என் - எனின், மேலதற்கொரு புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. ஒருவர் குறிப்பு ஒருவர் குறித்ததனைக் கொள்ளுமாயின், அவ்விடத்துக் கண்ணினான் வருங் குறிப்புரை நிகழும் என்றவாறு. எனவே, குறிப்பைக் கொள்ளாதவழி அக் குறிப்புரை நிகழாது என்றவாறாம். இதனாற் சொல்லியது கண்ட காலத்தே வேட்கை முந்துற்றவழியே இக்கண்ணினான் வருங் குறிப்பு நிகழ்வது; அல்லாதவழி நிகழாது என்றவாறு. இனிக் குறிப்பு நிகழுமாறும் அதன் வேறுபாடும் 1மெய்ப்பாட்டியலுள் கூறுப. ஈண்டும் சில உதாரணம் காட்டுவம். "நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்". (குறள்,1093) எனவும்,"அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். " (குறள். 1098) எனவும் வரும். பிறவும் அன்ன. தலைமகன் குறிப்புத் தலைமகன் அறிந்த வழியும் கூற்று நிகழாது, பெண்மையான்.(6)
1." பன்னிரண்டாம் மெய்ப்பாடாகிய இருகையும் எடுத்தல் கூறவே முயக்கமும் உய்த்துணரக் கூறியவாறு காண்க. அம் மெய்ப்பாட்டியலுட் கூறிய மூன்று 261, 262, 263 சூத்திரத்தையும் ஈண்டுக் கூறியுணர்க" (தொல். பொருள்.)(நச்சி.)
|