புறத்திணை இயல்

86கொற்ற வள்ளை1 ஓரிடத்தான.

இது, பாடாண் திணைக்கு உரியதொரு பொருள் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) கொற்றவள்ளை ஓர் இடத்து ஆன - கொற்ற வள்ளையும் ஓர் இடத்துப் பாடாண்பாட்டாம்.

என்றது, துறைகூறுதல் கருத்தாயின் வஞ்சியாம் ; புகழ்தல் கருத்தாயின் பாடாண்திணையாம் என்றவாறு.

உதாரணம்

"வல்லா ராயினும் வல்லுந ராயினும்
புகழ்தலுற் றோர்க்கு மாயோன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற
நின்ஒன்று கூறுவது உடையேன் என் எனின்,
நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை அவர்நாட்டு
இறங்குகதிர்க் கழனிநின் இளைஞருங் கவர்க
நனந்தலைப் பேரூர் எரியும் நக்க
மின்னுநிமிர்ந் தன்ன நின் ஒளிறிலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க என்னதூஉம்
கடிமரந் தடித லோம்புநின்
நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே."

(புறம். 57)(58)

1. இச் சூத்திரம் மக்கட்கு எய்திய பொருண்மையை மீட்டும் கூறி நியமித்ததாம். ஆகவே வெட்சி முதல் வஞ்சியிற் கொற்றவள்ளை ஈறாய பொருண்மை உழிஞைமுதற் பாடாண்திணைக்கு உரியராகி இடை புகுந்த தேவர்க்கு ஆகா என விதிவகையான் விலக்கிய தாம். எனவே தேவர்க்கு உழிஞை முதலிய கொற்றவள்ளை ஆம் என்பதூஉம் கூறினாராயிற்று.

(தொல்.புறம். 34) (நச்சி.)