4. புணரியல்

[எழுத்துக்களின் புணர்ச்சி யிலக்கணம் உணர்த்துவது]

இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், மொழிகள், (மேற் செய்கை யோத்துக்களுள்) புணர்தற்குரிய கருவியின் இயல்பு கூறினமையின் புணரியல் எனப்பட்டது. மேல் மொழி மரபிற் கூறிய மொழிகள் புணருமாறு உணர்த்தினமையின் மொழி மரபினோடு இயைபுடைத் தாயிற்று.

1. மொழிகளின் முதலும் ஈறும்

மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்துக்கள்

104மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்தின்
இரண்டுதலை யிட்ட முதலா கிருபஃது
அறுநான் கீற்றொடு நெறிநின் றியலும்
எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்
மெய்யே யுயிரென் றாயீரியல.

இத்தலைச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மொழிமரபினுள் முதலும் ஈறும் கூறியவழி உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் என மூன்றாய் விரிந்து நின்றதனை உயிரும் மெய்யும் என இரண்டாகத் தொகுத்தலானும், அவ்வழி இருபத்திரண்டு எழுத்து மொழிக்கு முதல், இருபத்துநான்கு எழுத்து மொழிக்கு ஈறு எனக் கூறலின், முப்பத்து மூன்று எனப்பட்ட எழுத்து நாற்பத்தாறு ஆவனபோல விரிந்ததனை அவையெல்லாம் முப்பத்து மூன்றினுள்ளனவே எனத் தொகுத்தலானும் விரிந்தது தொகுத்தல் நுதலிற்று.

மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின்-மூன்றனை முடிவிலே யிடப்பட்ட முப்பதாகிய எழுத்தினுள், இரண்டு தலையிட்ட முதல் ஆகு இருபஃது - அவ்விரண்டினை முடிவிலே யிடப்பட்ட மொழிக்கு முதலாய இருபதும் ,அறுநான்கு ஈற்றொடு நெறி நின்று இயலும் - இருபத்துநான்கு ஈற்றொடு வழக்குநெறிக்கண் நின்று நடக்கும், எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்-மூவகைமொழிக்கும் ஈறும் முதலுமாவன, மெய் உயிர் என்று அ ஈர் இயல -மெய்யும் உயிருமாகிய அவ்விரண்டு இயல் பினையுடைய.

மரம், இலை, ஆல், விள என மெய்யும் உயிரும், முதலும் ஈறும் ஆயின.1

இருபத்திரண்டு எழுத்து முதலாவன பன்னிரண்டு உயிரும் ஒன்பது உயிர்மெய்யும் மொழிமுதற் குற்றியலுகரமும் என இவை, இருபத்து நான்கு எழுத்து ஈறாவன பன்னிரண்டு உயிரும் பதினொரு புள்ளியும் ஈற்றுக் குற்றியலுகரமும் என இவை ஈற்றொடு என்பது விகாரத்தாற் றொக்கது. மெய் முதற் கூறியவதனால், நால்வகைப் புணர்ச்சியும் மெய்க்கண் நிகழுமாறு உயிர்க்கண் நிகழாதென்பது கொள்க.

(1)

1. எ - டு: மரம் என மெய்ம்முதலும் மெய் ஈறும், இலை என உயிர் முதலும் உயிர் ஈறும், ஆல் என உயிர் முதலும் மெய்யீறும் விள என மெய்ம்முதலும் உயிரீறுமாம். மொழியாக்கம் இயல்பும் விகாரமுமென இரண்டாம். உயிர் தாமே நின்று முதலும் ஈறுமாதல் இயல்பு - அவை மெய்யோடு கூடிநின்று அங்ஙனமாதல் விகாரம். (நச்)