இது, காஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) காஞ்சி பெருந்திணை புறன் - காஞ்சி என்னும் திணை பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனாம், பாங்கு அருஞ் சிறப்பின் பல் நெறியானும் நில்லா உலகம் புல்லிய நெறித்து - அது பாங்காதல் அரியசிறப்பினாற் பல நெறியாயினும் நில்லாத உலகத்தைப் பொருந்திய நெறியை யுடைத்து. பாங்கருமையாவது, ஒருவற்கு ஒரு துணையாகாமை. நிலையாமை மூவகைப்படும். இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என, இவற்றுள், இளமை நிலையாமை யாவது, "பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம் கனிஉதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும் வேற்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும் கோற்கண்ணள் ஆகுங் குனிந்து" (நாலடி - இளமை. 7) செல்வம் நிலையாமையாவது, "அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண்டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று." (நாலடி.செல்வம்.1) யாக்கை நிலையாமையாவது முன்னர்க் காட்டுதும். அதற்கு இது புறனாயவாறு என்னையெனின்,"ஏறிய மடற்றிறம்" (அகத்திணை.54) முதலாகிய நோந்திறக் காமப் பகுதி அகத்திணை ஐந்தற்கும் புறனாயவாறு போல இது புறத்திணை ஐந்தற்கும் புறனாகலானும் இதுபோல அதுவும் நிலையாமை நோந்திறம்பற்றியும் வருதலானும் அதற்கு இது புறனாயிற்று.
1. அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், எண்வகை மணத்தினும் நான்கு மணம் பெற்ற பெருந்திணை போல இக் காஞ்சியும் அற முதலாகிய மும்முதற் பொருளும் அவற்றது நிலையின்மையுமாகிய ஆறனுள்ளும் நிலையின்மை மூன்றற்கும் உரித்தாய் எல்லாத் திணைகட்கும் ஒத்தமரபிற்றாகலானும், பின்னர் நான்கும் பெருந்திணைபெறும் (தொல்.களவி14) என்ற நான்கும் சான்றோர் இகழ்ந்தாற்போல அறம் முதலியவற்றது நிலையின்மையுணர்ந்து அவற்றை அவர் இகழ்தலானும், 'ஏறிய மடற்றிறம்' (தொல்.அகத்.51) முதலிய நான்கும் தீய காமம் ஆயினவாறு போல உலகியல் நோக்கி நிலையாமையும் நற்பொருள் அன்றாகலானும், உரிப்பொருள் இடைமயங்கி வருதலன்றித் தனக்கு நிலமில்லாத பெருந்திணை போல அறம் பொருள் இன்பம்பற்றி யன்றி வேறுவேறு நிலையாமை என்பதொரு பொருளின்றாதல் ஒப்புமையானும், பெருந்திணைக்குக் காஞ்சி புறனாயிற்று. (தொல்.புறம்.22) (நச்சி.) (பாடம்) 2. பல்லாற்றானும். 3. "நில்லா உலகம்" - உலகிற்கு நிலையாமை கூறுங்கால் அறமுதலாகிய பொருட்பகுதி ஏதுவாகக் கூறினன்றி உலகு என்பதற்கு வடிவு வேறின்மையின் பல்லாற்றானும் என்று ஆன் உருபு கொடுத்தார். கெடுங்காற் கணந்தோறுங் கெடுவனவும் கற்பந்தோறுங் கெடுவனவும் ஆம் என்றற்கு ஆறு என்றார். நிலைபெற்ற வட்டினான் இவற்றின் நிலையாமை யுணர்தலின் வீடு ஏதுவாயிற்று.(தொல்.புறம்.23) (நச்சி.)
|