2. உயிரீறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி

இகர ஐகார ஈற்று அல்வழி முடிபு

159வேற்றுமை யல்வழி இ ஐ யென்னும்
ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைஇய1
அவைதாம்
இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்
உறழா குநவும் என்மனார் புலவர்.

இஃது, இகரவீற்றுப் பெயர்க்கும் ஐகாரவீற்றுப் பெயர்க்கும் அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) வேற்றுமை அல்வழி இ ஐ என்னும் ஈற்றுப் பெயர்க்கிளவி மூவகை நிலைய - வேற்றுமையல்லாத அல்வழியிடத்தும் இ ஐ என்னும் ஈற்றையுடைய பெயர்ச்சொற்கள் மூவகை முடிபு நிலைமையுடைய அவைதாம் இயல்பாகுநவும் வல்லெழுத்து மிகுநவும் உறழாகுநவும் என்மனார் புலவர் - அவைதாம் இயல்பாய் முடிவனவும் வல்லெழுத்து மிகுவனவும் உறழ்ச்சியாய் முடிவனவும் இவையென்று சொல்லுவர் புலவர்.

எ - டு: பருத்தி குறிது , அரை குறிது ; சிறிது , தீது , பெரிது என இவை இயல்பு . அலிக்கொற்றன் , புலிக்கொற்றன் என இவை மிகுதி . கிளி குறிது , கிளிக்குறிது , தினை குறிது , தினைக் குறிது என இவை உறழ்ச்சி .

'பெயர்க்கிளவி' மூவகை நிலைய எனவே, பெயர்க்கிளவியல்லாத கிளவி மிகுதியும் இயல்பும் என இருவகைய எனக் கொள்க. ஒல்லைக்கொண்டான் என்பது ஐகாரவீற்று வினைச்சொல் மிகுதி. இகரவீற்று மிகுதி வந்தவழிக் கண்டுகொள்க.

தில்லைச்சொல்லே, மன்னைச்சொல்லே என்றது ஐகாரவீற்றிடைச்சொல் மிகுதி. இவற்றியல்பு வந்தவழிக் கண்டுகொள்க.

கடிகா என்பது இகரவீற்று உரிச்சொல்லியல்பு. இவ்வீற்று மிகுதி வந்தவழிக் கண்டுகொள்க. பணைத்தோள் என்பது ஐகார வீற்று உரிச்சொல் மிகுதி. இவற்றியல்பு வந்தவழிக் கண்டுகொள்க.

(16)

1. (பாடம் ) நிலைய . (நச்)