என் - எனின். ஐயப்பட்டான் துணிதற்குக் கருவி உணர்த்துதல் நுதலிற்று. எண்ணப்பட்ட வண்டு முதலாகிய எட்டும் 2பிறவுமாகிய அவ்விடத்து நிகழாநின்ற ஐயம் களையும் கருவி என்றவாறு. ஐயமென்பது அதிகாரத்தான் வந்தது, ` நிகழாநின்றவை ' என்பது குறுகி நின்றது. வண்டாவது மயிரின் அணிந்த பூவைச் சூழும் வண்டு. அது பயின்றதன் மேலல்லது செல்லாமையின் அதுவும் மக்களுள்ளா ளென்றறிதற்குக் கருவியாயிற்று. இழையென்பது அணிகலன். அது செய்யப்பட்டதெனத் தோற்றுதலானும், தெய்வப்பூண் செய்யா, அணியாதலானும் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. வள்ளி என்பது முலையினும் தோளினும் எழுதிய கொடி. அதுவும் உலகின் உள்ளதாகித் தோன்றுதலின் (அதுவும்) கருவியாயிற்று. அலமரல் என்பது தடுமாறுதல். தெய்வமாயின் நின்றவழி நிற்கும். அவ்வாறன்றி, நின்றுழி நிற்கின்றிலள் என்று சுழற்சியும் அறிதற்குக் கருவியா யிற்று. இமைப் பென்பது கண்ணிமைத்தல். தெய்வத்திற்குக் கண் இமையாமையின் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. அச்சமென்பது ஆண்மக்களைக் கண்டு அஞ்சுதல். அது தெய்வத்திற்கு இன்மையான் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. அன்னவை பிறவும் என்றதனான் கால் நிலந்தோய்தல் வியர்த்தல் நிழலாடுதல் கொள்க. இவை கருவியாகத் துணியப்படும் என்றவாறு. காட்சி முதலாகிய இத்துணையும் கைக்கிளைக் குறிப்பாம். இதற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க. இனிக் குறிப்பறிதல் கூறுகின்றாராகலின், அக்குறிப்பு நிகழும் வழி இவையெல்லாம் அகமாம். என்னை? இருவர் மாட்டு மொத்த நிகழ்ச்சி யாதலான். இவை தலைமகள்மாட்டுப் புலப்பட நிகழாது . ஆண்டுக் குறிப்பினாற் சிறிது நிகழுமென்று கொள்க. அவை வருமாறு :- "உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று". [ குறள். 1090] என வரும். பிறவும் அன்ன.(3)
1. (பாடம்) ஆங்கவன் புகழ. 2. `பிறவுமாம்' என்றிருத்தல் வேண்டும்.
|