இத் தலைச்சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், சார்பின் தோற்றத்து எழுத்துக்களிற் குற்றியலிகரத்தில் ஒரு மொழிக் குற்றியலிகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் உணர்த்துதல் நுதலிற்று. குற்றியலிகரம் - ஒருமொழிக் குற்றியலிகரம் , உரையசைக் கிளவிக்கு - உரையசைச் சொல்லாகிய மியா என் முதற்கு, ஆ வயின் வரூஉம் - (சினையாக ) அச்சொல் தன்னிடத்து வருகின்ற, யா என் சினைமிசை - யா என் சினைமிசை, மகரம் ஊர்ந்து நிற்றல் - வேண்டும் - மகர ஒற்றினை ஊர்ந்து நிற்றலை வேண்டும் ( ஆசிரியன் .) எ - டு: கேண்மியா எனவரும் . மியா என்னும் சொல் இடம் . மகரம் பற்றுக்கோடு . யா என்னும் சினையும் மகரம் போலக் குறுகுதற்கு ஒரு சார்பு. (1)
1. "குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்" என்பது முதல் "உருவினும் இசையினும்" என்னும் சூத்திரம் காறும், அவை தாம், என்பதன் ஒழிபு, "குன்றிசை" "ஐ ஒள" இரண்டும் "நீட்டம் என்பதன் ஒழிபு" "நெட்டெழுத் தேழே" என்பது "அவற்றுள் `அ இ உ எ'" "ஆ ஈ ஊ ஏ" என்பனவற்றின் ஒழிபு. மொழியாக்கம் அதிகாரப்பட்டமையின் ஓரெழுத்தொருமொழி என்பதும் உடன் கூறினார் . "மெய்யின் இயக்கம்" என்பது "னகர இறுவாய்" என்பதன் ஒழிபு . "தம்மியல் கிளப்பின்" என்பது முதல் "மகரத் தொடர்மொழி" என்னும் சூத்திரம் காறும் மயக்கச் சூத்திர ஒழிபு என விதந்து நூன் மரபின் ஒழிபே மொழிமரபு என்றது தொல்காப்பியச் சூத்திரவிருத்தி.
|