புறத்திணை இயல்

79அமரர்கண் முடியும் அறுவகை யானும்
புரைதீர் காமம் புல்லிய வகையினும்
ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப.

இது, பாடாண் பாட்டிற்கு உரியதொரு பொருண்மை உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) அமரர்கண்1 முடியும் அறுவகையானும் - அமரர்கண் முடியும் கொடிநிலை கந்தழி வள்ளி புலவராற்றுப்படை புகழ்தல் பரவல் என்பனவற்றினும்.

புரைதீர் காமம் புல்லிய வகையினும் - குற்றந் தீர்ந்த காமத்தைப் பொருந்திய வகையினும்.

அஃதாவது, ஐந்திணை தழுவிய அகம்.

ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப - அவையிற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு பாடாண் திணை யாதற்குப் பொருந்தும் என்பர் புலவர்.

அஃதாவது, கொடிநிலை முதலிய ஆறும் கடவுட் புகழ்ச்சியின்றிப் பாட்டுடைத்தலைவனைச் சார்த்தி வருதல், காமப்பகுதியிற் பாடும் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருதல் என்ற இவ்விருவகையானும் ஒருவனைப் புகழ்தலாற் பாடாண்பாட்டு ஆயிற்று.

இன்னும் 'புரைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன்பகுதி' என்ற அதனான் ஐவகைப்பொருளினும் ஊடற்பொருண்மை பாடாண் பகுதிக்கு ஒன்றும் என்றவாறாம் . இன்னும் இதனானே இயற்பெயர் சார்த்திவாராது நாடும் ஊரும் இதுவென விளங்க வரும் ஊரன் சேர்ப்பன் என்னும் பெயரினான் ஒரு கூறு குறிப்புப்பற்றி வரும் பகுதியும் பாடாண்பாட்டாம் என்றும் கொள்க.


1. அமரர் கண்ணே வந்து முடியும் எனவே, அமரர் வேறு என்பதூஉம், அவர்கண்ணே வந்து முடிவன வேறு என்பதூஉம் பெற்றாம். அவை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகும் ஆம். இவை தத்தம் சிறப்புவகையான் அமரர்சாதிப் பால என்றல் வேத முடிவு.

இத்துணைப் பகுதி என்று இரண்டிறந்தன எனக்கூறாது வாளாதே பகுதி என்றமையின் தேவரும் மக்களும் என இரண்டேயாயிற்று. அத்தேவருட் பெண்தெய்வம் 'கொடிநிலை கந்தழி' என்புழி அடங்கும்.

(தொல்.புறம். 26) (நச்சி)