புறத்திணை இயல்

85கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.1

இது, சார்ந்துவருமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) வடு நீங்கு சிறப்பின் கொடிநிலை கந்தழி வள்ளி என்ற முதலன மூன்றும் - குற்றம் தீர்ந்த சிறப்பினையுடைய கொடிநிலை முதலாகச் சொல்லப்பட்ட முற்பட்ட மூன்றும், கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் - பாட்டுடைத் தலைமகனைச் சார்த்தி வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும்.

உதாரணம்

"பூங்கண் நெடு முடிப் பூவைப்பூ மேனியான்
பாம்புண் பறவைக் கொடிபோல - ஓங்குக
பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க்
கொல்யானை மன்னன் கொடி."

(புறப்.பாடாண் . 39)
இது கொடிநிலை.

"அன்றெறிந் தானும் இவனால் அரண்வலித்து
இன்றிவன் மாறாய் எதிர்வார்யார் - கன்றும்2
அடையார் மணிப்பூண் அடையாதார் மார்பின்
சுடராழி நின்றெரியச் சோ."

(புறப்.உழிஞை. 7)
இது கந்தழி

வள்ளியிற் சார்ந்து வருமாறு வந்தவழிக் கண்டுகொள்க . "வந்தது கொண்டு வாராத துணர்த்தல்" (தொல்.மரபி .110) என்பதனால் புலவராற்றுப்படை முதலாகிய மூன்றும் சார்த்தி வருமெனவும் கொள்க . முருகாற்றுப்படையுள்,

"மாடமலி மறுகிற் கூடற் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி"

(திருமுருகு . 71-73)

என்றவழி, ஒரு முகத்தாற் பாண்டியனையும் இதனுட் சார்த்தியவாறு காண்க.

இனிப் பரவற்குச் சார்ந்து வருமாறு :- "கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் " என்னுங் கலிப்பாட்டினுள்,

"அடுதிறல் ஒருவநிற் பரவுதும் எங்கோன்
தொடுகழற் கொடும்பூண் பகட்டெழின் மார்பில்
கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்
புயல்உறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன்
ஒன்று முதுகடல் உலகம் முழுவதும்
ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே"

(யாப்-விரு. 83. மேற்கோள்)

என்பதனுட் பாட்டுடைத் தலைமகனைச் சார்த்தியவாறு காண்க. பிறவும் அன்ன.

(27)

1. கீழ்த்திசைக்கண்ணே தோன்றும் 'மண்டிலம்' என்றாற்போலக் கொடிநிலை' என்பதூஉம் அப்பொருள் தந்ததோர் ஆகு பெயர். இனி, எப்புறமும் நீடுசென்று எறித்தலின் அந்நீடல் நிலைமைபற்றிக் கொடி நிலை என்பாரும் உளர்.

வள்ளி என்பதுவும் கொடியை என்னை? பன்மீன் தொடுத்த உடுத்தொடையைக் கொடி எனப்படுதலின் அத் தொடையினை இடைவிடாது உடைத்தாதலின் அதனை அப்பெயராற் கூறினார் : முத்துக் கொடி எனவும் மேகவள்ளி எனவும் கூறுமதுபோல் கந்தழி அவ்விரண்டற்கும் பொதுவாய் நிற்றலின் இடையேவைத்தார். (தொல்.புறம். 33) (நச்சி.)

(பாடம்) 2. என்றும்.