புறத்திணை இயல்

80வழக்கியல்1 மருங்கின் வகைபட நிலைஇப்
பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்
முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை
வண்ணப் பகுதி வரைவின் றாங்கே.

இது , சில பொருட்கண் வரும் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று .

(இ-ள்) வழக்கியல் மருங்கின் வகைபட நிலைஇ பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் - மேற் சொல்லப் பட்டன வழக்கு இயலும் பக்கத்து வகைபெற நிறுத்திப் பரவலும் புகழ்ச்சியும் கருதிய பக்கத்தினும் , முன்னோர் கூறிய குறிப் பினும் - முதலாசிரியர் கூறிய காமக்குறிப்பினும் , செந்துறை 2 வண்ணம் பகுதி வரைவு இன்று ஆங்கு - செந்துறைப்பாட்டின் கண் வரும் வண்ணப்பகுதி வரைதல் இல்லை அவ்விடத்து .

குறிப்பு என்பது காமம் ஆமாறு வருகின்ற சூத்திரத்துள் " காமப்பகுதி கடவுளும் வரையார் " ( புறத்திணை . 23 ) என ஒட்டி எழுந்தமையான் உணர்க .

இதனாற் சொல்லியது , தேவபாணியும் அகப்பொருள் பாடும் பாட்டும் இசைத்தமிழில் வரைந்து ஓதினாற்போலச் செந்துறைப் பாட்டிற்கு உரிய செய்யுள் இவை என்று உரைத்தல் இல்லை பாடாண்பாட்டின்கண் வருங் காலத்தென்பது . எனவே எல்லாச் செய்யுளும் ஆம் என்றவாறு .

இனி , புகழ்தல் படர்க்கைக்கண்ணும் , பரவல் முன்னிலைக் கண்ணும் வருமாறு:

" கண்ணகன் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் - நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி."

( திரிகடுகம் ; கடவுள் வாழ்த்து)

இது புகழ்தல்,

" வைய மகளை அடிப்படுத்தாய் வையகத்தார்
உய்ய உருவம் வெளிப்படுத்தாய் - வெய்ய
அடுந்திறல் ஆழி அரவணையாய் என்றும்
நெடுந்தகை நின்னையே யாம்."

( புறப் . பாடாண் . 3 )

இது பரவல்,

" வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் சேறி 3
நெறிகொள் படிவத்தோய் நீயும் - பொறிகட்கு
இருளீயும் ஞாலத்து இடரெல்லாம் நீங்க
அருளீயும் ஆழி யவன் ."

( புறப்.பாடாண் . 42)

இது புலவராற்றுப்படை,

" மாயவன் மாயம் அதுவால் மணிநிரையுள்
ஆயனா எண்ணல் அவனருளான் - காயக்
கழலவிழக் கண்கனலக் கைவளையார் சோரச்
சுழலழலுள் வைகின்று சோ."

( புறப் பாடாண் . 40 )

இது கந்தழி.

" வேண்டுதியால் நீயும் விழைவோ விழுமிதே
ஈண்டியம் விம்ம இனவளையார் - பூண்தயங்கச்
சூலமோ டாடுஞ் சுடர்ச்சடையோன் காதலற்கு
வேலனோ டாடும் வெறி."

( புறப் .பாடாண் . 41)

இது வள்ளி . வள்ளி என்பது ஈண்டு வெறியாட்டு கொடிநிலை வந்த வழிக் காண்க . இனி அவை சார்ந்து வருமாறு முன்னர்க் காட்டுதும்.

இனிக் காமப்பகுதி வருமாறு :-
" மலைபடு சாந்தம் மலர்மார்ப யாம்நின்
பலர்படி செல்வம் படியேம் - புலர்விடியல்
வண்டினங்கூட் டுண்ணும் வயல்சூழ் திருநகரிற்
கண்டனங் காண்டற் கரிது.4"

( புறப் . பாடாண். 47)

இஃது ஊடற்பொருண்மைக்கண் வந்தது . இது , இயற்பெயர் சார்த்தியும் வரும் .

" வையைதன்
நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார்
போர் முற்றொன்று அறியாத புரிசைசூழ் புனலூரன்."

(கலி.மருதம் . 2)

என்பது குறிப்பினாற் பாட்டுடைத் தலைமகனே கிளவித்தலை மகனாக வந்தது.

பூந்தண்டார்ப் புலர்சாந்தில் தென்னவன் உயர்கூடல்
தேம்பாய அவிழ்நீலத் தலர்வென்ற அமருண்கண்
ஏந்துகோட் டெழில்யானை ஒன்னாதார்க் கவன்வேலில்
சேந்துநீ இனையையால் ஒத்ததோ சின்மொழி."

(கலி. குறிஞ்சி.21)

இது காமத்தின்கண் வந்தது .

(பாடம்) 1. வழங்கியல்.

2. செந்துறையாவது விகாரவகையான் அமரர் ஆக்கிச் செய்யும் அறு முறை வாழ்த்தினைப் போலாது உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல் . ( தொல் . புறம் . 27 ) ( நச்சி.)

(பாடம்) 3. செல்லின்.

(பாடம்) 4. கினிது.