என்-எனின், இஃது இயற்கைப் புணர்ச்சிக்குரியதொரு திறன் உணர்த்துதல் நுதலிற்று. தனியினால் தலைமகளை யெதிர்ப்பட்ட தலைமகன் தனது பெருமையும் அறிவும் நீக்கி வேட்கை மீதூரப்புணர்ச்சி வேண்டினானாயினும், தலைமகள் மாட்டு நிற்கும் அச்சமும் நாணும் மடனும் நீக்குதலும் வேண்டுமென்றே4 அவை நீங்குதற்பொருட்டு இவையெல்லாம் நிகழுமென்பது. உலகத்துள்ளார் இலக்கணமெல்லாம் உரைக்கின்றாராகலின், இவ்வாசிரியர் உரைக்கின்றவாற்றான் நிகழ்தல் பெரும்பான்மையாகவும். "சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி " (தொல். கள்வியல் -11) என ஓதுதலின், இவையெல்லாம் நிகழ்தலின்றிச் சிறுபான்மை வேட்கை மிகுதியாற் புணர்ச்சி கடிதின் முடியவும் பெறுமெனவுங் கொள்க. முன்னிலையாக்கல் என்பது - காமக் குறிப்புண்மை அறிந்த தலைமகன் வேட்கையாற் சாரநினைத்தவழித் தலைமகளும் வேட்கைக் குறிப்புடையாளாயினும் குலத்தின் வழி வந்த இயற்கையன்மையான் நாணமும் அச்சமும் 5மீதுர அக் குறிப்பில்லாதாரைப் போல் நின்றவழி அவளை முன்னிலையாகப் படுத்துச் சில கூறுதல். "ஒள்ளிழை மகளிரோ டோரையும் ஆடாய் வள்ளிதழ் நெய்தற் றொடலையும்6புனையாய் விரிபூங் கானல் ஒருசிறை நின்றோய் யாரை யோநிற் றொழுதனம் வினவுதும் கண்டார் தண்டா நலத்தை தெண்டிரைப் பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ இருங்கழி 7மருங்கின் நிலைபெற் றனையோ சொல்இனி மடந்தை என்றனென் அதன்எதிர் முள்ளெயிற்று முறுவலுந் திறந்தன பல்லிதழ் உண்கணும் பரந்தவால் பனியே." (நற்றிணை-155) சொல்வழிப்படுத்த லாவது - தான் சொல்லுகின்ற சொல்லின்வழி அவள் நிற்குமாறு படுத்துக் கூறுதல். "சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின் திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக் காமங்8 கைம்மிகின் தாங்குதல் எளிதோ கொடுங்கேழ் இரும்புறம் நடுங்கக் குத்திப் புலிவிளை யாடிய 9புலவுநாறு வேழத்தின் தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் கண்ணே கதவ அல்ல நண்ணார் ஆண்டலை மதில ராகவும் முரசுகொண்டு ஒம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூடல் அன்னநின் கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே. " (நற்றிணை-39) நன்னய முரைத்த லாவது - தலைமகளினது நலத்தினை யுரைத்தல். " சேரல் மடவன்னஞ் சேரல் நடையொவ்வாய் சேரல் மடவன்னஞ் சேரல் நடையொவ்வாய் ஊர்திரை வேலி யுழக்கித் திரிவாள்பின் சேரல் மடவன்னஞ் சேரல் நடையொவ்வாய்". (சிலப்.கானல் 23) நகைநனி யுறாஅ அந்நிலை யறித லாவது - தலைமகன் தன் நன்னய முரைத்தலைக் கேட்ட தலைவிக்கு இயல்பாக அகத்து உளவாகும் மகிழ்வால் புறந்தோன்றும் முறுவற்குறிப்பு மிக்குத்தோன்றா அந்நிலையினைத் தலைவன் அறிதல். " மாண்இழை பேதை நாறிருங் கூந்தல் ஆணமும் இல்லாள் நீர்உறை சூருடைச் சிலம்பிற் கணங்காய் முயன்ற செறியியல் நொதுமல் நோக்கைக் காண்மோ நெஞ்சே வறிதால் முறுவற் கெழுமிய நுடங்குமென் பணைவேய் சிறுகுடி யோளே." மெலிவு விளக்குறுத்த லாவது-தலைவன் அகத்துறும் நோயாற் புறத்து நிகழும் தளர்வினைக் குறிப்பான் எடுத்துக்கூறலும். உதாரணம் வந்துழிக் காண்க. குறிப்பாவன : புறத்துறுப்பா யவர்க் கின்றியமையாதன. தன்னிலை யுரைத்த லாவது-அப்புறநிகழ்ச்சியின் பொலி விழவைக் கண்ட தலைமகள் மாட்டுத் தலைவன் தன் உள்ள வேட்கை மீதூர்வினை நிலைப்படக் கூறுதல். " சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின்" என்னும் நற்றிணைப் பாட்டுள், "காமங் கைம்மிகில் தாங்குதல் எளிதோ .... ...... ..... .... .... கடைமணி சிவந்தநின்10 கண்ணே கதவ அல்ல". (நற்றிணை. 39) எனத் தன்னிலை யுரைத்தவாறு காண்க. தெளிவு அகப்படுத்த லாவது - தலைவன் முன்னிலையாக்கல் முதலியன கூறிப் பின்னர் இயற்கைப் புணர்ச்சியினை விழைந்து நின்றானாக, அப்புணர்ச்சியினைக் கூறுவார் முன்னம் ஒத்த பண்புடைமை உள்ளத்து இருவர்மாட்டும் வேண்டுதலின் தலைமகள் பண்பினைத் தலைவன் அறிந்து அத்தெளிவைத் தன்னகப் படுத்துத் தேர்தல். "யாயும் ஞாயும் யாரா கியரோ" என்னும் குறுந்தொகைப் பாட்டுள், "அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே". (குறுந்.40) என இயற்கைப்புணர்ச்சி முன்னர்த் தலைவன் தலைவியர் உள்ளம் ஒத்த பண்பினைக் கூறியவாறு காண்க. இதுகாறும் இயற்கைப் புணர்ச்சிக்குரிய திறன்கூறி, மேல் இயற்கைப் புணர்ச்சி நிகழுமாறு கூறுகின்றார். அஃதேல், தன்னிலையுரைத்தலைத் தெளிவகப்படுத்தலுடன் இணைத்து மெய்யுறுபுணர்ச்சியாக்கிய பின்னர்த் தோன்றுந் துறையாகப் படுத்தாலோ எனின், அது சான்றோர் வழக்கின்றாதலானும், மெய்யுறுபுணர்ச்சி முன், "மெய்தொட்டுப் பயிறல்" (களவியல்.11) முதலியன யாண்டும் நிகழ்ந்தே தலைவிக்கு மெய்யுறுபுணர்ச்சி நிகழுமாதலானும் அஃதன்றென்க.
1. "இனி வேட்கை யொருதலை (தொல். பொருள். 100) என்னும் சூத்திரத்திற் கூறியவற்றை மெய்யுறு புணர்ச்சிமேல் நிகழ்த்துதற்கு அவத்தை கூறினார் என்றும், இச் சூத்திரத்தைத் தலைவியை நோக்கி முன்னிலையாக்கல் முதலியன கூறிப் பின்னர் இயற்கைப்புணர்ச்சி புணருமென்றும் கூறுவாரும் உளர், அவர் அறியார். என்னை? ஈண்டு அவத்தை கூறிப் பின்னர்ப் புணர்ச்சி நிகழும் எனின் ஆண்டுக் கூறிய மெய்ப்பாடு பன்னிரண்டும் வேண்டாவாம், அன்றியும் ஆறாம் அவதி கடந்து வருவன அகம் அன்மை மெய்ப்பாட்டியலில் கூறலிற் பத்தாம் அவத்தையாகிய சாக்காடெய்தி மெய்யுறு புணர்ச்சி நடத்தல் பொருந்தாமை உணர்க. இனி, தலைவியை முன்னிலையாக்கல் முதலியன கூறிப் பின்னர்ப் புணரும் எனின் முன்னர்க் `கூட்டியுரைக்கும் குறிப் புரையாகும் ' எனக் கண்ணாற் கூறிக் கூடும் என்றலும் `இரு கையும் எடுத்தல் எனப் பின்பு கூறுதலும் பொருந்தாதாம். " (நச்சி) (பாடம்) 2. உறாஅது. 3. தந்நிலை. 4. வேண்டுமென்றே. 5. மீதூர நின்றார். (பாடம்) 6. புரியாய். 7. மருங்கினிலை 8. கைமிக்குற்றாத லெளிதோ 9. புகர்முக. 21 ஆம் பக்கம் காண்க.
|