புறத்திணை இயல்

77மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும்
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்
பண்புற வரூஉம் பகுதி நோக்கிப்
புண்கிழித்து முடியும் மறத்தி னானும்
ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோன்
பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்
இன்னனென்று இரங்கிய மன்னை யானும்
இன்னது பிழைப்பின் இதுவா கியரெனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும்
இன்னகை மனைவி பேஎய் புண்ணோன்
துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்
நீத்த கணவற் றீர்த்த வேலின்
பெயர்த்த 1மனைவி வஞ்சி யானும்
நிகர்த்துமேல் வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பாடு அஞ்சிய மகட்பா லானும்
முலையும் முகனுஞ் சேர்த்திக் கொண்டான்2
தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ
ஈரைந் தாகும் என்ப பேரிசை
மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்
மாய்ந்த பூசல் மயக்கத் தானும்
தாமே எய்திய3 தாங்கரும் பையுளும்
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதா னந்தமும்
நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து
தனிமகள் புலம்பிய முதுபா லையும்
கழிந்தோர் தேஎத்துக் கழிபடர் உறீஇ
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்4
காதலி இழந்த தபுதார நிலையும்
காதலன் இழந்த தாபத நிலையும்
நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச்
சொல்லிடை இட்ட மாலை நிலையும்
அரும்பெருஞ்5 சிறப்பிற் புதல்வன் பயந்த6
தாய்தப வரூஉந் தலைப்பெயல் நிலையும்
மலர்தலை உலகத்து மரபுநன்கு அறியப்
பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு
நிறையருஞ் சிறப்பின் துறையிரண்டு உடைத்தே.

இது காஞ்சித்துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) 'மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை' முதலாகத் தலையொடு முடிந்த நிலையொடு கூடப் பத்தாகும் என்பர் சிலர், 'பூசல் மயக்கம்' முதலாகக் 'காடுவாழ்த்து' உட்பட வருவனவற்றொடும் இருவகைப்பட்ட துறையை உடைத்து.

[எனவே, முற்கூறிய பத்தும் ஒருவகை யென்பதும் பிற்கூறிய பத்தும் மற்றொரு வகை யென்பதும் பெறப்பட்டன.]

மாற்று அருங் கூற்றம்7 சாற்றிய பெருமையும் - மாற்றுதற்கு அரிய கூற்றம் வருமெனச் சொல்லப்பட்ட பெருங்காஞ்சியும்.

உதாரணம்

"இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்8
உடையிலை நடுவணது இடைபிறர்க் கின்றித்
தாமே யாண்ட ஏமங் காவலர்
இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம்
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே
அதனால், நீயுங் கேள்மதி அத்தை வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே
9கள்ளி யேய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பிலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்குநோக்காது
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று
நிலங்கலன் ஆக விலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாராமுன்னே
செய்ந்நீ முன்னிய வினையே
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே."

(புறம்.363)

கழிந்தோர் ஒழித்தோர்க்குக் காட்டிய முதுமையும் - அறிவான் மிக்கோர் அல்லாதார்க்குச் சொன்ன முதுகாஞ்சியும்.

உதாரணம்

"பல்சான் றீரே பல்சான் றீரே
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயன்இல் மூப்பின் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்குங் காலை இரங்குவிர் மாதோ
நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமா ரதுவே."

(புறம்.95)

பண்பு உறவரூஉம் பகுதிநோக்கிப் புண்கிழித்து முடியும் மறனும் - இயல்புற வரும் பகுதிநோக்கிப் புண்கிழித்து முடியும் மறக்காஞ்சியும்.

உதாரணம்

"நகையமர் ஆயம் நடுங்க நடுங்கான்
தொகையமர் ஓட்டிய துப்பின் - பகைவர்முன்
நுங்கிச் சினவுதல் நோனான் நுதிவேலான்
பொங்கிப் பரிந்திட்டான் புண்."

(புறப்.காஞ்சி.15)

ஏமச்சுற்றம் இன்றிப் புண்ணோன் பேஎய் ஓம்பிய பேஎய்ப்பக்கமும் - ஓம்பும் சுற்றம் இன்மையாற் புண்ணோனைப் பேய் ஓம்பிய பேய்ப்பக்கமும்.

உதாரணம்

"ஆயும் அடுதிறலாற் கன்பிலார் இல்போலும்
தோயுங் கதழ்குருதி தோள்புடைப்பப் - பேயும்
களம்புகலச் சீறிக் கதிர்வேல்வாய் வீழ்ந்தான்
உளம்புகல ஓம்பல் உறும்."

(புறப். காஞ்சி.16)

இன்னன் என்று இரங்கிய மன்னையும் - இத்தன்மையான் என உலகத்தார் இரங்கிய மன்னைக் காஞ்சியும்.

உதாரணம்

"சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகள் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணும் மன்னே
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தானிற்கும் மன்னே
நரந்த நாறுந் தன்கையாற்
புலவுநாறும் என்தலை தைவரும் மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன் மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பார்வை சோர
அஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்றவன் அருநிறத்து இயங்கிய வேலே
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
இனிப், பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன் றீகுநரு மில்லைப்
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகி யாங்குப் பிறர்க்கொன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே."

(புறம்.235)

இன்னது பிழைப்பின் இது ஆகியர் என துன் அருஞ் சிறப்பின் வஞ்சினமும் - இன்னவாறு செய்தலைப் பிழைத்தேனாயின் இன்னேன் ஆகக் கடவேன் எனக் கூறிய துன்னற்கு அரிய சிறப்பினையுடைய வஞ்சினக் காஞ்சியும் துணிவுபற்றி ['ஆகியர்' என இறந்த காலத்தாற் கூறினர்.]

உதாரணம்

"நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்
இளையன் இவனென உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாஅடிப் பணைத்தாள்
நெடுநல் யானையுந் தேரும் மாவும்
படையமை மறவரும் உடையம் யாமென்று
உறுதுப் பஞ்சாது உடல்சினஞ் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு
ஒருங்கப் படேஎ னாயின் பொருந்திய
என்நிழல் வாழ்நர் செல்நிழற் காணாது
கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றுங் கோலேன் ஆகுக
ஒங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க் கீயா இன்மையான் உறவே."

(புறம் . 72)

இன்னகை மனைவி பேஎய் புண்ணோன் துன்னுதல் கடிந்த தொடாக் காஞ்சியும் - இனிய நகையார்ந்த மனைவி பேய் புண்ணோனைக் கிட்டுதலைக் காத்த தொடாக்காஞ்சியும்.

உதாரணம்

" தீங்கனி இரவமொடு வேம்புனைச் செரீஇ
வாங்குமருப்பு யாழொடு12 பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழுது இழுகி13
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசைமணி எறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலம் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே."

( புறம் . 281)

நீத்த கணவன் தீர்த்த வேலின் பெயர்த்த மனைவி ஆஞ்சியும் - தன்னை நீத்த கணவன் விடுத்த வேலினானே மனைவி தன் உயிரையும் பெயர்த்த ஆஞ்சியும்.

உதாரணம்

"கௌவைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை
வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோன் - அவ்வேலே
அம்பிற் பிறழுந் தடங்கண் அவன்காதற்
கொம்பிற்கும் ஆயிற்றே கூற்று."

(புறப் . காஞ்சி . 23)

நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலும் - ஒத்து மாறுபட்டுத் தன் மேல் வந்த வேந்தனொடு தன் தொல்குலத்து மகட்கொடை அஞ்சிய மகட்பாற்காஞ்சியும்.

உதாரணம்

"நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்
கடிய கூறும் வேந்தே தந்தையும்
நெடிய அல்லது பணிந்துமொழி யலனே
இஃதிவர் படிவம் ஆயின் வைஎயிற்று
அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை
மரம்படு சிறுதீப் போல
அணங்கா யினள்தான் பிறந்த ஊர்க்கே."

( புறம் . 341)

கொண்டோன் தலையொடு முலையும் முகனும் சேர்த்தி முடிந்தநிலையொடு தொகைஇ ஈர் ஐந்து ஆகும் என்ப - தன்னைக் கொண்டான் தலையொடு தனது முலைகளையும் தம் முகத்தையும் சேர்த்தி இறந்த நிலையும் கூடிப் பத்தாகும் என்பர் சிலர்.

உதாரணம்

"கொலையானாக் கூற்றே14 கொடிதே கொழுநன்
தலையானான் தையலாள் கண்டே- முலையான்
முயங்கினாள் வாள்முகமுஞ் சேர்த்தினாள் ஆங்கே
உயங்கினாள் ஓங்கிற்று உயிர்."

( புறப் . காஞ்சி . 13 )

பேர்இசை மாய்ந்தமகனை சுற்றிய சுற்றம் மாய்ந்த பூசல்மயக்கமும் - பெரிய இசையையுடையனாய் மாய்ந்தவனைச் சுற்றிய சுற்றத்தார் அவன் மாய்ந்தமைக்கு அழுத மயக்கமும் [ மகன் - ஆண்மகன். ]

உதாரணம்

"மீன்உண் கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன்கழை துயல்வரும்15 வெதிரத்து
வான்பெயத் தூங்கிய16 சிதரினும் பலவே . "

( புறம் . 227 )

தாம் எய்திய தாங்கு அரும் பையுளும் - சிறைப்பட்டார் தாம் உற்ற பொறுத்தற்கு அரிய துன்பத்தினைக் கூறுங் கூற்றும்

உதாரணம்

" குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே."

( புறம் . 74)

கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கி செல்வோர் செப்பிய மூதானந்தமும் - கணவனொடு இறந்த செலவை நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும்.

உதாரணம்

"ஓருயி ராக உடர்கலந்தார்க்கு
ஈருயிர் என்பர் இடைதெரியார் - போரில்
விடன்ஏந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கும்
உடனே உலந்தது உயிர்."

(புறப் . சிறப்பிற்பொதுவியல் - 9)

நனி மிகு சுரத்திடை கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபாலையும் - மிகுதி மிக்க சுரத்திடைக் கணவனை யிழந்து தனியளாய்த் தலைமகள் வருந்திய முதுபாலையும்.

உதாரணம்

" ஐயோ எனின்யான் புலியஞ் சுவலே
அணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கவல்லேன்17
என்போற் பெருவிதிர்ப்பு உறுக நின்னை
இன்னா செய்த அறனில் கூற்றே
நிரைவளை முன்கை பற்றி
வரைநிழற் சேர்க நடத்திசின் சிறிதே . "

( புறம் . 255)

கழிந்தோர் தேஎத்து கழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் - செத்தோர்மாட்டுச் சாவாதார் வருத்தமுற்றுப் புலம்பிய கையறு நிலையும்.

உதாரணம்

" செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும்
உற்றன் றாயினும் உய்வின்று மாதோ
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
இரந்தன் றாகல் வேண்டும் பொலந்தார்
மண்டமர்க் கடக்குந் தானைத்
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே."

( புறம் 226)

காதலி இழந்த தபுதாரநிலையும் - காதலியை இழந்த கணவனது தபுதாரநிலையும்.

உதாரணம்

" யாங்குப்பெரி தாயினும் நோயள வெனைத்தே
உயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையின்
கள்ளி போகிய களரியம்18 பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என்னிதன் பண்பே."

( புறம் 245)

காதலன் இழந்த தாபத நிலையும் - காதலனை இழந்தவள் நிற்கும் தாபத நிலையும் .

உதாரணம்

" அளிய தாமே சிறுவெள் ஆம்பல்
இளையம் ஆகத் தழையா யினவே , இனியே
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படூஉம் புல்லா யினவே."

( புறம் . 248 )

நல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇ இடையிட்ட மாலைசொல் நிலையும் - கணவனொடு கிழத்தி பெரிய அழற்புகுவழி இடையிட்ட மாலைக்காலத்துக் கூறும் கூற்றும்.

உதாரணம்

" பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடையிடைக் கிடந்த19 கைபிழி பிண்டம்
வெள்ளெள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரல்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கரிது ஆகுக தில்ல எமக்கெம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும்ஓர் அற்றே."

( புறம் . 246)

அரும்பெருஞ் சிறப்பின் புதல்வன் பயந்த தப வரூஉம் தலைப் பெயல் நிலையும் - அரும்பெருஞ் சிறப்பினையுடைய மகற்பெற்ற தாய் சாதற்கண் அவனைத் தலைப்பெயல் நிலையும் . [ தலைப்பெயல் - சேர்தல் ]

உதாரணம்

" இடம்படு ஞாலத்து இயல்போ கொடிதே
தடம்பெருங்கண் பாலகன் என்னுங் - கடன்கழித்து
முள்ளெயிற்றுப் பேதையாள் புக்காள் முரண் அவியா
வள்ளெயிற்றுக் கூற்றத்தின் வாய்."

( புறப் . சிறப்பிற் பொதுவியல் - 5)

மலர்தலை உலகத்து மரபு நன்கு அறிய பலர் செல செல்லாக் காடு வாழ்த்தொடும் - இடம் அகன்ற உலகத்தின் மரபு நன்கு விளங்கப் பலரும் மாயத் தான் மாயாத புறங்காடு வாழ்த்துதலும்.

உதாரணம்

களரி பரந்து கள்ளி போகிப்20
பகலுங் கூவுங் கூகையொடு பேழ்வாய்21
ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
எல்லார் புரனுந் தான்கண்டு உலகத்து
மன்பதைக் கெல்லாந் தானாய்த்
தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே."

( புறம் . 356)

நிறை அருஞ்சிறப்பின் இரண்டு துறை உடைத்து - ஆக நிறையும் அருஞ்சிறப்பினையுடைய இரண்டு துறைகளையுடைத்து.

[ இச் சூத்திரத்தில் வந்த அத்தும் ஆனும் முறையே சாரியையும் இடைச் சொல்லுமாம்]

(19)

(பாடம்) 1. பேஎத்த, பேர்த்த.

2. கொண்டோன்.

3. ஏங்கிய.

4. பாலை நிலையும் - புறங்காட்டுநிலையும் எல்லாநிலத்தும் உளதாகி வேறு தனக்கு நிலன் இன்றி வருதலானும், நண்பகல்போல் வெங்கனலான் வெதுப்புதலானும் புறங்காட்டைப் பாலை என்றார். பாலைத்தன்மை எய்திற்று என்றற்கு நிலை என்றார்.(தொல்.புறம்.24)

(நச்சி.)

(பாடம்) 5.ஆய்பெருஞ்.

6. பெயரத்.

7. கூற்றாவது, வாழ்நாள் இடையறாது செல்லுங் காலத்தினைப் பொருள் வகையாற் கூறுபடுத்துங் கடவுள். கூற்றத்திற்குக் காலம் என்பது வேறன்மையிற் "காலம் உலகம்" என (தொல். சொல். கிளவி - 58) முன்னே கூறினார்; (நச்சி.)

(பாடம்) 8. மாநிலத்து.

9. முள்ளி கள்ளி நள்ளிருஞ் சுடலை.

10. (பாடம்) திருநிறத்து.

(பாடம்)11. புறவமொடு.

12. யானையொடு.

13. எழுதி.

(பாடம்) 14. கூற்றம்.

15. அலமரும்.

16. பெயல் தூங்கிய.

(பாடம்) 17. எடுத்தனன் கொளினகன் மார்பெடுக் கல்லேன் .

18. களரி மருங்கின்.

(பாடம்) 19. அடகிடை மிடைந்த.

20. பொங்கிப்.

21. பிறழ்வர.