இஃது, மரூஉமுடிபு கூறுதல் நுதலிற்று.
(இ-ள்) பலர் அறி சொல்முன் யாவர் என்னும் பெயரிடை வகரம் கெடுதலும் - பலரை அறியும் சொல்முன்னர் வருகின்ற யாவர் என்னும் பெயரிடையில் வகரம் கெடுதலும், ஏனை ஒன்று அறி சொல்முன் யாது என வினா இடை ஒன்றிய வகரம் வருதலும் - ஒழிந்த ஒன்றனை அறியும் சொல்முன்னர் வரும் யாது என்னும் வினா மொழியிடை உயிரொடு பொருந்திய வகரம் வருதலும், இரண்டும் மருவின் பாத்தியில் பயின்று திரியும் - இரண்டும் மரூஉக்களது முடிபினிடத்துப் பயின்று வழங்கும். எ - டு: அவர் யார் எனவும், அது யாவது எனவும் வரும். ` ஒன்றிய ' என்றதனான், வகரஉயிர்மெய் என்று கொள்க. இன்னும் அதனானே , யாரென்பதும் யாவதென்பதும் நிலைமொழியாய்ப் பிற வருமொழியொடு புணரும் வழியும் இம்முடிபு கொள்க. " யார்யார்க்கண்டே யுவப்பர் " எனவும், " யாவது நன்றென வுணரார் மாட்டும் " எனவும் வரும். ` பயின்று ' என்றதனால், பலரறிசொல்லும் ஒன்றறிசொல்லும் வருமொழியாய வழியும் இம்முடிபு கொள்ளப்படும். யாரவர், யாவதது என வரும். (30) ஐந்தாவது தொகைமரபு முற்றிற்று.
|