இது, வினைமுற்றி மீண்ட தலைவற் குரியதோர் மரபு உணர்த்திற்று. சூத்திரத்தாற் பொருள் விளங்கும். `இடைச்சுர மருங்கிற் றவிர்தலில்லை' என்பது வழியில் இடையிற்றங்காது இரவும் பகலுமாக வருமென்பது கருத்து, தங்குவானாயின் மனையாள்மாட்டு விருப்பின்றாம். உதாரணம்"இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப் புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் ஏறிய தறிந்தன் றல்லது வந்தவாறு2 நனியறிந் தன்றோ இலனே தாஅய் முயற்பறழ் உகளும் முல்லையம் புறவிற் கவைக்கதிர் வரகின் சீறூர ஆங்கண் மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ மானுரு வாகநின் மனம்பூட் டினையோ உரைமதி வாழியோ வலவ எனத்தன் வரைமருள் மார்பின் நளிப்பனன் முயங்கி மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை விருந்தேர் பெற்றனள் திருந்திழை யோளே". (அகம்.384) என வரும். பிறவு மன்ன. (53)
1. இதனை மீட்சிக்கு எல்லை கூறிய சூத்திரங்களின் பின் வையாது ஈண்டுத் துறவு கூறியதன் பின்னர் வைத்தார். இன்ப நுகர்ச்சியன்றி இருந்து அதன்மேல் இன்பம் எய்துகின்ற நிலையாமை நோக்கியும் மேலும் இன்பப்பகுதியாகிய பொருள் கூறுகின்றதற்கு அதிகாரப்படுத்தற்கும் என்றுணர்க. (தொல்.பொருள்.194.நச்சி.) (பாடம்) 2. ஏறியல்லது வந்தவாறு. கற்பியல் முற்றிற்று.
|