய உரைசால் சிறப்பின் உரவோர் மருக வினைக்குவேண்டி நீபூண்ட புலப்புல்வாய்க் கலைப்பச்சை கவற்பூண்ஞாண் மிசைப்பொலிய மறங்கடிந்த அருங்கற்பின் அறம்புகழ்ந்த4 வலைசூடிச் சிறுநுதற்பேர் அகலல்குற் சிலசொல்லிற் பல கூந்தல் நின் நிலைக்கொத்தநின் துணைத்5 துணைவியர் தமக்கமைந்த தொழில் கேட்பக் காடென்றா நாடென்றாங்கு ஈரேழின் இடமுட்டாது நீர்நாண நெய்வழங்கியும் எண்நாணப் பலவேட்டும் மண்நாணப் புகழ்பரப்பியும் அருங்கடிப் பெருங்காலை விருந்துற்றநின் திருந்தேந்துநிலை என்றும், காண்கதில் அம்ம யாமே குடாஅது பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பின் பூவிரி புதுநீர்க் காவிரி புரக்குந் தண்புனல் படப்பை எம்மூர் ஆங்கண் உண்டுந் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம் செல்வல் அத்தை யானே செல்லாது மழை அண் ணாப்ப நீடிய நெடுவரைக் கழைவளர் இமயம் போல நிலீஇயர் அத்தைநீ நிலமிசை யானே." (புறம். 166) வேட்பித்தலாவது, வேள்வி செய்வித்தல். "நளிகடல்இருங் குட்டத்து" என்னும் புறப்பாட்டினுள், "ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்றம் ஆக மன்னர் ஏவல் செய்ய மன்னிய வேள்வி முற்றிய வாள்வாய் வேந்தே" (புறம். 26) என அரசன் வேட்பித்தவாறும், பார்ப்பார் வேட்டவாறும் கண்டு கொள்க.ஈதலாவது, இல்லென இரந்தோர்க்குக் கொடுத்தல். உதாரணம்"இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே உள." (குறள்.223) ஏற்றலாவது, கோடல்: கொள்வோன் தனது சிறப்பிற் குன்றாமல் கோடல். உதாரணம்"இரவலர் புரவலை நீயும் அல்லை புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர் இரவலர் உண்மையும் காண்இனி இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண்இனி நின்னூர்க் கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த நெடுநல் யானைஎம் பரிசில் கடுமான் தோன்றல் செல்வல் யானே." (புறம்.112) 6ஐவகை மரபின் அரசர் பக்கமும் - ஐவகைப் பட்ட அரசர் பக்கமும். அவையாவன: ஓதலும் வேட்டலும் ஈதலும் படைவழங்குதலும் குடியோம்புதலுமாம். இவற்றுள் முந்துற்ற மூன்றும் மேற்சொல்லப் பட்டன. ஏனைய இரண்டும் இனிக் கூறப்படுகின்றன. படை வழங்குதல் வருமாறு"கடுங்கண்ண கொல்களிற்றால் காய்புடைய எழுமுருக்கிப் பொன்னியல் புனைதோட்டியான் முன்புதுரந்து சமம்தாங்கவும் பாருடைத்த குண்டகழி நீரழுவ நிவப்புக் குறித்து நிமிர் பரிய மா தாங்கவும் ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசை சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவுங் குரிசில் வலிய வாகுநின் தாள்தோய் தடக்கை புலவுநாற் றத்த பைந்தடி பூநாற்றத்த புகைகொளீஇ ஊன்துவை கறிசோறு உண்டு வருந்து தொழில் அல்லது பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும் மெல்லிய பெரும தாமே நல்லவர்க்கு ஆரணங் காகிய மார்பிற் பொருநர்க்கு இருநிலத் தன்ன நோன்மைச் செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே." (புறம்.14) குடியோம்புதல் வருமாறு"இருமுந்நீர்க் குட்டமும் வியன்ஞாலத்து அகலமும் வளிவழங்கு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றாங்கு, அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை அறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும் சோறுபடுக்குந் தீயொடு செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெறல் அறியார்நின் நிழல்வாழ் வோரே திருவில் அல்லது கொலைவில் அறியார் நாஞ்சில் அல்லது படையும் அறியார் திறனறி வயவரொடு தெவ்வர் தேயஅப் பிறர்மண் உண்ணுஞ் செம்மல்நின் நாட்டு வயவுறு மகளிர் வேட்டுணின் அல்லது பகைவர் உண்ணா அருமண் ணினையே அம்பு துஞ்சும் கடி அரணால் அறந்துஞ்சும் செங்கோலையே புதுப்புள் வரினும் பழம்புள் போகினும் விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை அனையை ஆகல் மாறே மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே." (புறப்.20) 'பக்கம்' என்றதனான் அரசரைப்பற்றி வருவனவற்றிற்கெல்லாம் இதுவே ஓத்தாகக் கொள்க. இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் - ஆறு மரபினையுடைய வணிகர் வேளாளர் பக்கமும். வணிகர்க்குரிய ஆறுபக்கமாவன:- ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வாணிகம், நிரையோம்பல். உதாரணம்"உழுது பயன்கொண் டொலிநிரை ஓம்பிப் பழுதிலாப் பண்டம் பகர்ந்து - முழுதுணர ஓதி அழல்வழிபட் டோம்பாத ஈகையான் ஆதி வணிகர்க் கரசு." (புறப்.வாகை. 10) வேளாண் மாந்தர்க்குரிய ஆறு மரபாவன: உழவு, உழவொழிந்த தொழில், விருந்தோம்பல், பகடு புறந்தருதல், வழிபாடு, வேதம் ஒழிந்த கல்வி. உதாரணம்"சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும்7 உழவே தலை." (குறள். 1031) "கருமஞ் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையில் பீடுடைய தில்." (குறள். 1021) "இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்." (குறள். 1035) "பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி." (புறம். 35) "இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோ டின்ன - குடிப்பிறந்தார் குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோ டொன்றா உணரற்பாற் றன்று." (நாலடி. குடிப்பிறப்பு. 4) "வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே." (புறம். 183) இவை ஆறும் வந்தவாறு காண்க.மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் - குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன் பக்கமும். இறந்தகாலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றாலோ வெனின், அது முழுதுணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது பொருளன்றென்க. பன்னிரு படலத்துள், "பனியும் வெயிலுங் கூதிரும் யாவும், துனியில் கொள்கையொடு நோன்மை எய்திய தணிவுற்று அறிந்த கணிவன் முல்லை" எனவும் ஓதுதலின் மேலதே பொருளாகக் கொள்க. அறிவன் என்றது கணியனை. மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதலாவது, பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளுந் தூமமும் மீன்வீழ்வும் கோள்நிலையும் மழைநிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல். ஆதலான் 'மூவகைக் காலமும் நெறியின் ஆற்றின் அறிவன்' என்றார். உதாரணம்"புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப் பரிவின்றிப் பட்டாங் கறியத் - திரிவின்றி விண்ணிவ் வுலகம் விளைக்கும் விளைவெல்லாம் கண்ணி உரைப்பான் கணி." (புறப்.வாகை. 20) நால் இரு வழக்கின் தாபத பக்கமும் - எட்டுவகைப்பட்ட வழக்கினையுடைய தாபதர் பக்கமும். அவையாவன;- நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலுடுத்தல், சடைபுனைதல், எரியோம்பல், ஊரடையாமை, காட்டிலுள்ள உணவுகோடல், தெய்வப்பூசையும் அதிதி பூசையும் செய்தல். உதாரணம்"நீர்பலகால் மூழ்கி நிலத்தசைஇத் தோல்உடையாச் சோர்சடை தாழச்சுடர்ஓம்பி - ஊரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத்து உய்க்கும் வழி." (புறப்.வாகை. 14) "ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின் பாவை யன்ன குறுந்தொடி மகளிர் இழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும் கழைக்கண் நெடுவரை அருவி ஆடிக் கான யானை தந்த விறகின் கடுந்தெறற் செந்தீ வேட்டுப் புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே." (புறம். 251) "கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம்பெயர்ந்து தில்லை அன்ன புல்லென் சடையோடு அள்ளிலைத் தாளி கொய்யு மோனே இல்வழங்கு மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே." (புறம். 252) இவற்றுள்ளும் சில வந்தவாறு காண்க.பால் அறி மரபின் பொருநர் கண்ணும் - பாகுபாடு அறிந்த மரபினையுடைய பொருநர் பக்கமும். அஃதாவது, வாளானும் தோளானும் பொருதலும் வென்றி கூறலும் வாகையாம் என்றவாறு. வாளால் மிகுதல் வருமாறு"ஏந்துவாள் தானை இரிய உரைகழித்துப் போந்துவாள் மின்னும் பொருசமத்து - வேந்தர் இருங்களி யானை இனமிரிந் தோடக் கருங்கழலான் கொண்டான் களம்." (புறப்.வாகை. 26) மல்வென்றி வருமாறு"இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண் மைந்துடை மல்லன் மதவலி முருக்கி ஒருகால் மார்பொதுங் கின்றே ஒருகால் வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப் 8போர்அருந் தித்தன் காண்கதில் அம்ம பசித்துப் பணைமுயலும் யானை போல இருதலை ஒசிய எற்றிக் களம்புகு மல்லற் கடந்தடு நிலையே." (புறம். 80) அனை நிலைவகையொடு - வாளானும் தோளானும் பொருது வேற லன்றி அத்தன்மைத்தாகிய நிலைவகையான் வேறலொடு. அஃதாவது, சொல்லான் வேறலும், பாட்டான் வேறலும், கூத்தான் வேறலும், சூதான் வேறலும், தகர்ப் போர் பூழ்ப் போர் என்பனவற்றான் வேறலும். பிறவும் அன்ன. "விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்." (குறள். 148) இது சொல் வென்றி."வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணான் பாடினான் வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக் - கண்டறியக் கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையாழ் அந்நரம்பும் அச்சுவையும் ஆய்ந்து." (புறப்.பெருந்திணை. 18) இது பாடல் வென்றி."கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக் கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு - பெய்பூப் படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின்று ஆடும் தொடுகழல் மன்னன் துடி." (புறப்.பெருந்திணை. 17) இஃது ஆடல் வென்றி."கழகத் தியலுங் கவற்று9 நிலையும் அளகத் திருநுதலாள் ஆய்ந்து - கழகத்திற்10 பாய வகையாற் பணிதம் பலவென்றாள் ஆய நிலையம்11 அறிந்து." (புறப்.பெருந்திணை. 19) இது சூதுவென்றி. பிறவும் வந்தவழிக் காண்க.எழுவகையான் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர் - ஏழ்வகையான் தொகைநிலை பெற்றதென்று கூறுவர் புலவர். [ஆங்கு என்பது அசை.] (16)
1. ஆறு பார்ப்பியல் என்னாது வகை என்றதனான், அவை தலை, இடை, கடை என ஒன்று மும்மூன்றாய்ப் பதினெட்டாம் என்று கொள்க; அவை ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், கொடுத்தல், கோடல் என ஆறாம் இருக்கும், எசுரும், சாமமும் இவை தலையாய ஓத்து. இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தான் ஆராயப்படுதலின் இலக்கியமும் ஆயின. அதர்வமும், ஆறங்கமும் தருமநூலும் இடையாய ஓத்து. இதிகாசமும் புராணமும் வேதத்துக்கு மாறுபடுவாரை மறுக்கும் உறழ்ச்சி நூலும், அவரவர் அதற்கு மாறுபடக் கூறும் நூல்களும் கடையாய ஓத்து. எழுத்து சொல்லும் பொருளும் ஆராய்ந்து இம்மைப்பயன் தருதலின், அகத்தியம் தொல்காப்பியம் முதலிய தமிழ் நூல்களும் இடையாய ஓத்து ஆம் என்று உணர்க. இவையெல்லாம் இலக்கணம். இராமாயணமும் பாரதமும் போல்வன இலக்கியம். இனி, தமிழ்ச் செய்யுட் கண்ணும் இறையனாரும் அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும் வான்மீகனாரும் கவுதமனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச் சங்கத்தார் செய்தன இடையும், கடைச்சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க. (நச்சி.) (பாடம்) 2. வகையில். 3. ஆயினால். 4. அறம்புகர்ந்த. 5. மனித். 6. வகை யென்றதனானே களவு செய்தோர் கையிற் பொருள்கோடலும், ஆறில் ஒன்று கோடலும், சுங்கம் கோடலும், அந்தணர்க்கு இறையிலி கொடுக்குங்கால் இத்துணைப் பொருள் நும்மிடத்து யான் கொள்வல் எனக் கூறிக்கொண்டு அது கோடலும், மறம் பொருளாகப் பகைவர் நாடு கோடலும், தமரும் அந்தணரும் இல்வழிப் பிறன் தாயங்கோடலும், பொருள் இல்வழி வாணிகம் செய்து கோடலும், அறத்தில் திரிந்தாரைத் தண்டத்தில் தகுமாறு பொருள் கோடலும் போல்வன கொள்க. அரசியல் என்னாது பக்கம் என்றதனான் அரசர் ஏனை வருணத்தார்கண் கொண்ட பெண்பாற்கண் தோன்றிய வருணத்துப் பகுதியோரும் சில தொழிற்குரியர் என்று கொள்க. (நச்சி.) (பாடம்) 7. உழன்றும். 8. பொரலருந். 9. கவற்றி. 10. புழகத்து. 11. வகையும்.
|