இதுவும் அது. (இ-ள்) கொடி முன் வரின் - கொடி என்னும் சொல் பனை என்னும் சொல்முன்னர் ஐ வரின் - அவண் நிற்ப வல்லெழுத்து மிகுதி கடிநிலை இன்று - மேற்கெடுக்க எனப்பட்ட ஐகாரம் ஆண்டுக் கெடாதே நிற்ப வல்லெழுத்து மிகுதி நீக்கும் நிலைமையின்று. எ - டு : பனைக்கொடி என வரும். `கடிநிலை' என்றதனான், இவ்வீற்றுள் எடுத்தோத்தானும் இலேசினானும் அம்முச்சாரியையும் பிற சாரியையும் பெற்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. இன்னும் இதனானே உருபிற்குச் சென்ற சாரியை பொருட்குச் சென்ற வழியும் இயைபு வல்லெழுத்து வீழ்க்க. பனையின் காய், அரையின் கோடு, ஆவிரையின்கோடு எனவும்; விசையின்கோடு, ஞெமையின்கோடு, நமையின்கோடு எனவும்; தூதுணையின்காய், வழுதுணையின் காய் எனவும்; வழையின்கோடு, வழையின் பூ எனவும் வரும். `அவண்' என்றதனால், பனைத்திரள் என வல்லெழுத்துப் பேறும் கொள்க. (83)
|