7. புணர்ச்சியிற் பொருள் வேறுபடுமிடம்

ஒலி வேற்றுமையாற் பொருள் வேறுபடல்

143அவைதாம்
முன்னப் பொருள புணர்ச்சி வாயின்
இன்ன என்னும் எழுத்துக்கடன் இலவே.

இஃது, மேலதற்கு ஓர் புறனடை கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) அவைதாம் - மேற்சொல்லிய புணர்மொழிகள்தாம், முன்னப் பொருள - முன்னத்தினான உணரும் பொருண்மையையுடைய; புணர்ச்சிவாயின் இன்ன என்னும் எழுத்துக்கடன் இல - அவை புணர்ச்சியிடத்து இத்தகைய வென்னும் எழுத்து முறைமையை உடையவல்ல.

செம்பொன்பதின்றொடி என்றவழி, பொன்னாராய்ச்சி உள்வழிப் பொன்னெனவும், செம்பாராய்ச்சி உள்வழிச் செம்பெனவும் குறிப்பால் உணரப்பட்டது. மற்று இதன் மேல் "இசையிற்றிரிதல் நிலைதல்" என அறியுமாறு கூறினானன்றோவெனின், ஓசை என்றமையான் அஃது1 ஒலியெழுத்திற் கெனவும்,இன்னவென்னுமெழுத்துக் கடனில், என்றதனான் இது வரிவடிவிற் கெனவுங்கொள்க.

(40)

நான்காவது புணரியல் முற்றிற்று.


1. ஒலி எழுத்திற்கும் வரிவடி வெழுத்திற்கும் இலக்கணம் பின்வரும் சூத்திரங்களான் உணர்க.

(1)"இசைப்படு புள்ளியின் எழாஅல் போலச், செவிப்புலனாவ தொலியெழுத் தாகும்."

(2) "கட்புலன் இல்லாக் கடவுளைக் காட்டும், சட்டகம் போலச் செவிப்புல ஒலியை உட்கொளற் கூடுமுருபாம் வடி வெழுத்தே."