புறத்திணை இயல்

75கூதிர் வேனில் என்றிரு பாசறைக்
காதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும்1
ஏரோர் களவழி அன்றிக் களவழித்
தேரோர் தோற்றிய வென்றியுந் தேரோர்
வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்
ஒன்றிய மரபிற் பின்தேர்க் குரவையும்
பெரும்பகை தாங்கும் வேலி னானும்
அரும்பகை தாங்கும் ஆற்ற லானும்
புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்
ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச்
சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்த்துத்2
தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி யானும்
ஒல்லார் இடவயிற் புல்லிய பாங்கினும்
பகட்டி னானும் மாவி னானுந்
துகள்தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்
கடிமனை நீத்த பாலின் கண்ணும்3
எட்டுவகை நுதலிய அவையகத்4 தானும்
கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும்
இடையில் வண்புகழ்க் கொடையி னானும்5
பிழைத்தோர்த் தாங்குங் காவ லானும்
பொருளொடு புணர்ந்த பக்கத் தானும்
அருளொடு புணர்ந்த அகற்சி யானும்
காமம் நீத்த பாலி னானுமென்று
இருபாற் பட்ட ஒன்பதின் துறைத்தே.

இது, வாகைத்துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) கூதிர்ப்பாசறை முதலாகச் சொல்லப்பட்ட பதினெட்டுத் துறையும் வாகைத்துறையாம். எனவே, மேற் சொல்லப்பட்ட ஏழ் வகையும் திணை யென்று கொள்க.

கூதிர் வேனில் என்று இரு பாசறை காதலின் ஒன்றி கண்ணிய வகையும் - கூதிர்ப்பாசறையும் வேனிற்பாசறையும் என்று சொல்லப்பட்ட இருவகைப் பாசறைகளையும் போரின்மீது கொண்ட காதலாற் பொருந்திக் கருதிய போர்நிலை வகையும்.

இவை இரண்டும் ஒரு வகை. [இச் சூத்திரத்தில் வரும் இன்னும் ஆனும் இடைச்சொற்கள்].

உதாரணம்

"கவலை மறுகின் கடுங்கண் மறவர்
உவலைசெய் கூறை ஒடுங்கத் - துவலைசெய்
கூதிர் நலியவும் உள்ளான் கொடித்தேரான்
மூதில் மடவாள் முயக்கு."

(புறப்.வாகை. 117)
பிறவும் அன்ன,

ஏரோர் களவழி அன்றி களவழி தேரோர் தோற்றிய வென்றி - ஏரோர் களவழி கூறுதலும் அன்றிப் போரோர் களவழி தேரோர் தோற்றுவித்த வென்றியும்.

உதாரணம்

"இருப்புமுகஞ் செறித்த ஏந்தெழின் மருப்பின்
கருங்கை6 யானை கொண்மூ வாக
நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள்மீன் ஆக வயங்குகடிப் பமைந்த7
குருதிப் பலிய முரசுமுழக் காக
அரசு அராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்
வெவ்விசைப் புரவி வீசுவளி யாக
விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த8
கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
ஈரச் செறுவயின் தேர்ஏர் ஆக
விடியல் புக்கு நெடிய நீட்டிநின்
செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சால்9
பிடித்தெறி வெள்வேல்10 கணையமொடு வித்தி
விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்
பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு
கணநரி யோடு11 கழுதுகளம்12 படுப்பப்
பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்
பாடுநர்க் கிருந்த பீடுடை யாள
தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை
அரிக்குரல் தடாரி யுருப்ப ஒற்றிப்
பாடி வந்திசின் பெரும பாடான்று
எழிலி தோயும் இமிழிசை அருவிப்
பொன்னுடை நெடுங்கோட்டு இமயத்து அன்ன
ஓடை நுதல ஒல்குதல்13 அறியாத்
துடிஅடிக் குழவிப் பிடியிடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி
தாழா ஈகைத் தகைவெய் யோயே"

(புறம், 369)
இஃது ஏரோர் களவழி.

"ஓஒ உவமை14 உறழ்வின்றி ஒத்ததே
காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலாய்
ஆவுகை காளாம்பி போன்ற புனல்நாடன்
மேவாரை அட்ட களத்து."

(களவழி. 39)
இது போரோர் களவழி.

"நளிகடல் இருங்குட்டத்து
வளியுடைத்த கலம்போலக்
களிறுசென்று களன் அகற்றவும்
களனகற்றிய வியலாங்கண்
ஒளிறிலைய எஃகேந்தி
அரசுபட அமருழக்கி
உரைசெல முரசுவௌவி
முடித்தலை அடுப்பாகப்
புனற்குருதி உலைக்கொளீஇத்
தொடித்தோள் துடுப்பில் துழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாள்வாய் வேந்தே
நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர்பெற்று
ஆற்றா ராயினும் ஆண்டுவாழ் வோரே."

(புறம். 29)
இது கனவேள்வி.

தேரோர் வென்ற கோமான் தேர்முன் குரவையும் - தேரோரைப் பொருது வென்ற அரசன் தேர்முன் ஆடுகுரவையும்.

உதாரணம்

"...................................
களிற்றுக்கோட் டன்ன வாலெயிறு அழுத்தி
விழுக்கொடு விரைஇய வெள்நிணச் சுவையினன்
குடர்த்தலை மாலை சூடி15 உணத்தின
ஆனாப் பெருவளஞ் செய்தோன் வானத்து
வயங்குபல் மீனினும் வாழியர் பலவென
உருகெழு பேய்மகள் அயரக்
குருதித்துகள் ஆடிய களங்கிழ வோயே."

(புறம். 371)

ஒன்றிய மரபின் தேர்ப்பின் குரவையும் - பொருந்திய மரபின் தேர்ப்பின் ஆடு குரவையும்.

உதாரணம்

"வஞ்சமில் கோலானை வாழ்த்தி வயவரும்
அஞ்சொல் விறலியரும் ஆடுபவே - வெஞ்சமத்துக்16
குன்றேர் மழகளிறுங் கூந்தற் பிடியும்போல்
பின்தேர்க் குரவை பிணைந்து."

(புறப்.வாகை. 8)

பெரும்பகை தாங்கும் வேலும் - பெரிய பகையினைத் தாங்கும் வேலினைப் புகழுமிடமும்.

உதாரணம்

"இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து
கடியுடை வியனக ரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயிற் பதங்கொடுத்து
இல்லாயின் உடனுண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே"

(புறம்.95)

"...................................
நிலைதிரிபு எறியத் திண்மடை கலங்கிச்
சிதைதலுய்ந் தன்றோ நின்வேல் செழிய"

(புறம். 25)
என்பதும் அது.

அரும்பகை தாங்கும் ஆற்றலும் - பொருதற்கரிய பகையைப் பொறுக்கும் ஆற்றலும்.

உதாரணம்

"களம்புகல் ஒம்புமின் தெவ்விர் போரெதிர்ந்து
எம்முளும் உளனொரு பொருநன் வைகல்
எண்தேர் செய்யுந் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே"

(புறம். 87)
எனவும்,

"என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின் றவர்."

(குறள். 77)

புல்லாவாழ்க்கை வல்லாண் பக்கமும் - பொருந்தாத வாழ்க்கையினையுடைய வல்லாண் பக்கமும்.

உதாரணம்

"எருதுகால் உறாஅது இளைஞர்17 கொன்ற
சில்வினை வரகின் புல்லென் குப்பை
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டுகடை தப்பலின்
ஒக்கல் ஒற்கஞ் சொலியத் தன்னூர்ச்
சிறுபுல் ஆளர் முகத்தவை கூறி
வரகுகடன் இரக்கும் நெடுந்தகை
அரசுவரில் தாங்கும் வல்லா ளன்னே"

(புறம். 327)

ஒல்லார் நாண பெரியவர்க் கண்ணி சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்த்து தொல் உயிர் வழங்கிய அவிப்பலியும் - பொருந்தாதார் நாணுமாறு தலைவரைக் குறித்து முன்பு சொன்ன வஞ்சின மரபின் ஒன்றொடு பொருந்தித் தொன்றுதொட்டு வருகின்ற உயிரை வழங்கிய அவிப்பலியும்.

உதாரணம்

"சிறந்த திதுவெனச் செஞ்சோறு வாய்ப்ப
மறந்தரு வாளமர் என்னும் - பிறங்கழலுள்
ஆருயிர் என்னும் அவிவேட்டார் ஆங்கஃதால்
வீரியரெய் தற்பால வீடு"

(புறப்.வாகை. 30)
எனவும்,

"இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்."

(குறள். 776)
எனவும் வரும்.

ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கும் - பொருந்தாதார் இடத்தின்கண் பொருந்திய பக்கமும்.

அஃதாவது, போரில்வழி நாடு கைத்தென்று கொண்டு உவத்தல். (கைத்து - கையகப்பட்டது. உவத்தல் - வெகுளிவிட்டிருத்தல்.)

உதாரணம்

"மாண்டனை பலவே போர்மிகு குருசில்நீ
மாதிரம் விளக்குஞ் சால்புஞ் செம்மையும்
முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற
மிக்கெழு கடுந்தார் துய்த்தலைச் சென்று
துப்புத்துவர் போகப் பெருங்கிளை உவப்ப
ஈத்தான்று ஆனா இடனுடை வளனும்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
எல்லாம் எண்ணின் இடுகழங்கு தபுந
கொன்னொன்று மருண்டனென் அடுபோர்க் கொற்றவ
நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப்
பெருமலை யானையொடு புலங்கெட இறுத்துத்
தடந்தாள் நாரை படிந்திரை கவரும்
முடந்தை நெல்லில் கழை அமல் கழனிப்
பிழையா விளையுள் நாடகப் படுத்து
வையா மாலையர் விசையுநர்க் கறுத்த
பகைவர் தேஎத்து ஆயினும்
சினவாய் ஆகுதல் இறும்பூதாற் பெரிதே"

(பதிற்றுப். 32)
என்பதனுள் பகைவர் நாடு கைக்கொண்டிருந்தவாறு அறிக.

பகட்டினானும் ஆவினானும் துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும் - பகட்டினானும் ஆவினானும் குற்றம் தீர்ந்த சிறப்பினையுடைய சான்றோர் பக்கமும்.

பகட்டால் புரை தீர்ந்தார் வேளாளர். ஆவால் குற்றம் தீர்ந்தார் வணிகர், இவ்விரு குலத்தினும் அமைந்தார் பக்கமும். அவர் குலத்தினுள் அளவால் மிக்க நீர்மையராதலின் வேறு ஓதப்பட்டது.

உதாரணம்

"உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழெனில் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே."

(புறம். 182)
கடிமனை நீத்த பாலும் - கடிமனை நீத்த பக்கமும்.

அஃதாவது, பிறர்மனை நயவாமை. மேல், 'காமநீத்த பாலினானும்' என்று ஓதுகின்றாராகலின், இது மனையறத்தின் நின்றோரை நோக்கவரும்.

உதாரணம்

"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்(கு)
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு."

(குறள் - 148)

எட்டுவகை நுதலிய அவையகமும் - எட்டுப் பாகுபாட்டைக் குறித்த அவையகமும்.

எட்டுவகை குறித்த அவையகம் என்றமையான், ஏனைய அவையின் இவ்வவை மிகுதி உடைத்தென்றவாறு. அவையாவன:- குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறாமை அவாவின்மை என்பன.

அவை எட்டினானும் அவை வருமாறு:

"குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி
விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு நாமுற
வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையின்
காத லின்பத்துள் தங்கித் தீதறு
நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும்
அழுக்காறு இன்மை அவாஅ இன்மையென
இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டும்
தோலா நாவின் மேலோர் பேரவை
உடனமர்18 இருக்கை ஒருநாட் பெறுமெனின்
பெருகதில் அம்ம யாமே வரன்முறைத்
தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து
நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது
நிலையழி யாக்கை வாய்ப்பஇம்
மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே."

(ஆசிரியமாலை)

கட்டமை ஒழுக்கத்து கண்ணுமையும் - கட்டுதல் அமைந்த ஒழுக்கத்தினைக் குறித்த நிலையினும்.

அஃதாவது, இல்லறத்திற்கு உரித்தாக நான்கு வருணத்தார்க்குச் சொல்லப்பட்ட அறத்தின் கண் நிற்றல். அவையாவன; அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறை யுடைமை என்பன. மிகுதியாகலின், வாகை யாயின.

அடக்க முடைமையாவது, பொறிகள் ஐம்புலன்கள் மேல் செல்லாமை அடக்குதல்.

உதாரணம்

"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து"

(குறள். 126)

ஒழுக்கமுடைமையாவது, தங்குலத்திற்கும் இல்லறத்திற்கும் ஒத்த ஒழுக்கமுடையராதல்.

உதாரணம்

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

(குறள். 131)

நடுவுநிலைமையாவது, பகைவர் மாட்டும் நட்டார் மாட்டும் ஒக்க நிற்கும் நிலைமை.

உதாரணம்

"சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி."

(குறள். 118)
வெஃகாமையாவது, பிறர் பொருளை விரும்பாமை.
உதாரணம்

"படுபயன் வெஃகிப் பழிப்படுவ19 செய்யார்
நடுவன்மை நாணு பவர்."

(குறள். 172)

புறங்கூறாமையாவது, ஒருவரை அவர் புறத்துரையாமை.

உதாரணம்

"அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது."

(குறள். 181)

தீவினையச்சமாவது, தீவினையைப் பிறர்க்குச் செய்தலை அஞ்சுதல்.

உதாரணம்

"தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னுஞ் செருக்கு."

(குறள். 311)

அழுக்காறாமையாவது, பிறர் ஆக்கம் முதலாயின கண்டு பொறாமையால் வரும் மனக்கோட்டத்தைச் செய்யாமை.

உதாரணம்

"ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்கா றிலாத இயல்பு."

(குறள். 161)

பொறையுடைமையாவது, பிறர் தமக்கு மிகுதியாகச் செய்தவழி வெகுளாமை.

உதாரணம்

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்."

(குறள். 158)

பிறவும் இந்நிகரனவெல்லாம் கொள்க.

இடையில் வண்புகழ்க்கொடையும் - இடைதலில்லாத வளவிய புகழினைத் தரும் கொடையும்.

அஃதாவது, கொடுத்தற்கு அரியன கொடுத்தல். இதுவும் பாகுபாடு மிகுதிப்படுதலின் வாகையாயிற்று.

உதாரணம்

"மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே
துன்னருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையின்20
தொன்மை மாக்களின் தொடர்பறி யலரே
தாள்தாழ் படுமணி இரட்டும் பூநுதல்
ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றனென் ஆகக் கொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என்
நாடிழந் ததனினும் நனிஇன் னாதென
வாள்தந் தனனே தலையெனக்கு ஈயத்
தன்னிற் சிறந்தது பிறிதொன்று இன்மையின்
ஆடுமலி உவகையொடு21 வருவல்
ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே."

(புறம். 165)

பிழைத்தோர்த் தாங்கும் காவலும் - தம்மாட்டுப் பிழைத்தோரைப் பொறுக்கும் ஏமமும்.

உதாரணம்

"தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉஞ் சான்றோர் கடன்."

(நாலடி.துறவு. 8)
எனவும்,

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை."

(குறள். 159)
எனவும் வரும்.

பொருளொடு புணர்ந்த பக்கமும் - மெய்ப்பொருள் உணர்ந்த பக்கமும்.

உதாரணம்

"ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு"

(குறள். 354)
எனவும்.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்"

(குறள். 351)
எனவும் வரும்.

இன்னும் பொருளொடு புணர்ந்தபக்கமும் என்றது. அறம் பொருள் இன்பம் மூன்றினும் அறனும் இன்பமும் அன்றி ஒழிந்த பொருளொடு பொருந்திய பக்கமும் என்றுமாம். பொருளாவது நாடும் அரணும் பொருளும் அமைச்சும் நட்பும் படையும்.

"படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு"

(குறள். 381)
என்பதனானும் கொள்க. அவையிற்றின் மிகுதி கூறலும் வாகையாம் நாடாவது.

"தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு."

(குறள். 731)
அரணாவது,

"கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்"

(குறள். 745)
பொருளாவது,

"உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்."

(குறள். 756)
அமைச்சாவது,

"வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆன்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு."

(குறள். 132)
நட்பாவது,

"அழிவின் அவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

(குறள். 787)
படையாவது,

"அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த
வன்கண் அதுவே படை."

(குறள். 764)

பக்கம் என்றதனால் ஒற்று, தூது, வினைசெயல்வகை, குடிமை, மானம் என வருவனவெல்லாம் கொள்க . அவற்றுட் சில வருமாறு:-

"கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று."

(குறள். 585)

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்க தறிவதாந் தூது."

(குறள். 986)

பிறவும் அன்ன இன்னும் 'பொருளொடு புணர்ந்த பக்கம்' என்றதனாற் புதல்வர்ப் பேறுங்கொள்க.

உதாரணம்

"படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே."

(புறம். 188)

அருளொடு புணர்ந்த அகற்சியும் - அருளொடு பொருந்தின துறவும்,

அஃதாவது, அருளுடைமை, கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, புணர்ச்சி விழையாமை, கள்ளுண்ணாமை, துறவு என்பனவற்றைப் பொருந்துதலாம். அவற்றுள், அருளுடைமை யொழிந்த எல்லாம் விடுதலான் 'அகற்சி' என்றார்.

அருளுடைமையாவது; யாதானும் ஓர் உயிர் இடர்ப்படுமிடத்துத் தன்னுயிர் வருந்தினாற்போல வருந்தும் ஈரமுடைமை.

"அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள."

(குறள். 141)

கொல்லாமையாவது, யாதொன்றையும் கொல்லாமை.

"அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்."

(குறள். 321)

பொய்யாமையாவது, தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை.

"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றுந்
தீமை இலாத சொலல்."

(குறள். 291)

கள்ளாமையாவது, பிறர்க்குரிய பொருளைக் களவினாற் கொள்ளாராதல்.

களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்."

(குறள். 287)
புணர்ச்சி விழையாமையாவது, பிரமசரியம் காத்தல்.

"மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றுஞ் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கில்லை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்,"

(நாலடி, தூய்தன்மை. 1)
கள்ளுண்ணாமையாவது , கள்உண்டலைத் தவிர்தல்.

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்."

(குறள். 928)
துறவாவது , தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்."

(குறள். 341)
காமம் நீத்த பாலும் - ஆசையை நீத்த பக்கமும்.
உதாரணம்

"காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடும் நோய்."

(குறள். 360)

என்று இரு பால்பட்ட ஒன்பதின் துறைத்து- என்று இரண்டு கூறுபட்ட ஒன்பது துறைத்து.


1. மரபினும்.
2. புணர்ந்து.
3. கட்டி நீத்த பாலினானும்.
4. அவையத்.
5. கொடைமையானும்.
(பாடம்) 6. பெருங்கை.
7. படைந்த.
8. உதைத்த.
9. செஞ்சால்.
10. வைவேற்.
(பாடம்) 11. பல்போர்க்கணநரி யோடு.
12. கழுகுகளம்.
13. ஒல்குநிலை.
14. உவமன்.
(பாடம்) 15. துயல்வரத் துள்ளி.
16. விறலிகளும் ஆடுபவே வெஞ்சமரில்.
(பாடம்) 17. இளையர்.
(பாடம்) 18. உடன்மரீஇ.
19. பழிப்பன.
(பாடம்) 20. ஈயாமரபின்.
21. உவகையின்.