நூன்மரபு

2. மாத்திரை

ஒரு மாத்திரையுடைய குற்றுயிர்

3அவற்றுள்
அ இ உ
எ ஒ வென்னும் அப்பால் ஐந்தும்
ஓரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப.

இஃது, மேற்கூறப்பட்டனவற்றிற்கு அளபும் குறியும் உணர்த்துதல் நுதலிற்று.

அவற்றுள் - மேற்கூறப்பட்ட எழுத்தினுள், அ - இ - உ - எ - ஒ என்னும் அப்பால் ஐந்தும் - அ-இ-உ-எ-ஒ என்று சொல்லப்படுகின்ற அக்கூற்று ஐந்தும், ஓர் அளபு இசைக்கும் (ஒரோவொன்று) ஓர் அளபாக இசைக்கும், குற்றெழுத்து என்ப - (அவைதாம்) குற்றெழுத்தென்னும் குறிய என்று சொல்லுவர் (புலவர்).

இவர் காரணம்பற்றியன்றிக் குறியிடார். ஆகலின், இது தன் குறுமையான் இக்குறி பெற்றது. இக் குறியை ஆண்டவாறு மேல்வந்த வழிக் கண்டுகொள்க.

(3)