களவியல்

97வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கஞ் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கஞ் சாக்காடு என்றிச்1
2சிறப்புடை மரபினவை களவென மொழிப.

என் - எனின், மெய்யுறுபுணர்ச்சி நிகழுங்காலம் உணர்த்துதல் நுதலிற்று.
மேல், "பெருமையும் உரனும் ஆடூஉ மேன" எனவும்,

"அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்3
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப".

(தொல். கள. 8)

எனவும் ஓதியவதனான் உள்ளஞ் சென்றவழியும் மெய்யுறு புணர்ச்சி வரைந்தெய்தி நிகழ்ப என்றாராம். அவ்வழிச் சாக்காடெல்லையாகிய மெய்ப்பாடு வரின் மெய்யுற்றுப் புணரப்பெறுமென்பது உணர்த்திற்று.

வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாக ஓதப்பட்ட காமச் சிறப்புடையனவற்றாற் களவு ஆமென்று சொல்லுவர் என்றவாறு.

ஆனும் ஆமும் எஞ்சி நின்றன. இவற்றை அவத்தையென்ப. அஃதேல், அவை பத்துளவன்றே? ஈண்டுரைத்தன ஒன்பதாலெனின், காட்சி விகற்பமுங் கூறினார். அஃது உட்படப் பத்தாம். காட்சி விகற்பமாகிய ஐயமுந் துணிவும் முதலது; வேட்கை இரண்டாவது, என்று கொள்க.

வேட்கை யாவது - பெறல்வேண்டு மென்னும் உள்ள நிகழ்ச்சி.

ஒருதலையுள்ளுத லாவது - இடைவிடாது நினைத்தல்.

"உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற்று
அமிழ்தம் ஊறுஞ் செவ்வாய்க் கமழகில்
ஆரம் நாறும் அறல்போற் கூந்தற்
பேரமர் மழைக்கண் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே."

(குறுந். 286)

மெலித லாவது - உண்ணாமையான் வருவது.

ஆக்கஞ்செப்ப லாவது - உறங்காமையும் உறுவ ஓதலும் முதலாயின, கூறுதல்.

"ஒண்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே
வண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக்கடல் ஒலித்திரை 4போல
இரவி னானுந் துயிலறி யேனே".

(ஐங்குறு. 172)

என வரும்.

நாணுவரையிறத்தலாவது - நாண் நீங்குதல்.

"காமம் விடுவொன்றோ நாண்விடு நல்நெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு".

(குறள். 1247)

நோக்குவ எல்லாம் அவையே போற லாவது - தன்னாற் காணப்பட்டன எல்லாந் தான் கண்ட உறுப்புப் போலுதல்.

"ஓங்கெழிற் கொம்பர் நடுவி தெனப்புல்லுங்
காந்தட் கிவரும் கருவிளம் பூக்கொள்ளும்
மாந்தளிர் கையில் தடவரு மாமயில்
பூம்பொழி னோக்கிப் புகுவன பின்செல்லுந்
தோளெனச் சென்று துளங்கொளி வேய்தொடு
நீள்கதுப் பிஃதென நீர் அறல் உட்புகும்".

என்றாற் போல்வன.

மறத்தல் - பித்தாதல். மயக்கமாவது - மோகித்தல். சாக்காடு - சாதல், இவற்றுள் சாதல் பத்தாம். அவத்தையாதலால், ஒழிந்த எட்டுக் களவு நிகழ்தற்குக் காரணமாம் என்று கொள்க. இதுதலைமகட்கும் தலைமகற்கும் ஒக்கும். இவற்றிற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க.


1. `என்றச்.'

2. "இவை சிறப்புடைய எனவே களவு சிறப்புடைத்தாம். இவை கற்பிற்கு ஆகா. இருவர்க்கும் இவை தடுமாறி வருதலின் `மரபினவை' எனப் பன்மை கூறினார்" . (நச்சி.)

3. `அச்சமு நாணும் பெண்பாலான '.

4. என.