என்-எனின், களவிற் கூட்டம் நான்கினிடத்தும் தலைவன் கூற்று நிகழுமாறும் காதல்மிக்கு ஆற்றாமை கையிகப்பின் தலைவனாம் இயலும் கூறுதல் நுதலிற்று. மெய்தொட்டுப் பயிறலாவது - பெருமையும் உரனுமுடைய தலைமகன் தெளிவகப்படுத்தியது காரணமாகக் காதல் வெள்ளம் புரண்டோடத் தலைவியின் மெய்யைத் தீண்டிப் பயிறல். "தீண்டலும் இயைவது கொல்லோ மாண்ட வில்லுடை 1விளையர் கல்லிடுபு எடுத்த நனந்தலைக் கானத்து இனந்தலைப் பிரிந்த புன்கண் மடமான் நேர்படத் தன் ஐயர் சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக் குருதியொடு பறித்த செங்கோல் வாளி மாறுகண் 2 டன்ன உண்கண் நாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே . " ( குறுந் . 272) பொய் பாராட்ட லாவது - தலைவியின் ஐம்பால் முதலிய கடை குழன்று சிதைவின்றேனும் அஃதுற்றதாக மருங்குசென்று தொட்டான் ஒரு காரணம் பொய்யாகப் படைத்து உரைத்துப் பாராட்டல் . "கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் ஐயர் உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும் மிடல்புக் கடங்காத வெம்முலையோ பாரம் இடர்புக்கிடுகும் இடையிழவல் கண்டாய் . " (சிலப் கானல் . 17 ) இடம்பெற்றுத் தழாஅல் ஆவது - பொய்பாராட்டல் காரணமாத் தலைவிமாட்டு அணிமையிடம் பெற்றுத் தழுவக்கூறல் . உதாரணம் : "கொல்யானை வெண்மருப்பும் கொல்வல் புலியதளும் நல்லானை 3 நின்னையர் கூட்டுண்டு - செல்வார்தாம் ஓர் அம்பினானெய்து போக்குவர்யான் போகாமை ஈர் அம்பி னானெய்தாய் இன்று". ( திணைமாலை . 22 ) இடையூறு கிளத்த லாவது - நாண் மடன் நிலைக்களனாகக் கொண்ட தலைவி தன் அறிவு நலன் இழந்து ஒன்றும் அறியாது உயிர்த்தனள் . அஃது ஒக்குமோ எனின் ஒக்கும் . புதிதாய்ப் புக்கார் , ஊற்றுணர்வு என்றும் பயிலாத தம் மெல்லியல் மெய்யிற்பட அறிவிழப்பினும் 4உள்நெக்கு உயிர்க்கும் என்க . அது பற்றிப் புலையன் தொடு தீம்பால் போல் காதல்கூரக் கொம்பானும் கொடியானும் சார்ந்தாளைத் தலைவன் இப்பொழுது இவ்வூற்றின்பிற்கு இடையூறாய் நின்மனத் தகத்து நிகழ்ந்தவை யாவென வினவுதலும் . நீடுநினைந்திரங்க லாவது - இருவர் இயலும் ஒருங்கு இணைந்தும் தலைவிபெருநாணால் , பால்வழி உறுகவென எண்ணிமாற்றமுங் குறியுங் காட்டாது கண்புதைப்பாளைத் தலைவன் புறம் ஓச்சி நிற்கவும் ஆண்டும் கலக்கலாம் பொழுது கூடாமைக்கு நினைந்து இரங்கல். கூடுதலுறுத லாவது - இங்ஙனமாய்க் காட்சி நிகழ்வின் பின்னர்ப் புணர்ச்சி எய்தலும். இதுவரை இயற்கைப்புணர்ச்சியாங் காரணங்கூறிக், கூடுதலுறுதலால் மெய்யுறு புணர்ச்சி கூறினார். இவற்றிற்குச் செய்யுள்: "விழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு." (குறள். 1108) இது கூடுதலுறுதல். பிற வந்துழிக் காண்க. சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி என்பது-இயற்கைப் புணர்ச்சிக்குக் களனாக மேற்கூறப்பட்டவற்றுடன் அவ்வின்பந் திளைத்தலையும் விரைவாக ஒன்றாய்ப் பெற்றவிடத்து. இத்தெய்வப் புணர்ச்சிக்குப் பொருள் கூறுங்கால், பயிறல், பாராட்டல், தழாஅல், கிளத்தல், இரங்கல், உறுதல், நுகர்ச்சி, தேற்றம் என்று சொல்லப்பட்ட இருநான்கு கிளவியும் என எண்ணப்படுத்துக. " மெய்தொட்டுப் பயிறல்" முதலாகக் "கூடுதலுறுதல்" வரை இயற்கைப் புணர்ச்சிக்கே உரிய கூறி, "சொல்லிய நுகர்ச்சி" முதல் "இருநான்கு கிளவி " வரை இடந் தலைப்பாடும் சேர்த்து உணர்த்தினார். அற்றாயின் நுகர்ச்சியின் தேற்றமும் இயற்கைப் புணர்ச்சியன்றோ, இடந்தலைப் பாடாமாறு என்னையெனின், நன்று கடாயினாய். மெய்யுறு புணர்ச்சியினைப் பால் கூட்டும் நெறிவழிப்பட்டுப் பெற்றார்க்கு மெய்தொட்டுப்பயிறல் முதல் அறு துறையே இன்றியமையாத் துறையாக, ஏனைய இரண்டும் இடந்தலைப் பாட்டிற்கும் சேர்ந்த துறையாகலின், பொதுப்பட இரண்டற்கும் நடுவே வைத்து செப்பம் ஆக்கினாரென்க. நுகர்ச்சியும் தேற்றமும் எனப் பிரித்துக் கூட்டுக. தீராத் தேற்ற மாவது-இயற்கைப் புணர்ச்சியுடன் முடியாத தெளிவு. "வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள்." (குறள்.1005) இஃது இயற்கைப் புணர்ச்சித் துறையன்று ; இடந்தலைப்பாட்டின் கண் தலைமகன் கூறியது ; நுகர்ச்சி பெற்றது. "கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள". (குறள்-1101) என்பதோ எனின், இயற்கைப் புணர்ச்சிக்கண் நுகர்ச்சி யுற்றமை கூறிற்று என்க. "எம்மணங் கினவே மகிழ்ந முன்றில் நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறி அயர் களந்தொறுஞ் செந்நெல் வான்பொரி சிதறி அன்ன எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை நேர்இறை முன்கை பற்றிச் சூரர மகளிரோ டுற்ற சூளே." (குறுந்.53) இஃது இயற்கைப்புணர்ச்சிப் பின்றைச் சொற்ற தீராத் தேற்றவுரை "இன்னிசை யுருமொடு" என்னும் அகப்பாட்டுள், "நின்மார் படைதலின் இனிதா கின்றே நும்மில் புலம்பினும் 5 உள்ளுதோறும் நலியும்". (அகம் 58) என்றது இடந்தலைப்பாட்டில் நேர்ந்த தேற்றம். (நற்றிணை. 39) "பேராச் சிறப்பின்" எட்டு என்றல். பெரும் சிறப்பினை ஆறு என்றலை எடுத்தோத்தாற் காட்டிநின்றது. இதுவரை இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும், மேல் `வாயில் பெட்பினும்' என்னுமளவும் பாங்கற் கூட்டம் ; மேல் தொடர்பவை தோழியிற் கூட்டம். பெற்றவழி மகிழ்ச்சியும் என்பது - இடந்தலைப் பாட்டினை யொட்டி நிகழும் இன்பினைப் பெற்றவழி அகத்துத் தோற்றும் பெருமகிழ்வும். "6" நீங்கின் தெறூஉங் குறுகுங்கால் தண்ணென்னுந் தீயாண்டுப் பெற்றாள் இவள்." (குறள்.1104) "ஒடுங்கீ ரோதி ஒண்ணுதற் குறுமகள் நறுந்தண் நீர ளாரணங் கினளே இனையள் ஆன்றவட் புனையளவு அறியேன் சிலமெல் லியவே கிளவி அனைமெல் லியல்யா முயங்குங் காலே. " (குறுந். 70) இவை புணர்ச்சியான் மகிழ்ந்ததற்குச் செய்யுட்கள். பிரிந்தவழிக் கலங்கலாவது- இவ்வாறு கூடின தலைமகள் பிரிந்தவழிக் கலக்க முறுதலும் என்றவாறு. "என்றும் இனிய ளாயினும் பிரிதல் என்றும் இன்னாள் அளறே நெஞ்சும் பனிமருத்து விளைக்கும் பரூஉக்கண் இளமுலைப் படுசாந்து சிதைய முயங்குஞ் சிறுகுடிக் கானவன் பெருமட மகளே". என வரும். 7இத்துணையும் இடந்தலைப்பாடு, பெற்றவழி மகிழ்தலும் பிரிந்த வழிக் கலங்கலும் பாங்கற் கூட்டத்தினும் தோழியிற் கூட்டத்தினும் நிகழும். நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் என்பது - காம நுகர்ச்சி யொன்றனையும் நினையாது இவளாலே நமக்கு இல்லறம் இனிது நடக்குமென்று உட்கொடலும் . 8நிற்பவை - இல்லற வினை. "தேரோன் தெறுகதிர் மழுங்கினுந் திங்கள் தீரா வெம்மையொடு திசைநடுக்கு உறுப்பினும் பெயராப் பெற்றியில் திரியாச் சீர்சால் குலத்தில் திரியாக் கொள்கையுங் கொள்கையொடு நலத்தில் திரியா நாட்டமும் உடையோய் கண்டத னளவையிற் கலங்குதி யெனின்இம் மண்திணி கிடக்கை மாநிலம் உண்டெனக் கருதி உணரலன் யானே." இது நிற்பவை நினைஇக் கழறியது. "இடிக்குங் கேளிர் நுங்குறை யாக நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில் கையில் ஊமன் கண்ணிற் கரக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் 9நொண்டு கொளற்கரிதே. " (குறுந் 58) இது நிகழ்பவை உரைத்தது. 10குற்றங்காட்டிய வாயிலாவது - தலைவன் மாட்டுச் சோர்வானும் காதல் மிகுதியானும் நேர்வுற்ற பழிபாவங்களை எடுத்துக்காட்டும் பாங்கன். பெட்பினும்- அத்தகைய பாங்கன் இவ்வியல் பண்டைப் பால்வழியது என எண்ணி இவ்வாறு தலைமகன் மறுத்தவழி அதற் குடன்படல் அவ்வழி, நின்னாற் காணப்பட்டாள் எவ்விடத் தாள்? எத்தன்மையாள்? எனப் பாங்கன் வினாவுதலும், அதற்குத் தலைமகன் இடமும் உருவுங் கூறுதலும் , அவ்வழிப் பாங்கன் சென்று காண்டலும் , மீண்டு தலைமகற்கு அவள் நிலைமை கூறலுமெல்லாம் உளவாம். அவ்வழிப் பாங்கன் வினாதலும் தலைமகன் உரைத்தனவும் உளவாம். பாங்கன் வினாயதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. அவ்வழித் தலைமகன் உரைத்தற்குச் செய்யுள் :-- "எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப புலவர் தோழ கேளாய் அத்தை மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல் புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே. " (குறுந்-129) " கழைபாடு இரங்கப் பல்லியங் கறங்க ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று அதவத் தீங்கனி அன்ன செம்முகத் 11துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக் 12 கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுந்து குறக்குறு மாக்கள் தாளங் கொட்டுமக் குன்றகத் ததுவே கொளுமிளைச் சீறூர் சீறூ ரோளே நாறுமயிர்க் கொடிச்சி கொடிச்சி கையகத்து வேபிறர் விடுத்தற் காகாது பிணித்தஎன் நெஞ்சே . " ( நற்றிணை - 95) இன்னும் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் வரைந் தெய்தல் வேண்டிக் கூறினவுங் கொள்க. "முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே கிளைஇய குரலே கிழக்குவீழ்ந் தனவே 13செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின சுணங்குஞ் சிலதோன் றினவே14 அணங்குதற்கு யான்தன் அறிவலே தானறி யலளே யாங்கா குவள்கொல் தானே பெருமுது செல்வன் ஒருமட மகளே". ( குறுத் - 337) [ இது பாங்கன் நின்னை அணங்காக்கியாள் எவ்விடத்தவள் எவ்வியலினள் என்று வினாய் அறிந்தது.] இவ்வாறு கேட்ட பாங்கன் அவ்வழிச் சென்று கண்டதற்குச் செய்யுள் : "இரவி னானும் இன்துயில் அறியாது அரவுறு துயரம் எய்துப தொண்டித் 15தண்ணறு நெய்த னாறும் பின்னிருங் கூந்தல் அணங்குற் றோரே." ( ஐங் . 173) என வரும் . இச் சூத்திரத்துள் கூற்று 16 வரையறுத்துணர்த்தாமை பாங்கற் கூற்றும் அடங்கற்குப் போலும் . பெட்ட வாயில்பெற் றிரவு வலியுறுப்பினும் என்பது மேற்சொல்லிய வாற்றான் உடம்பட்ட பாங்கனால் தலைமகளைப் பெற்றுப் பின்னும் வரைந்தெய்த லாற்றாது களவிற் புணர்ச்சி வேண்டித் தோழியை இரந்து பின்நின்று கூட்டக் கூடுவன் என்னும் உள்ளத்தனாய் அவ்விரத்தலை வலியுறுத்தினும் என்றவாறு . வலியுறுத்தலாவது , தான் வழிமொழிந்தது யாது தான் அவ்வாறு செய்குவல் என்றமை . பெட்ட வாயிலால் தலைமகளைக் கண்டு கூறியதற்குச் செய்யுள் : " கடல்புக் குயிர்கொன்று வாழ்வார்நின் ஐயர் உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும் மிடல்புக் கடங்காத வெம்முலையோ பாரம் 17இடர்புக் கிடுகுமிடை யிழவல் கண்டாய்". ( சிலப் . கானல் . 17 ) இன்னும் பெட்ட வாயில் பெற்று என்பதற்கு இரட்டுற மொழிதல் என்பதனால் தலைமகள் தான் விரும்பப்பட்ட தோழியாகி எமக்கு வாயில் நேர்வாள் இவள் எனப்பெற்றுப் பின்னிரந்து குறையுற நினைப்பினும் என்றுமாம் . அதற்குச் செய்யுள்: "தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் புணைகை விட்டுப் புனலோ டொழுகின் ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந் உறழுங் கொழுங்கடை மழைக்கண் துளிதலைத் தலைஇய தளிர்அன் னோளே". (குறுந்.222) இரவு வலியுறுத்தற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. "கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம் வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப் புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப் பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்துப் பந்தொடு பெயரும் பிரிவி லாட்டி அருளினும் அருளா ளாயினும் பெரிதழிந்து பின்னிலை18 முனியல்மா நெஞ்சே என்னதூஉம் அருந்துயர் அவலந் தீர்க்கும் மருந்து பிழிதில்லையான் உற்ற நோய்க்கே . " (நற்றிணை.140) என்னும் பாட்டும் ஆம் . இத்துணையும் பாங்கற்கூட்டம் . ஊரும் ... பகுதியும் என்பது - ஊராயினும் பேராயினும் கெடுதியாயினும் பிறவாயினும் நீர்மையினால் தன்குறிப்புத் தோன்றக் கூறித் தலைமகன் தோழியைக் குறையுறும் பகுதியும் உண்டு என்றவாறு . அவற்றுள் ஊர்வினாயதற்குச் செய்யுள்:" அருவி ஆர்க்கும் பெருவரை நண்ணிக் கன்றுகால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப்19 பெரும்பழங் குழவிச் சேதா மாந்தி அயலது வேய்பயில் இறும்பின் ஆம்அறல் பருகும் பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச் சொல்லவுஞ் சொல்லீர் ஆயிற் கல்லெனக் கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த செங்கேழ் ஆடிய செழுங்குரற் சிறுதினைக் கொய்புனங் காவலும் நுமதோ கோடேந் தல்குல் நீள்தோ ளீரே". ( நற்றிணை - 213 ) பெயர் வினாயதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டு கொள்க , கெடுதி வினாயதற்குச் செய்யுள் : " நறைபரந்த 20 சாந்தம் அறிஎறிந்து நாளால் உறையெதிர்ந்து வித்திஊழ் ஏனல் - பிறையெதிர்ந்த தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ ஏமரை போந்தன ஈண்டு." ( திணைமாலை . 1 ) 21 "இல்லுடைக் கிழமை யெம்மொடு புணரில் தீதும் உண்டோ மாத ரீரே . " என்றது பிறவாறு வினாயது. பிறவுமன்ன. தோழி குறை ... 22 இடனுமா ருண்டே என்பது - தோழி குறையைத் தலைமகளைச் சார்த்தி மெய்யுறக் கூறுதலும் , அமையா திரப்பினும் மற்றைய வழியும் , சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினும் , அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கிற்கேடும் பீடும் கூறுதலின் நீக்கலினாகிய நிலைமையும் நோக்கி மடல்மா கூறுதலும் உண்டு தலைமகன்கண் என்றவாறு . தலைமகன்கண் என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. உம்மையாற் பிறகூறுதலு முண்டென்றவாறு . புணர்ச்சி நிமித்தமாகத் தலைமகன் இரத்தலுங் குறையுறுதலும் மடலேறுவல் எனக் கூறுதலும் பெறுமென்றவாறு .ஈண்டு , குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறல் என்பது தோழி கூற்றுள் அருமையி னகற்சி யென்று ஓதப்பட்டது . தண்டாதிரத்தலாவது - தலைமகன் பலகாலுஞ் சென்று இரத்தல் . மற்றைய வழி என்பது - பின்வரவென்றல் முதலாயின . சொல்லவட் சார்த்தலிற் புல்லியவகை என்பது - முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துணர்த்தலென ஓதப்பட்டது. அறிந்தோவயர்ப் பென்பது - பேதைமை யூட்டல் என ஓதப்பட்டது . கேடு கூறுதலாவது - உலகுரைத் தொழிப்பினும் என ஓதப்பட்டது . பீடுகூறுதலாவது - பெருமையிற் பெயர்ப்பினும் என ஓதப்பட்டது . நீக்கலினாகிய நிலைமை என்பது - அஞ்சி அச்சுறுத்த லென ஓதப்பட்டது. இவையெல்லாந் தோழி கூற்றினுட் காணப் படும். தோழியைக் குறையுறும் பகுதி வருமாறு:-" தோளுங் கூந்தலும் பலபா ராட்டி வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோற் குட்டுவன் தொண்டி அன்ன எற்கண்டு மயங்கிநீ23 நல்காக் காலே ". ( ஐங்குறு - 178 ) இனி மடலேறுவல் என்பதற்குச் செய்யுள்: "மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகின் ஆர்க்கவும் படுப பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே." (குறுந்-17) அவ்வழித் தலைமகன் கூறிய சொற்கேட்டு, இஃது அறிவும் அருளும் நாணமும் உடையார் செய்யார் எனக் கூறியவழித் தலைமகன் கூறியதற்குச் செய்யுள் : "நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்". (குறள்-1133) எனவும், 24"அறிகிலா ரெல்லாரும் என்றேயென் காமம் மறுகில் மறுகும் மருண்டு" (குறள்-1139) எனவும் வரும். பிறவு மன்ன. மடல்மா கூறாது பிற கூறியதற்குச் செய்யுள் :- "பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும் பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவள் உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் 25 அறியார் முறையுடை அரசன் செங்கோல் வையத்து யான்தற் கடவின் யாங்கா வதுகொல் பெரிதும் பேதை மன்ற அளிதோ தானேயிவ் அழுங்கல் ஊரே." (குறுந்-276) இவ்வாறு இரந்து பின்னிற்றலும் மடலேறுவல் என்றலும் கைக்கிளை பெருந்திணைப் பாற்படுமோ எனின், அவ்வாறு வருவன அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாமாறு வருகின்ற சூத்திரத்தின் விளங்கும். (11)
(பாடம்) 1. இளையர். 2. மாறுகொண்.(பாடம்) 3. நல்யாணர் . 4. `உண்நொக்கு' (பாடம்)5. புலம்பான். 6. 98 ஆம் சூத்திரவுரையில் `நன்னயமுரைத்தல்' என்பதன் கீழுள்ள `சேரல் மடவன்னம்' என்ற செய்யுளின் இறுதியடியிலிருந்து 99 ஆம் சூத்திரவுரையில் `பெற்றவழி மகிழ்ச்சியும்' என்பதன் கீழுள்ள 'நீங்கிற் றெறூஉம்' என்னும் செய்யுள் வரையும் காணும் பகுதி ஏட்டுப் பிரதியிற் காணப்பெறவில்லை; காலஞ்சென்ற த.மு. சொர்ணம்பிள்ளையவர்களுடைய கடிதப் பிரதியில் மாத்திரம் இருந்தது ; நச்சினார்க்கினியரது உரையினின்றும் எடுத்துச் சேர்க்கப்பட்டுள்ளது எனக் கருதுதற்கு இடமுண்டு. இதன்பின்னர் ` ஒடுங்கீரோதி ' என்பதிலிருந்து 100 ஆம் சூத்திரவுரை முடியவுள்ள பகுதியிற் பெரும்பாலும் ஏட்டுப் பிரதியிற் பலவாறாகப் பிறழ்ந்து காணப்படுகின்றது. இது பொருட்டொடர்பு நோக்கி யொருவாறு செப்பஞ் செய்யப் பெற்றுள்ளது. 7. இவ்விரண்டு துறையும் இடந்தலைப் பாட்டுக்கும் ஒக்குமன்றோ வெனின் பெற்றுழி மகிழ்தலும் பிரிந்துழிக் கலங்கலும் என்பன எந்நிலத்தார்க்கும் எவ்வொழிக்கினுக்கும் ஏற்குமாகலின் ஒக்கும். மேல, இடந்தலைப் பாட்டுக்கும் பாங்கற்கூட்டம் பாங்கியிற் கூட்டம் என்பனவற்றுக்கும் கொள்க. (த.மு.சொ.) 8. இது தொடங்கி `இது நிற்பவை நினைஇக் கழறியது' என்பது முடியவுள்ளது. (த.மு.செ) (பாடம்)9. நோன்றுகொளற். (பாடம்)10. இது தொடங்கி `பண்டைப்பால் வழியது என எண்ணித்' என்பது முடியவுள்ளது. (த.மு.சொ) 11. துய்தலை. 12. பறைக்கணிரும் பொறை. 13. செறிமுறை. 14. அணங்கெனதா. (பாடம்)15. தண்ணுறு. 16. வரையாதோதிற்றுப். 17. இடர்புக்கு மின்னிடையே. 18. முன்னிலை. 19. கொடுஞ்சினைப். (பாடம்)20. நறைபடர். 21. இது தொடங்கி ` பிறவுமன்ன ' என்பது முடியவுள்ளது . ( த.மு. சொ. ) 22. இனி இடனும் என்ற உம்மையைப் பிரித்து நிறீஇ இரு நான்கு கிளவியும் மகிழ்ச்சியும் கலங்கலும் கூறும் இடனும் உண்டு , உரைப்பினும் பெட்பினும் உவப்பினும் இரப்பினும் வகையினுங் கூறும் இடனும் உண்டு , மெய்யுறக் கூறலும் , பீடுங் கூறலும் உண்டென முடிக்க . ( நச்சி . ) (பாடம்)23. நயந்துநீ. 24. அறிவில்லார். 25. அறியாது.
|