புறத்திணை இயல்

83ஊரொடு1 தோற்றமும் உரித்தென மொழிப
வழக்கொடு சிவணிய வகைமை2 யான.

இதுவும் அது,

(இ-ள்) ஊரொடு தோற்றமும் உரித்து என மொழிப - ஊரின்கண் காமப்பகுதி நிகழ்த்தலும் உரித்து என்று சொல்வர் புலவர், வழக்கொடு சிவணிய வகைமையான - அது நிகழுங் காலத்து வழக்கொடு பொருந்திநடக்கும் வகைமையின்கண்.

'ஊரொடு தோற்றம்' என்பது பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக வருவது. 'வழக்கு' என்பது சொல்லுதற்கு ஏற்ற நிலைமை. 'வகை' என்பது அவரவர் பருவத்திற்கு ஏற்கக்கூறும் வகைச்செய்யுள். உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க.

(25)

1. இச் சூத்திரத்திற்குத் தலைவர் பிறந்த ஊரும் அவர் பிறப்பும் என்று பொருள் கூறின், மரபியல் கண்ணே 'ஊரும் பெயரும்' (தொல் மரபு. 74) என்னுஞ் சூத்திரத்து ஊர் பெறுதலானும் முன்னர் 'வண்ணப் பகுதி' (தொல்.புறத்திணை- 27) என்பதனால் பிறப்புப் பெறுதலானும் இது கூறியது கூறலாம் என்றுணர்க.

(தொல்.புறம். 30) (நச்சி)

2. 'சிவணிய வகைமை' என்றதனானே முற்கூறியவற்றோடே நாடும் ஊரும் மலையும் யாறும் படையும் கொடியும் குடையும் முரசும் நடை நவில் புரவியும் களிறும் தேரும் தாரும் பிறவும் வருவன எல்லாம் கொள்க.

(தொல்.புறம். 31) (நச்சி.)