2. உயிரெழுத்துக்கள் பிறக்குமாறு

எல்லா உயிர்களும் பொதுவாகப் பிறக்கும் வகை

84அவ்வழிப்
பன்னீ ருயிரும் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.

இஃது, உயிரெழுத்திற்குப் பொதுப்பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று.

அ வழி - அவ்விடத்து, பன்னீர் உயிரும் தம் நிலை திரியா-பன்னிரண்டு உயிரெழுத்தும் தத்தம் நிலையில்திரியாவாய், மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும் - மிடற்றின்கட் பிறந்த வளியான் ஒலிக்கும்.

'தந்நிலை திரியா' என்றதனால், குற்றியலுகரம், குற்றியலிகரம் தந்நிலை திரியுமென்பது பெறப்பட்டது.

(2)