புறத்திணை இயல்

78பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண் டுடைத்தே.

இது, பாடாண்திணை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) பாடாண்1 பகுதி கைக்கிளைப் புறன் - பாடாண் திணைப்பகுதி கைக்கிளை என்னும் அகத்திணைக்குப் புறனாம் ; நாடும் காலை நால் இரண்டு உடைத்து - அஃது ஆராயும் காலத்து எட்டுவகையினை உடைத்து.

அவையாவன :- கடவுள் வாழ்த்துவகை, வாழ்த்தியல்வகை, மங்கல வகை, செவியறிவுறுத்தல், ஆற்றுப்படைவகை, பரிசிற்றுறைவகை, கைக்கிளைவகை, வசைவகை என்பன. அவையாமாறு முன்னர்க் காட்டுதும்.

அதற்கு இது புறனாயவாறு என்னை யெனின், கைக்கிளையாவது ஒரு நிலத்திற்கு உரித்தன்றி ஒருதலைக் காமமாகி வருமன்றே அதுபோல இதுவும் ஒருபாற்கு உரித்தன்றி ஒருவனை ஒருவன் யாதானும் ஒரு பயன் கருதியவழி மொழிந்து நிற்பது ஆகலானும், கைக்கிளையாகிய காமப் பகுதிக்கண் மெய்ப்பெயர்பற்றிக் கூறுதலானும், கைக்கிளை போலச் செந்திறத்தாற் கூறுதலானும், அதற்கு இது புறனாயிற்று . நோந்திறமாவது கழிபேரிரக்கம் ; செந்திறமாவன அஃது அல்லாதன.

(20)

1. பாடாண் என்பது பாடுதல் வினையையும் பாடப்படும் ஆண்மகனையும் நோக்காது அவனது ஒழுகலாறாகிய திணையுணர்த் தினமையின் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. (தொல் . புறம். 25) (நச்சி.)