என் - எனின், மேல் தலைமகளை இத்தன்மையள் எனத் துணிந்த தலைமகள் குறிப்பறியாது சாரலுறின் பெருந்திணைப் பாற்படுமாகலானும் இக் கந்திருவநெறிக்கு ஒத்த உள்ளத் தாராதல் வேண்டுமாதலானும், ஆண்டு ஒருவரோடொருவர் சொல்லாடுதல் மரபன்மையானும். அவருள்ளக் கருத்தறிதல் வேண்டுதலின், அதற்குக் கருவியாய் உணர்த்துதல் நுதலிற்று. நாட்டம் இரண்டும் என்பது - தலைமகன்கண்ணும் தலைமகள் கண்ணும் என்றவாறு. அறிவுடம்படுத்தற்கு என்பது - ஒருவர் வேட்கைபோல இருவர்க்கும் வேட்கை உளதாகுங் கொல்லோ எனக் கவர்த்து நின்ற இருவரது அறிவினையும் ஒருப்படுத்தற்கு என்றவாறு. கூட்டியுரைக்குங் குறிப்புரையாகும் என்பது - தமது வேட்கையொடு கூட்டி ஒருவர் ஒருவருக்கு உரைக்குங் காமக் குறிப்புரையாம் என்றவாறு. இதன் பொழிப்பு : - இருவர்க்குங் கவர்த்து நின்ற அறிவை ஒருப்படுதற் பொருட்டு வேட்கையொடு கூட்டிக் கூறுங் காமக் குறிப்புச் சொல் இருவரது நாட்டமாகும் என்றவாறு. ஆகும் என்பதனை நாட்டம் என்பதனொடு கூட்டியுரைக்க. இதற்குச் செய்யுள். "பானலந்2 தண்கழிப் பாடறிந்து3தன்ஐமார் நூல்நல நுண்வலையாற் கொண்டெடுத்த - கானற் படுபுலால் காப்பாள் படைநெடுங்கண் நோக்கம் கடிபொல்லா என்னையே காப்பு." (திணைமாலை நூற் : 32) கண்ணினான் அறிப என்றவாறு.
1. "ஒன்று ஒன்றை ஊன்றி நோக்குதலின் நாட்டம் என்றார், நாட்டுதலும் நாட்டமும் ஒக்கும் " (நச்சி.) 2. (பாடம்) `தண்கழுநீர்' . 3. தன்ஐயர்.
|