6. உருபியல்

உருபெழுத்துக்களின் புணர்ச்சியிலக்கணம் உணர்த்துவது

இவ்வோத்து என்ன பெயரத்தோ வெனின், உருபுகளோடு பெயர் புணரும் இயல்பு உணர்த்தினமையின், உருபியல் என்னும் பெயர்த்து. மேல் தொகுத்துப் புணர்த்த செய்கை ஈண்டு நின்றும் விரித்துப்புணர்க்கின்றாராகலின், தொகைமரபினோடு இயைபு உடைத்தாயிற்று.

1. உயிரீறுகள்

அகர ஈறு முதலியவற்றில் வேற்றுமை யுருபிற்கு இன்சாரியை

174அ ஆ உ ஊ ஏ ஒள என்னும்
அப்பா லாறன் நிலைமொழி முன்னர்
வேற்றுமை உருபிற் கின்னே சாரியை.

இத் தலைச் சூத்திரம் என் நுதலிற்றோவெனின் அகர ஆகார உகர ஊகார ஏகார ஒளகார ஈறுகளும் உருபினொடு புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) அ ஆ உ ஊ ஏ ஒள என்னும் அப்பால் ஆறன் நிலைமொழி முன்னர் - அ ஆ உ ஊ ஏ ஒள என்று சொல்லப்படுகின்ற அக் கூற்று ஆறனையும் ஈறாகவுடைய நிலைமொழிகளின் முன்னர், வேற்றுமை உருபிற்கு சாரியை இன் - வேற்றுமையுருபுகள் வருமொழியாய் வந்த நிலைமைக்கு இடைவரும் சாரியை இன் சாரியை.

எ - டு: விளவினை, விளவினோடு, விளவிற்கு, விளவினது, விளவின்கண் எனவும்; பலாவினை, பலாவினோடு எனவும் கடுவினை, கடுவினோடு எனவும்; கழூஉவினை, கழூஉவினோடு எனவும், சேவினை, சேவினோடு எனவும்; வௌவினை வௌவினோடு எனவும் கருவி அறிந்து ஒட்டுக.

(1)