பொருளியல்

இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், பொருளியல் என்னும் பெயர்த்து; பொருளியல்பு உணர்த்தினமையாற் பெற்ற பெயர். என்னை பொருளியல்பு உணர்த்தியவாறு எனின், மேற்சொல்லப்பட்ட ஓத்துக்களினும் இனிச் சொல்லும் ஓத்துக்களினும் வரும் பொருளினது தன்மை யுணர்த்துதலிற் பொருளியல் உணர்த்திற்றாம்.

இதனை `ஒழிபியல்' எனினும் இழுக்காது, அகப்பொருள் புறப்பொருள் என்பன இரண்டு பொருண்மையினும் எஞ்சி நின்றன கூறினமையின்.

193இசைதிரிந் திசைப்பினும் இயையுமன்1 பொருளே
அசைதிரிந் திசையா என்மனார் புலவர்.

என்பது சூத்திரம்.

இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றே எனின், தொடர் மொழிக்கட்பொருள் இயையுமாறு உணர்த்திற்று.

இசைதிரிந்து ஒலிப்பினும் பொருள் இயையும்; அவ்வழி அச்சொற்கு அங்கமாகிய அசை திரிந்தொலியா என்றவாறு.

என்றது சொல்லொடுசொல் தொடர்வுபடும் வாய்பாட்டால் தொடராது பிறிதோர் வாய்பாட்டால் தொடுப்பினும் பொருட்டொடர்பு உண்டாயிற் பொருள் இயையும்வழி அசைச்சொற்கள் திரியாது நின்ற நிலையே பொருள்படுமா றாயிற்று.

"கார்விரி கொன்றைப் பொன்னேற் புதுமலர்த்
தாரன் மாலையன் மலைந்த2 கண்ணியன்
மார்பி னஃதே மையில் நுண்ஞாண்
நுதல திமையா நாட்டம் இகலட்டுக்
கையது கணிச்சியோடு மழுவே மூவாய்
வேலும் உண்டத் தோலா தோற்கே
ஊர்ந்த தேறே சேர்ந்தோள் உமையே
செவ்வான் அன்ன மேனி அவ்வான்
இலங்குபிறை அன்ன விலங்கு3 வால் வையெயிற்று
எரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை
முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி
மூவர் அமரரு முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொன்முறை மரபின்
வரிகிளர் வயமான் உரிவை தைஇய
யாழ்கெழு மணிமிடற் றந்தணன்
தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே."

(அகம். கடவுள் வாழ்த்து.)
இதற்குக் கொன்றையாலமைந்த தாரினனாய் மாலையனாய்க் கண்ணியனாய் நுண் ஞாண் மார்பினனாய் இமையா நாட்டத்து நுதலினனாய்க் கணிச்சியு மழுவு மூவாய் வேலும் ஏந்திய கையினனாய் யாவர்க்குந் தோலாதோனுமாய் ஏற்றினையு மூர்ந்து உமையாளையுஞ் சேர்ந்து செவ்வானன்ன மேனியையும் பிறைபோன்ற எயிற்றினையும் எரிபோன்ற சடையினையும் திங்களோடு சுடருஞ் சென்னியையும் உடையனாய் மூவாவமரர் முதலிய யாவருமறியாத் தொன்முறை மரபினனாய்ப் புலியதளையும் உடுத்த யாழ்கெழு மணிமிடற்றந்தணனது சிவானுபூதியிற் பேருலகந் தங்கிற்று எனப் பொருள் உரைக்குங் காலத்து, அதன்கண் இடைக்கிடந்த சொற்கள் முன்னொடுபின் வாய்பாடுகள் சேராதன்றே; அவ்வழி அவ் வாய்பாட்டாற் போந்த பொருளுரைப்பச் சேர்ந்தவாறும் இசை திரித்து இசைத்தவாறும் அவை தத்தம் நிலையிற் குலையாமை நின்று பொருள் பட்டவாறுங் கண்டுகொள்க.

"ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்."

(குறள். 662)
இதுவும் இரண்டென்னுந் தொகைக்கு `ஊறொராமை' எனப் பொருள் உரைக்க வேண்டும்.
(1)

(பாடம்) 1. இசையுமமுன்.

2. ததைந்த .

3. விளங்கு.