என் - எனின். இது தலைமகட்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல். அச்சமும் நாணும் பேதைமையும் இம்மூன்றும் நாடோறு முந்துறுதல் பெண்டிர்க்கு இயல்பு என்றவாறு. எனவே வேட்கையுற்றுழியும் அச்சத்தானாதல் நாணானாதல் மடத்தானாதல் புணர்ச்சிக்கு இசையாது நின்று வரைந்தெய்தல் வேண்டுமென்பது போந்தது. இவ்வாறு இருவரும் உள்ளப் புணர்ச்சியால் நின்று வரைந்தெய்தி மெய்யுறும். இதற்குச் செய்யுள்: "தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரு முல்லையுந் தாய பாட்டங்கால் தோழிநம் புல்லினத் தாயர் மகளிரோ டெல்லாம் ஒருங்கு விளையாட அவ்வழி வந்த குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன்மற் றென்னை முற்றிழை ஏஎர் மடநல்லாய் நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றான் எல்லா நீ பெற்றேம்யா மென்று பிறர்செய்த இல்லிருப்பாய் கற்ற திலைமன்ற காண்என்றேன் முற்றிழாய் தாதுசூழ் கூந்தல் தகைபெறத் தைஇய2 கோதை புனைகோ நினக்கென்றான் எல்லாநீ ஏதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப் பேதையை மன்ற பெரிதென்றேன் மாதராய் ஐய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேல் தொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர் செய்புறம் நோக்கி இருத்துமோ நீபெரிதும் மையலை மாதோ விடுகென்றேன் தையலாய் சொல்லிய வாறெல்லாம் மாறுமாறு யான்பெயர்ப்ப3 அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் அவனைநீ ஆயர் மகளிர் இயல்புரைத் தெந்தையும் யாயும் அறிய உரைத்தீயின் யானுற்ற நோயுங் களைகுவை மன்." (கலித்.111) இது தலைமகள் உள்ளப்புணர்ச்சியின் உரிமைபூண்டிருந்தவாறும் வரைந்தெய்தக் கூறலுற்றவாறும் காண்க. (8)
1. முந்துறுத்த. "முந்துறுத்த என்றதனால் கண்டறியாதன கண்டுழி மனங் கொள்ளாத பயிர்ப்பும் செயத்தகுவது அறியாத பேதைமையும், நிறுப்பதற்கு நெஞ்சு உண்டாம் நிறையும் கொள்க, இருவர் கண்ணுற்றுக் காதல் கூர்ந்த வழியெல்லாம் கந்தருவம் என்பது வேதமுடிபாதலின், இவ்வுள்ளப் புணர்ச்சியும் கந்தருவமாம். ஆதலான் அதற்கேதுவாகிய பெருமையும் உரனும் அச்சமும் நாணும் போல்வன கூறினார்." (நச்சி.) 2. `தகைபெருதகைஇய'. 3. `றியான் பெயர.'
|