நூன்மரபு

5. மயக்கம்

தனிமெய் பிற மெய்யுடன் மயங்குமாறு

23டறலள வென்னும் புள்ளி முன்னர்க்
கசப வென்னு மூவெழுத் துரிய.

இஃது, மெய்ம்மயக்கம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் - ட ற ல ள என்று சொல்லப்படும் புள்ளிகளின் முன்னர் , க ச ப என்னும் மூ எழுத்து உரிய - க ச ப என்று சொல்லப்படும் மூன்றெழுத்தும் மயங்குதற்கு உரிய.

எ - டு: கட்க , கற்க , செல்க , கொள்க எனவும் ; கட்சிறார் , கற்சிறார் , செல்சிறார் , கொள்சிறார் எனவும் ; கட்ப , கற்ப , செல்ப. கொள்ப எனவும் வரும்.

மேல் தெரியுங்காலை , என்றதனான் , இம் மெய்ம்மயக்கம் கூறுகின்ற சூத்திர மெல்லாம் பலபடியால் மயக்கம் கொள்ளச் சொல் நோக்கு உடையவெனினும், வழக்கினோடு பொருந்த ஒன்றனோடு ஒன்றன்றி மயங்காதென்பது கொள்க. மெய்ம்மயக்கம் ஒருமொழிக்கும் புணர்மொழிக்கும் பொதுவாகலின், மேற் கூறும் புணர் மொழிச் செய்கையெல்லாம் தலையாய அறிவினோரை நோக்க ஒருவாற்றாற் கூறியவாறாயிற்று.

(23)