பெருமை யாவது - பழியும் பாவமும் அஞ்சுதல். உரன் என்பது - அறிவு. இவை யிரண்டும் ஆண்மகனுக்கு இயல்பு என்றவாறு. இதனானே மேற்சொல்லப்பட்ட தலைமகளது வேட்கைக் குறிப்புக் கண்ட தலைமகன், அந்நிலையே புணர்ச்சியை நினையாது வரைந்து எய்தும் என்பது பெறுதும். "சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு" (குறள். 422) என்பவாகலின். தலைமகன் இவ்வாறு கூறியதற்குச் செய்யுள் :-"வேயெனத் திரண்டதோள் வெறிகமழ் வணர்ஐம்பால் மான்வென்ற மடநோக்கின் மயிலியல்1 தளர்பொல்கி ஆய்சிலம்பு அரியார்ப்ப வவிரொளி இழைஇமைப்பக் கொடியென மின்னென அணங்கென யாதொன்றும் தெரிகல்லா இடையின்கட் கண்கவர்பு ஒருங்கோட வளமைசால் உயர்சிறப்பின் நுந்தைதொல் வியனகர் இளமையான் எறிபந்தோ டிகத்தந்தாய் கேளினி;
பூந்தண்தார்ப் புலர்சாந்தின் தென்னவன் உயர் கூடல் தேம்பாய அவிழ்நீலத் தலர்வென்ற அமருண்கண் ஏந்துகோட் டெழில்யானை2 யொன்னாதார்க் கவன்வேலிற் சேந்து நீ யினையையால் ஒத்ததோ சின்மொழி; பொழிபெயல் வண்மையான் அசோகந்தண் காவினுள் கழிகவின் இளமாவின் தளிரன்னாய் அதன்தலைப் 3பணையமை பாய்மான் தேர் அவன்செற்றார் நிறம்பாய்ந்த கணையினு நோய்செய்தல் கடப்பன்றோ கனங்குழாய்;
வகையமை தண்தாரான் கோடுயர் பொருப்பின்மேல் தகையினர் இளவேங்கை மலரன்ன சுணங்கினாய் மதவலி மிகுகடாஅத்4 தவன்யானை மருப்பினும் கதவவால் தக்கதோ காழ்கொண்ட இளமுலை; என வாங்கு இனையன கூற இறைஞ்சுபு நிலநோக்கி 5நினையுபு நெடிதொன்று நினைப்பாள் போன் மற்றாங்கே துணையமை தோழியர்க் கமர்த்த கண்ணள் மனையாங்குப் பெயர்ந்தாளென் அறிவகப் படுத்தே. " (கலித். 57) "உறுகழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த சிறுகரு நெய்தல் கண்போல் மாமலர்ப் பெருந்தண் மாத்தழை 6யிருந்த அல்குல் ஐய அரும்பிய சுணங்கின் வைஎயிற்று மையீர் ஓதி வாணுதற் குறுமகள் விளையாட் டாயமொடு வெண்மணல் 7உதிர்த்த புன்னை நுண்தாது பொன்னின் நொண்டு மனைபுறந் தருதி யாயின் எனைய தூஉம் இம்மனைக் கிழமை யெம்மொடு புணரில் தீதும் உண்டோ மாத ராயெனக் கடும்பரி நன்மான் கொடிஞ்சி நெடுந்தேர் கைவல் பாகன் பையென இயக்க யாந்தற் குறுகினம் ஆக ஏந்தெழில் அரிவே யுண்கண் பனிவர லொடுக்கிச் சிறிய இறைஞ்சினள் தலையே பெரிய எவ்வம்8 யாமிவ ணுறவே. "9 (அகம் 230) இவை உள்ளப்புணர்ச்சியான் வரைதல் வேண்டிப் பாங்கற்கு 10உரைத்தன. (7)
(பாடம்) 1. மயிலியலாற். 2. யெண்ணாதார்க். 3. புணையமை யாய்மான்றே. 4. கமழ் கடாஅத். (பாடம்)5. நினைகுபு. 6. யருந்த. 7. உகுத்த. 8. யெவ்வமொடு. 9. யாமினுறவே. 10. உரைத்து.
|